Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கும்பப்பூ அறுவடை முடியும் நிலையில் குமரியில் உளுந்து சாகுபடி தீவிரம்

நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் கும்பபூ அறுவடை முடியும் நிலையில் விவசாயிகள் உளுந்து சாகுபடி பணியில் தீவிரம் காட்டியுள்ளனர். குமரி மாவட்டத்தில் சுமார் 6,500 ஹெக்டேர் பரப்பளவில் நெல் சாகுபடி நடந்து வருகிறது. விவசாய பயிர்களுக்கு தழைசத்து, சாம்பல் சத்து, மணிசத்து ஆகிய சத்துக்கள் தேவைப்படுகிறது. இதற்காக விவசாயிகள் தழைசத்துக்கு யூரியாவும், சாம்பல் சத்துக்கு பொட்டாசும், மணிசத்துக்கு சூப்பர்பாஸ்பேட்டும் விளை நிலங்களுக்கு போடுகின்றனர். மாவட்டத்தில் கும்பபூ அறுவடை பணி முடியும் நிலையில் உள்ளது. கன்னிப் பூ சாகுபடிக்காக மே மாதம் நாற்றங்கலை விவசாயிகள் தயாரிப்பார்கள், பின்னர் ஜூன் மாதம் நாற்றை பிடுங்கி நடவு பணியில் ஈடுபடுவார்கள். மார்ச், ஏப்ரல் மாதம் இடையில் உள்ளதால், நிலத்தை தரிசாக போடாமல் அதனை பயனுள்ளதாக ஆக்கும் வகையில் வேளாண்மை துறை மானிய விலையில் உளுந்து விதைகளை விவசாயிகளுக்கு வழங்கியது.

இதனை விவசாயிகள் நெல் அறுவடை செய்வதற்கு இரண்டு நாட்களுக்கு முன்வு விதைப்பு செய்தனர். தற்போது பறக்கை, புத்தளம், சுங்கான்கடை, தோட்டிகோடு உள்பட பல இடங்களில் விவசாயிகள் உளுந்து சாகுபடி செய்துள்ளனர். உளுந்து பயிர்கள் பூக்கதொடங்கி உள்ளது. இது குறித்து விவசாயி செண்பகசேகரபிள்ளை கூறியதாவது: நெல்சாகுபடி செய்யப்படும் விளை நிலத்திற்கு தழைசத்து, சாம்பல் சத்து, மணிசத்து ஆகிய பேருட்டசத்தும், இரும்பு, துத்தநாகம், உள்பட 16 வகையான நுண்ணூட்ட சத்தும் தேவைப்படுகிறது. நமது முன்னோர்கள் கும்பபூ அறுவடை முடிந்தவுடன் உளுந்து சாகுபடி செய்வார்கள். உளுந்து பயிரின் வேர் முடிச்சில் தழைசத்து சேர்ந்து இருக்கும். அறுவடை முடிந்த உளுந்து செடிகளை மண்ணோடு உழும்போது மண்ணிற்கு தேவையான தழைசத்து கிடைக்கும்.

ஆனால் நாளடைவில் ஆட்கள் பற்றாக்குறையால் உளுந்து சாகுபடியை புறம்தள்ளிவிட்டு, தழைசத்துக்கு தேவையான சணப்பு, தக்கைபூண்டு, கொளஞ்சி உள்ளிட்ட பசுந்தாழ் விதைகளை சாகுபடி செய்து வருகின்றனர். சாகுபடி செய்யப்பட்ட பசுந்தாழ் செடிகளை 40 நாட்கள் கடந்த பிறகு உழுதால், தழைசத்து கிடைத்து விடுகிறது. தற்போது வேளாண்மைதுறை மானிய விலையில் உளுந்து விதை வழங்கியதால், விவசாயிகள் ஆர்வமுடம் உளுந்து சாகுபடி செய்துள்ளனர். இதனால் விவசாயிகளுக்கு உளுந்து மூலம் இதர வருமானம் கிடைப்பதுடன், தழைச்சத்துக்காக யூரியா வாங்கும் செலவு மிச்சமாகும். என்றார்.