Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நெம்மேலி கடல்நீரை குடிநீராக்கும் ரூ.4276.44 கோடியில் 3வது ஆலை கட்டுமான பணிகள் மீண்டும் தொடக்கம்

மாமல்லபுரம்: மாமல்லபுரம் அருகே, நெம்மேலி பேரூரில் ரூ.4276.44 கோடி மதிப்பீட்டில் 85.51 ஏக்கரில் கடல்நீரை குடிநீராக்கும் 3வது ஆலை கட்டுமான பணிகள் மழையால் தடைபட்டநிலையில், தற்போது மீண்டும் தொடங்கி போர்க்கால அடிப்படையில் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. சென்னையின் குடிநீர் பற்றாக்குறையை சமாளிக்கும் வகையில் கடந்த 2003-2004ம் ஆண்டு தொலைநோக்கு திட்டமான கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் கொண்டு வரப்ப்பட்டது.

அதன்படி, திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரில் காட்டுப்பள்ளி, செங்கல்பட்டு மாவட்டம் இசிஆர் சாலை, நெம்மேலி சூளேரிக்காடு என 2 இடங்களில் நாளொன்றுக்கு தலா 10 கோடி லிட்டர் கொள்திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் ஆலைகள் அமைக்கப்பட்டு, சென்னை மக்களின் குடிநீர் தேவைக்கு தங்கு தடையின்றி வழங்கப்பட்டு வருகிறது. இந்த 2 சுத்திகரிப்பு நிலையங்கள் சென்னையின் மொத்த குடிநீர் தேவையில் 35 சதவீதத்தை பூர்த்தி செய்து வருகிறது.

இதன் தொடர்ச்சியாக, மாமல்லபுரம் அடுத்த நெம்மேலி பேரூர் பகுதியில் இசிஆர் சாலையையொட்டி 85.51 ஏக்கர் பரப்பளவில் ரூ.4276.44 கோடி மதிப்பீட்டில் ஜப்பான் பன்னாட்டு முகமை நிதியுதவியுடன், சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியம் சார்பில் 400 மில்லியன் லிட்டர் கடல் நீரை சுத்திகரிக்கும் வகையில், 3வது ஆலை ஆசியாவிலேயே எந்த நாட்டிலும் இல்லாத வகையில் மிக பிரமாண்டமாக அமைகிறது.

இந்த, 3வது ஆலையின் கட்டுமான பணிக்கு கடந்தாண்டு ஆகஸ்ட் 21ம் தேதி தலைமை செயலகத்தில் இருந்து தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார். இந்நிலையில், 3வது ஆலையின் கட்டுமான பணிக்காக பேரூரில் பொக்லைன் இயந்திரம் மூலம் அங்குள்ள மணல் மேடுகளை சமன்படுத்தி, கட்டுமானப் பணிக்கு பள்ளம் தோண்டும் பணியும், கட்டுமான ஊழியர்கள் தங்குவதற்கு தற்காலிக தகர சீட்டில் கொட்டகை அமைக்கும் பணி தொடங்கி தீவிரமாக நடந்து வந்தது.

இதனையடுத்து, கடந்த, சில நாட்களாக மாமல்லபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்து வந்த நிலையில், கட்டுமானப் பணியில் தொய்வு ஏற்பட்டு தடைப்பட்டது. இந்நிலையில், மீண்டும் கட்டுமானப் பணிகள் தொடங்கி போர்க்கால அடிப்படையில் நடந்து வருகிறது. இப்பணிகளில், தனியார் கட்டுமான நிறுவன ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அவ்வப்போது, சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய அதிகாரிகள் நேரில் வந்து ஆய்வு செய்து பணிகளை துரிதப்படுத்துகின்றனர்.