Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கலி முற்றி எங்கெங்கும் துன்பங்களும் துயரங்களும் சூழ்ந்துள்ள இன்றைய உலகின் முக்கியத் தேவை என்ன?

இன்றைய முக்கிய தேவை அறவாளர்கள். இன்றைக்கு சாமர்த்திய சாலிகள் இருக்கிறார்கள். ஆனால், அறம் சார்ந்தும், மனிதாபிமானம் சார்ந்தும் பிறரைப் பற்றி சிந்திக்க கூடியவர்கள் இல்லை. இன்றைய இளைஞர்கள் உணர்வு மிக்கவர்கள். ஊற்றமுடையவர்கள். நுண்ணறிவு உடையவர்கள். உழைப்பாளிகள். இவர்களுக்கு சரியான வழிகாட்டிகள் இருந்து விட்டால் மிகப்பெரிய நன்மையை, அவர்களும், அவர்களைச் சார்ந்த தேசமும், உலக மும் அடையும். விவேகானந்தர் இதைத்தான் சொன்னார். தேசபக்தியும், தெய்வ பக்தியும் தன்னம்பிக்கையும் உள்ள ஒரு சில இளைஞர்கள் இருந்தால் போதும் என்றார். விவேகானந்தரைப் போன்றவர்கள் இன்றைக்கு மிகவும் தேவைப்படுகிறார்கள்.

?நம் வாழ்க்கையில் விதி விளையாடுகிறது என்பதை எப்படிப் புரிந்து கொள்வது?

- குமார், சென்னை.

ஒரு காரியத்திற்காக நீங்கள் முயற்சி செய்கிறீர்கள். காரியம் வெற்றி அடையவில்லை. இப்பொழுது ஒரு பேப்பரில் பின்வரும் கேள்விகளுக்கான பதிலை எழுதிப் பாருங்கள். தோல்விக்கு நான் காரணமா, என்னுடைய ஏற்பாடுகள் காரணாமா என்று கேட்டு, விடை எழுதுங்கள். எல்லாம் சரியாக இருந்து, காரியம் ஜெயமாகவில்லை என்றால் விதி விளையாடுகிறது என்றுதானே பொருள்.

?செருப்பணிந்து பெண்கள் வாசல் தெளித்து கோலமிடுவது சரியானதா?

- அருணாசலம், காஞ்சிபுரம்.

சரியில்லைதான். ஆனால், தங்கள் உடல்நலம் கருதி இவ்வாறு காலில் செருப்பணிந்து வாசல் தெளித்து கோலம் போடுகிறார்கள். வாசல் தெளித்து கோலம் போடுவது என்பது மகாலட்சுமியை வரவேற்பதற்காக. பூஜையறையில் எவ்வாறு நடந்து கொள்வோமோ அப்படித்தான் வாயிற்படியிலும் நடந்து கொள்ள வேண்டும். அன்ன லட்சுமியைத் தொடும்போதும் காலில் செருப்பணியக் கூடாது. ஹோட்டலில் சென்று உணவருந்துபவர்கள் கூட உணவருந்தும் சமயத்தில் காலில் உள்ள செருப்பினை கழற்றி வைத்துவிட்டுத்தான் உணவருந்த வேண்டும். அவ்வாறு செய்யும் பட்சத்தில் நிச்சயமாக உடல் ஆரோக்யம் என்பது சீராக அமையும். வாசல் தெளித்து கோலமிடும்போது செருப்பினை அணிந்திருப்பது என்பது சர்வ நிச்சயமாகத் தவறுதான். அதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

?நான் வெளிமாநிலத்தில் தங்கி வேலை செய்து வருகிறேன். வேலை முடிந்து வரும்பொழுது இரவு எட்டு மணி ஆகிவிடும். அமாவாசை, பௌர்ணமி போன்ற விரத நாட்களிலும் கடையில்தான் சாப்பிடுகிறேன். விரதம் இருக்கும் நாளில் வீட்டில் சமைத்துத்தான் சாப்பிட வேண்டும் அல்லவா? பலகாரம் மற்றும் பழங்கள் மட்டும் சாப்பிட்டு விரதம் இருக்கலாமா?

- விஜயா செல்வம், கேரளா.

இருக்கலாம். ‘செய்யும் தொழிலே தெய்வம்’ என்பதை நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் வேலைக்குச் செல்பவர் எனும் பட்சத்தில் முன்னுரிமையை செய்யும் தொழிலிற்குத்தான் அளிக்க வேண்டும். வெறும் பழங்களை மட்டும் சாப்பிட்டு விரதத்தினை கடைபிடித்தால் செய்கின்ற வேலைக்கு உங்கள் உடல் ஒத்துழைக்குமா என்பதையும் கருத்தில் கொள்ளுங்கள். உடல் ஒத்துழைக்கும் பட்சத்தில் நீங்கள் வெறும் பால் மற்றும் பழங்களைச் சாப்பிட்டு விரதத்தினை கடைபிடிக்கலாம். இயலாத பட்சத்தில் முடிந்தவரை அசைவம், மற்றும் வெங்காயம், பூண்டு, முருங்கை, முள்ளங்கி ஆகியவை கலந்த உணவுகளை தவிர்த்து மற்ற உணவுகளை உட்கொண்டு விரதத்தினை கடைபிடிக்கலாம். விரதம் என்றால் சாப்பிடாமல் இருப்பது என்று பொருள் காண்பது தவறு. விரதம் என்ற வார்த்தைக்கு மன உறுதி அல்லது மனக் கட்டுப்பாடு என்பதே பொருள். விரதம் இருக்கும் நாளன்று தனது ஆசைகளைத் துறந்து மனக்கட்டுப்பாடுடன் இருந்தாலே போதுமானது. நீங்கள் கடைபிடிக்கும் விரதமானது முழுமையான பலனைத் தந்துவிடும்.

?அதிகாலையில் எழுந்திருப்பது சிரமமாக உள்ளதால் மார்கழி மாத வண்ணக் கோலத்தை முதல் நாள் இரவே போட்டு வைத்து விடலாமா?

- அருந்தாச்செல்வி, திருமங்கலம்.

தவறு. நிச்சயமாக அவ்வாறு செய்யக்கூடாது. மனிதர்களாகிய நமக்கு ஒரு வருட காலம் என்பது தேவர்களைப் பொறுத்த வரை ஒரு நாள் கால அளவே ஆகும். அந்த வகையில் கணக்கிட்டால் நமக்கு ஒரு மாதம் என்பது தேவர்களுக்கு 2 மணி நேரம் மட்டுமே. (1 மாதத்திற்கு 2 மணி நேரம் வீதம் 12 மாதத்திற்கு 24 மணி நேரம் = 1 நாள்) இதில் தை மாதம் முதல் ஆனி மாதம் வரை வருகின்ற ஆறு மாத காலம் தேவர்களுக்கு பகல் பொழுதாக அமைகிறது. இந்தக் காலத்தை உத்தராயணம் என்று அழைக்கிறோம். ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரை வருகின்ற ஆறு மாத காலம் தேவர்களுக்கு இரவுப் பொழுதாக அமைகிறது. இதை தட்சிணாயனம் என்று சொல்கிறோம். இந்த தட்சிணாயனத்தின் நிறைவுப்பகுதி, அதாவது தேவர்களைப் பொறுத்த வரை இரவுப் பொழுது நிறைவடையும் காலமான அதிகாலை 4 மணி முதல் 6 மணி வரையான நேரமே மார்கழி மாதம் என்று பொருள் கொள்ளலாம். இந்தக் காரணத்தால்தான் தேவர்களை வரவேற்கின்ற விதமாக மார்கழி மாதத்தில் அதிகாலை 4 மணி முதல் 6 மணிக்குள் வீட்டு வாசலில் பெண்கள் வண்ணக் கோலமிடுவதை வழக்கமாகக் கொண்டனர். ஆனால், இன்றைய காலத்தில் அதிகாலையில் எழுவதை சிரமமாகக் கருதும் சில பெண்கள் முதல் நாள் இரவே கோலம் போட்டு வைத்துவிட்டு பின்னர் உறங்கச் செல்கின்றனர். இது முற்றிலும் தவறான ஒன்று என்பதை நினைவில் கொள்ள வேண்டியது அவசியம். மார்கழியின் தனிச் சிறப்பே அதிகாலையில் எழுந்து கோலமிடுவதுதான். அந்த நேரத்தில் கோலமிட்டு நடுவினில் விளக்கேற்றி வைத்துப் பாருங்கள். மனதினில் மட்டற்ற மகிழ்ச்சி பொங்கும். மகாலட்சுமியின் அருள் பூரணமாகக் கிட்டும்.

அருள்ஜோதி