Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மண்ணிலே கலைவண்ணம் கண்டேன்!

நன்றி குங்குமம் தோழி

இயற்கை நமக்கு பல்வேறு வளங்களை கொடுத்திருக்கிறது. இயற்கையிலிருந்து நேரடியாக கிடைக்கப்பெறும் பொருட்களை பயன்படுத்தும் போது அது நிச்சயம் மன அமைதியை கொடுக்கும். இயற்கையாகவே கிடைக்கும் மணல், மருதாணி, பூக்கள், சாணம், கற்கள் போன்றவற்றை கொண்டு தயாரிக்கப்படும் கலை படைப்புகளும் நம் மனதிற்கும் கண்களுக்கும் விருந்தளிக்கும் என்பதில் சந்தேகமில்லை. அப்படிப்பட்ட கலையம்சம் நிறைந்த பொருட்களை வடிவமைத்து வருகிறார் ராஜஸ்தானை சேர்ந்த ஓவியக் கலைஞர் பூஜா ரத்தோர்.

“எனக்கும் இயற்கைக்குமான தொடர்பு ஆழமானது. கலை மீதான ஆர்வமும் இயற்கை மீதான காதலும் இணைந்தபோதுதான் நான் நேரடியாக இயற்கைப் பொருட்களை பயன்படுத்தி ஓவியங்களையும் கலை படைப்புகளையும் உருவாக்க துவங்கினேன். கொரோனா ஊரடங்கு காலம் எனக்கு நிறைய பாடங்களை கற்றுத்தந்தது.

அதில் ஒன்றுதான் இயற்கையுடன் ஒன்றிணைவது. ஊரடங்கு காலத்தின்போது இயற்கையான காற்றை சுவாசிக்க வெளியே சென்றாலே போதும் என்று எல்லோரும் விரும்பினார்கள். அந்த சமயத்தில் நானும் இயற்கையுடன் அதிகமான நேரத்தை செலவிட தொடங்கினேன். புல்வெளிகளில் நடப்பது, இயற்கை ஒளியை ரசிப்பது, மரங்களின் நிழலில் அமர்வது, வண்ணமயமான பூக்களின் வாசத்தையும், மென்மையையும் உணர்வது என முழுமையாக ஈடுபடுத்த ஆரம்பித்த போது இயற்கையின் அற்புதங்களை என்னால் உணர முடிந்தது.

எனக்கு சிறு வயதிலிருந்தே ஓவியம் தீட்டுவதில் அதிக ஆர்வமும் ஈடுபாடும் உண்டு. பள்ளிப் படிப்பை முடித்ததுமே கலைத் தொடர்பான படிப்பைத் தொடர விரும்பி விஸ்காம் படித்தேன். படிப்பை தாண்டி கலை மேல் அதிக ஆர்வம் இருந்ததால் பலவகையான ஓவியங்களை வரைய கற்றுக்கொண்டேன். முதலில் எல்லோரையும் போல் அக்ரிலிக் பெயின்டிங்தான் செய்து வந்தேன். திருமணத்திற்குப் பிறகு உதய்பூருக்கு சென்றுவிட்டேன்.

அங்கு கொரோனா ஊரடங்கின் போது இயற்கையுடன் செலவிட்ட நேரம் எனக்கு புதுவிதமான சிந்தனைகளை கொடுத்தது. அதை ஓவியம் மூலம் வெளிப்படுத்த விரும்பினேன். அவ்வாறு ஒருமுறை ஓவியம் வரைந்து கொண்டிருந்த போது ஏன் இயற்கை பொருட்களை வைத்து கலைப்படைப்புகளை முயற்சிக்கக்கூடாது என்ற எண்ணம் தோன்றியது. முதலில் மண்ணை வைத்து முயற்சித்தேன். ஆனால் அது சரியாக வரவில்லை. பல முயற்சிக்குப் பிறகு மண்ணால் ஒரு அழகிய கலைப்படைப்பை உருவாக்கினேன். என் அறையில் பிரேம் செய்து மாட்டினேன். ஒவ்வொரு முறை அதனை பார்க்கும் போது மனநிறைவு மற்றும் மன அமைதியை கொடுக்கும்.

மண் எல்லோருக்கும் பிடித்தமானது. நாம் சிறு வயதில் மண்ணில் விளையாடும் போது சந்தோஷமான உணர்வை தரும். அதே உணர்வினை நான் மண்ணால் கலைப் படைப்பினை செய்த போது எனக்கு ஏற்பட்டது. ஓவியங்களில் மண்ணை பயன்படுத்தும் போது அது ஒரே மாதிரியான பழுப்பு நிறத்தில்தான் இருக்கும். எளிமையான தோற்றத்தில் இயற்கையை பிரதிபலிக்கும் விதமாக இருந்தது. இயற்கையான மண்ணைக் கொண்டு நான் உருவாக்கிய எனது முதல் படைப்புதான் இப்போது வரையிலும் என் மனதுக்கு நெருக்கமானது” என்றவர், இயற்கை ஓவியங்களில் புதுவித நிறங்களையும் வடிவங்களையும் சேர்க்க மண்ணை தவிர்த்து மற்ற இயற்கைப் பொருட்களையும் பயன்படுத்தி வருகிறார்.

“நேரடியாக இயற்கைப் பொருட்களால் கலைப் படைப்புகளை உருவாக்கலாம் என்கிற யோசனையில் முதலில் நான் மண்ணை பயன்படுத்திய போது பழுப்பு நிறத்தில் இருந்தது. அதன் பிறகு என் கண்களுக்கு தென்பட்ட ஒவ்வொரு இயற்கைப் பொருளும் புதுவித யோசனைகளை எனக்கு தந்தது. மரத்திலிருந்து உதிர்ந்த பூக்களை சேகரித்து அவற்றிலிருக்கும் இயற்கை நிறமிகளை ஓவியங்களில் பயன்படுத்தினேன். குறிப்பாக மருதாணி இலைகளை பயன்படுத்தும் போது அதன் தன்மையே நிறமிகளை வெளிப்படுத்துவது என்பதால் ஓவியம் நேர்த்தியாக இருந்தது. அதன் பிறகு கண்ணில் தென்படும் இயற்கைப் பொருட்களை எல்லாம் என்னுடைய கலைப் படைப்புகளில் பரிசோதனை செய்து பார்த்துவிடுவேன்.

இவ்வாறு பல்வேறு இயற்கைப் பொருட்களை முயற்சி செய்து பார்க்கும்போதுதான் எது ஓவியங்களுக்கு பொருந்துகிறது, பொருந்தவில்லை என்பதையும் கற்றுக்கொண்டேன். இதுவரை மண், கூழாங்கற்கள், சாணம், மருதாணி, பூக்கள், சோள நார், மரத்தூள், கரி போன்றவற்றை எனது படைப்புகளில் பயன்படுத்தியிருக்கிறேன். இவற்றைக் கொண்டு ஒவ்வொரு முறையும் படைப்புகளை உருவாக்கும் போது ஒரு புது உணர்வு கிடைக்கும். என் விருப்பத்திற்கு ஏற்ற வடிவங்களை மண்ணைக் கொண்டு வரைய முடிந்தது.

கிடைப்பதை வைத்து ஒரே மாதிரியான படைப்புகளை மட்டும்தான் உருவாக்க முடியும் என்றில்லை. புதுவிதமான வடிவங்களையும், ஓவியங்களையும் படைக்கலாம். சாணம், மரத்திலிருந்து உதிரும் பூக்கள், உமி என கையில் கிடைப்பதை வைத்து அழகான கலைப் பொருட்களை உருவாக்க முடியும் என்று நினைக்கும் போதே வியப்பாக இருந்தது” என்று கூறும் பூஜா தனது கலைப்படைப்புகளை விற்பனையும் செய்து வருகிறார்.

“என் படைப்புகளை முதலில் இன்ஸ்டாகிராமில் பதிவு செய்வேன். பலர் பார்த்து நல்ல வரவேற்பு கொடுத்து வருகிறார்கள். தற்போது ‘ஸ்டூடியோ தி சாயில்’ என்ற பெயரில் ஆர்ட் ஸ்டூடியோ ஒன்றை துவங்கி என் படைப்புகளை அதில் வைத்திருக்கிறேன். அங்கு வந்து அதனைப் பார்த்து பலரும் பாராட்டி வாங்கிச் செல்கிறார்கள். அவர்களின் பாராட்டுதான் என்னை மேலும் பல கலைகளை படைக்க வேண்டும் என்று ஊக்குவித்து வருகிறது.

இயற்கை நம்மை ஒருபோதும் ஆறுதல்படுத்த தவறியதில்லை. இந்தப் படைப்புகளில் பயன்டுத்தியிருக்கும் ஒவ்வொரு பொருளும் இயற்கையிலிருந்து நேரடியாக பெறப்பட்டது என்பதால், படைப்புகளை பார்க்கும் போதெல்லாம் மனதிற்குள் அமைதி பிறக்கிறது. அதனை நாம் வீடுகளில் வைக்கும் போது நிச்சயம் மன நலத்திற்கு உதவும். நான் பல இடங்களுக்கு பயணம் செய்திருக்கிறேன். ஒரு சில இடங்களில் மனிதர்கள் இயற்கையுடன் கை கோர்த்து மண்ணாலான வீடுகளை அமைத்திருந்ததைப் பார்த்தேன். அந்தக் காலத்தில் இருந்தே மண் வீடுகள் இருந்தாலும், இன்றும் மக்கள் அதில் ஆர்வம் எடுத்து செய்வது சந்தோஷமாக இருக்கிறது.

தற்போது பலரும் வீடுகளை கட்டும் போது அதில் இயற்கையான வெளிச்சம், காற்று, பசுமையான கட்டமைப்பு, அமைதியான சூழல் என இயற்கை சார்ந்த விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர். வீடு என்பது மன அமைதிக்கு உகந்த இடமாக இருக்கவேண்டுமென நினைப்பவர்களுக்கு ஸ்டூடியோ தி சாயில் கை கொடுக்கிறது. என்னுடைய ஸ்டூடியோ மூலம் இன்டீரியர் டிசைனர்களுடன் ஒன்றிணைந்து வீடுகளில் இயற்கை சார்ந்த கட்டமைப்புகள் மற்றும் கலைப்படைப்புகளையும் உட்புகுத்தி புதுவிதமான அமைப்புகளை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன்.

இவை கண்டிப்பாக வீட்டில் வசிப்பவர்களுக்கு நேர்மறை எண்ணங்களை ஏற்படுத்தும் என்பதை நம்புகிறேன். அதை நானே அனுபவித்திருக்கிறேன். பலரும் இந்தக் கலையை கற்றுக்கொள்ள ஆர்வம் காட்டுகின்றனர். நிச்சயமாக கூடிய விரைவில் இதற்கான பயிற்சி பட்டறைகளை தொடங்க இருக்கிறேன். இந்தக் கலைப்படைப்புகள் என் ஆன்மாவிற்கு நெருக்கமான ஒன்று, இயற்கையின் ஆசீர்வாதத்துடன் மேலும் புதுவிதமான கலைப்படைப்புகளை படைக்க விரும்புகிறேன்” என்கிறார் பூஜா.

தொகுப்பு: ரம்யா ரங்கநாதன்