Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

பழநி அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு கோலாகல நிறைவு; ஆன்மிகப் பணியில் சிறந்து விளங்கியவர்களுக்கு விருது

பழநி: பழநியில் நடந்த அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டில் ஆன்மிகப் பணியில் சிறந்து விளங்கியவர்களுக்கு 16 பேருக்கு முருகனடியார்களின் பெயரில் விருதுகள் வழங்கப்பட்டன. தமிழ்க்கடவுள் முருகனின் மூன்றாம் படை வீடான பழநியில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நேற்றுமுன்தினம் துவங்கியது. நிறைவு நாள் விழா நேற்று காலை 9 மணிக்கு துவங்கியது. வெங்கடேச ஓதுவார் குழுவினரின் திருவேல் இறைவன் தீந்தமிழ் இசை நிகழ்ச்சி நடந்தது. 8.20 மணிக்கு முருகனும், பரதமும் எனும் தலைப்பில் நாட்டிய நிகழ்ச்சி நடந்தது. 8.40 மணிக்கு சம்பந்தம் குருக்களின் திருப்புகழ் தேனிசை நிகழ்ச்சி நடந்தது. 9 மணிக்கு டி.எம்.சவுந்தரராஜன் குழுவினரின் இறை வணக்க நிகழ்ச்சி நடந்தது.

திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் பூங்கொடி வரவேற்றுப் பேசினார். உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி துவக்க உரையாற்றினார். மாநாட்டு விழா மலரை கோவை கவுமார மடம் குமரகுருபர சுவாமிகள் வெளியிட ஐகோர்ட் நீதிபதி சுரேஷ்குமார் பெற்றுக் கொண்டார். தொடர்ந்து சத்தியவேல் முருகனார், மொரீசியஸ் தமிழ்க் கோயில்கள் கூட்டிணைப்பின் தலைவர் செங்கண் குமரா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். தொடர்ந்து தேச மங்கையற்கரசி, நித்ய மகாதேவன் உள்ளிட்டோரின் கருத்தரங்கம், இன்னிசை நிகழ்ச்சி, நாட்டுப்புற பாடல்கள், நடன நிகழ்ச்சிகள் நடந்தன.

முன்னதாக பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் தலைமையில் நடைபெற்ற கருத்தரங்கில் சுவிட்சர்லாந்தை சேர்ந்த வேலுபிள்ளை கணேஷ்குமார், இங்கிலாந்து துணைமேயர் அப்பு தாமோதரன், இலங்கையை சேர்ந்த ஆறுதிருமுருகன், கவிஞர் உமாபாரதி உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினர். இரவு 7 மணிக்கு மாநாடு நிறைவு விழா நடந்தது. இதில் சென்னை ஐகோர்ட் நீதிபதி வேல்முருகன் தமிழ்க்கடவுள் முருகனின் பெருமைகளை உலகறியும் வகையில் பறைசாற்றிய அடியார்கள், சமயப்பணி புரிந்தோர், சமய சொற்பொழிவாளர்கள், அதிகளவில் திருப்பணி மேற்கொண்டோர், ஆன்மிக மற்றும் இலக்கிய படைப்பாளர்கள் 16 பேருக்கு முருகனடியார்களின் பெயரில் விருதுகள் வழங்கினார். திருவாவடுதுறை ஆதீனம் அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் அருளாசிகள் வழங்கியபின் மாநாட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. லட்சக்கணக்கான பக்தர்கள், பொதுமக்கள் கலந்து கொண்ட இந்த 2 நாள் விழா கோலாகலமாக நிறைவு பெற்றது.

விழாவில் பழநி எம்எல்ஏ ஐ.பி.செந்தில்குமார், திண்டுக்கல் எம்பி சச்சிதானந்தம், ஆதீன பெருமக்கள், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையத்துறை முதன்மைச் செயலாளர் சந்தரமோகன், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் தர், திண்டுக்கல் கலெக்டர் பூங்கொடி, அறநிலையத்துறை கூடுதல் ஆணையர்கள் சுகுமார், திருமகள், ஹரிப்ரியா, நகராட்சித்தலைவர் உமா மகேஸ்வரி, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

விடுமுறை தினம் என்பதால் 2வது நாளான நேற்று காலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மாநாடு மற்றும் கண்காட்சியை பார்வையிட்டுச் சென்றனர். முருகனின் ஓவிய காட்சியரங்கம், 3டி திரையரங்கில் கவிஞர் பா.விஜய் இயக்கிய ‘முருகனின் பெருமைகள்’ கூறும் பாடல், ஆன்மிக நூல்களின் புத்தக கண்காட்சி, அறுபடை வீடுகளின் மெய்நிகர் காட்சி போன்றவை பக்தர்களை வெகுவாக கவர்ந்தது. பக்தர்கள் பார்வையிட கட்டணமில்லை. மேலும், காலை சிற்றுண்டி, மதிய உணவு மற்றும் இரவு உணவு ஆகியவை இலவசமாக வழங்கப்பட்டது. ஏராளமான இடங்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மற்றும் கழிப்பறை வசதி செய்யப்பட்டிருந்தது.

கண்காட்சி 5 நாள் நீட்டிப்பு

பழநி அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டில் உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி பேசுகையில், பழநி கோயிலில் பல்வேறு வளர்ச்சித் திட்ட பணிகளை அரசு மேற்கொண்டு வருகிறது. இம்மாநாட்டின் நோக்கம் முருகனின் பெருமைகளை உலகம் முழுவதும் பரப்பி முருகன் அடியார்களை ஒன்றிணைப்பதாகும். பழநிக்கு பாதயாத்திரையாக வருவோருக்கு இளைப்பாறும் மண்டபங்கள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன. பொதுமக்கள் மற்றும் பக்தர்களின் கோரிக்கையை ஏற்று இந்த கண்காட்சி, வருகிற 30ம் தேதி வரை 5 நாட்கள் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

தமிழக அரசுக்கு நீதிபதி பாராட்டு

சென்னை ஐகோர்ட் நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் மாநாட்டு மலரை வெளியிட்டு பேசுகையில், ‘‘ஒரு தமிழ் ஆன்மிக மாநாடாக, அதிலும் முருகப்பெருமானுடைய பெயரை தாங்கி நடத்துகின்ற பெருமாநாடு இதுதான் முதல் முறை. முருகன் தமிழ் கடவுள். இறையை உணர்ந்து, தமிழை அறிந்து, தமிழை உணர்ந்து, தமிழ் கடவுளான முருகனை அறிந்து, முருகனின் வீர பராக்கிரமங்களை அறிந்து, தமிழ் மொழியின் செழுமையை உணர்ந்து, முருகன் தான் தமிழ், தமிழ் தான் முருகன் என்று உணர்ந்து இன்றைக்கு இந்த மாநாட்டை நடத்திய தமிழ்நாடு அரசும், அறநிலையத்துறையும் பாராட்டுக்குரியது’’ என்றார்.

பக்தி பாடல்கள் பாடி அசத்திய சென்னை சிறுமி

மாநாட்டில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து வந்த 7 வயது சிறுமி தியா, முருகன் பாடல்களை பக்தி பரவசத்துடன் பாடினார். குழந்தை தியாவின் பாடல் பொதுமக்களையும், முருக பக்தர்களையும் வெகுவாக கவர்ந்தது. சிறுமி தியா கூறுகையில், ‘‘பெரிய, பெரிய ஆன்மிகப் பெரியவர்கள் எல்லாம் பங்கேற்ற மேடையில் எனக்கும் வாய்ப்பு அளித்த முத்தமிழ் முருகன் மாநாட்டை சிறப்பாக நடத்தி வரும் தமிழக முதல்வர் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ஆகியோருக்கு எனது நன்றி’’ என்றார்.

‘முதல் நாளிலேயே வெற்றி’

அமைச்சர் பி.கே.சேகர்பாபு நிருபர்களிடம் கூறுகையில், ‘‘இந்து சமய அறநிலையத்துறையில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து பிப். 27ல் ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட்டது. இதில் 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்த தீர்மானத்தின்படி, தமிழ் கடவுளான முருகப்பெருமானுக்கு மாநாடு நடத்தப்பட்டுள்ளது. மாநாடு முதல் நாளிலேயே வெற்றி அடைந்துள்ளது. 25 ஆயிரம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முதல் நாளிலேயே 2 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் பங்கேற்றுள்ளனர். தமிழக முதல்வர் தொட்டதெல்லாம் துலங்கும். கண் பட்டதெல்லாம் மலரும் என்பதால் இந்த மாநாடும் சிறப்பு பெறும்’’ என்றார்.

பக்தர்களுக்கு மெகா விருந்து

அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டில் கடந்த 2 நாட்களாக காலை, மாலை மற்றும் இரவு என 6 நேரம் இலவசமாக உணவுகள் வழங்கப்பட்டன. இதற்கான சமையற்பணியில் 400க்கும் மேற்பட்டோர் ஈடுபடுத்தப்பட்டனர். வெளிநாட்டினருக்கு காலை உணவாக சாஹி துக்கடா, இளநீர் இட்லி, நெய் பொடி ரோஸ்ட், பூரி, கோதுமை உப்புமா, கவுனி அரிசி அல்வா, ராப்டி மால்பூவா, ராஜஸ்தான் கிச்சடி, பில்டர் காபி, டீ, இரவு உணவாக பனங்கருப்பட்டி பருத்திப்பால், அல்வா, ரெட் சட்னி மசால் தோசை, கடாய் பன்னீர் கேப்சிகம் டிக்கா, ஐதராபாத் வெஜ் தம் புலாவ், கிரீமி புரூட் தயிர் சாதம், ஸ்வீட் பீடா, ஹாட் பாம்பே ஜாங்கிரி, பனைவெல்ல மைசூர்பா, மைசூர் மசால் தோசை, குழாப்புட்டு போன்றவை வழங்கப்பட்டது.

முக்கிய பிரமுகர்களுக்கு காலை உணவாக இளநீர் இட்லி, தஞ்சாவூர் மிளகு முந்திரி பொங்கல், கறிவேப்பிலை குழம்பு, கார்லிக் நெய் பொடி ரோஸ்ட், இடியாப்பம், குஜராத்தி கடி போன்றவை வழங்கப்பட்டது. இரவு உணவாக ஷெல் இட்லி, பூண்டு தேங்காய் பால் குழம்பு, ஆனியன் கார்லிக் குல்சா, ஐதராபாத் வெஜ் தம் புலாவ், வெஜிடபிள் பிரியாணி, மசாலா மிர்ச்சி ரொட்டி, ஆப்பம், சாமை அரிசி சாதம், மேங்கோ அச்சார் போன்றவை வழங்கப்பட்டது. பக்தர்களுக்கு மதிய உணவாக பூசணி அல்வா, சாதம், சாம்பார், கோதுமை பாயாசம், சுண்டல் வத்தக்குழம்பு, சேனை சாப்ஸ், அவல் பாயாசம், பருப்பு வடை, இஞ்சிப்புளி ஊறுகாய் வழங்கப்பட்டது.

இஸ்லாமிய பெண்கள் ஆர்வமாக பங்கேற்பு

அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டிற்கு பழநி அருகே உள்ள நெய்க்காரப்பட்டியில் இருந்து இஸ்லாமிய குடும்பத்தை சேர்ந்த பெண்கள் வந்திருந்தனர். மாநாட்டு அரங்கங்களை ஆர்வமாகப் பார்வையிட்ட பாத்திமா கூறுகையில், ‘‘நான் மாநாடுகள் எதற்கும் சென்றதில்லை. இந்த மாநாட்டை காண்பதற்காக வந்திருக்கிறேன். வேற்று மதத்தை சேர்ந்த என்னை இங்கு உள்ள பொதுமக்கள் யாரும் மாற்று மதத்தினர் என கருதாமல் அவர்களில் ஒருவராக பார்த்தனர்’’ என்றார்.

அனைவரது மத உணர்வுகளுக்கும் மதிப்பளிப்பதே திராவிட மாடல் : அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காணொலியில் பேச்சு

பழநியில் நடந்த அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டில் காணொலி காட்சி வாயிலாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று பேசியதாவது:

யாருடைய நம்பிக்கைக்கும் குறுக்கே நிற்காமல், அனைவரது மத உணர்வுகளுக்கும் மதிப்பளிப்பது தான் திராவிட மாடல் அரசு. திராவிட மாடல் அரசு அமைந்த இந்த 3 ஆண்டுகளில் மட்டும் 1,400க்கும் அதிகமான கோயில்களுக்கு கும்பாபிஷேகம் செய்யப்பட்டுள்ளது. ₹5,600 கோடி மதிப்பிலான சுமார் ஆறாயிரம் ஏக்கர் கோயில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளது. ₹3,800 கோடி மதிப்பில் 8,500 கோயில்களில் திருப்பணி நடந்து வருகிறது. அனைத்து சாதியினரையும், மகளிரையும் அர்ச்சகர் ஆக்கியவர்தான் நம்முடைய முதலமைச்சர். அன்னை தமிழில் அர்ச்சனை என்ற திட்டம் அனைத்து கோயில்களிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது‌.

தமிழ்நாட்டின் மற்ற துறைகளை போலவே இந்து சமய அறநிலையத் துறையும் இந்திய ஒன்றியத்திற்கு வழிகாட்டி வருகிறது. இப்படி அடுக்கடுக்கான சாதனைகளை செய்து விட்டுத்தான் இந்த சிறப்புக்குரிய மாநாட்டை தமிழ்நாடு அரசு நடத்துகிறது. இந்த மாநாடு ஆன்மிக மாநாடாக மட்டுமில்லாமல் தமிழர் பண்பாட்டு மாநாடாகவும் நடைபெற்று வருகிறது. அரசின் இந்த முயற்சிகளை எல்லாம் ஆன்மிக பெரியோர்களும், பக்தர்களும் பாராட்டிக் கொண்டிருக்கிறீர்கள். அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு வரலாற்றில் என்றென்றும் நிலைத்திருக்கப் போவது உறுதி. இவ்வாறு தெரிவித்தார்.

முத்தமிழ் முருகன் ஆய்வு மையம் அமைக்க பரிந்துரை; 21 தீர்மானங்கள் நிறைவேற்றம்

பழநியில் நடந்த அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டின் நிறைவு நாளான நேற்று 21 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில், முதற்கட்டமாக 143 முருகன் கோயில்களில் சுமார் ₹50 கோடி மதிப்பீட்டில் திருப்பணிகள் துவங்குவது, முருகன் கோயில்களில் பணிபுரியும் அர்ச்சகர்கள், பூசாரிகள், ஓதுவார்கள், கலைஞர்கள் மற்றும் முருகனடியார்களை சிறப்பிக்கும் வகையில் ஆண்டுதோறும் 10 பேருக்கு விருதுகள் வழங்குவது, அறுபடை வீடு கோயில்களில் முருக பக்தி இலக்கியங்களை மையப்படுத்தி திருவிழாக்கள் நடத்துவது, அறுபடை வீடு பயணம் திட்டத்தின் கீழ் பயணம் செய்யும் பக்தர்கள் எண்ணிக்கையை 1000ல் இருந்து 1500ஆக உயர்த்துவது, அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டின் நினைவாக பழநியில் ‘வேல்’ நிறுவுவது, முருகன் கோயில்களில் ஓதுவார்களை நியமனம் செய்வது, அதில் அறநிலையத்துறை சார்பில் நடத்தப்படும் ஓதுவார் பயிற்சி பள்ளி மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்குவது, முத்தமிழ் முருகன் மாநாட்டின் நிலைத்த அடையாளமாக ‘முத்தமிழ் முருகன் ஆய்வு மையம்’ அமைக்க அரசுக்கு பரிந்துரைப்பது, சித்த மருத்துவத்தை இனி வரும் காலங்களில் “தமிழர் சித்த மருத்துவம்” என்று அழைத்திட அரசுக்கு பரிந்துரைப்பது, தமிழர் சித்த மருத்துவத்தை பாதுகாக்கவும், மேம்படுத்தவும், அதனை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் சென்றிடவும் பழநியில் “தமிழர் சித்த மருத்துவ ஆராய்ச்சி மையம்” அமைத்திட அரசுக்கு பரிந்துரைப்பது உள்ளிட்ட 21 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.