Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மதுரையில் சினிமா பாணியில் துணிகரம்; சென்னை கணவரை தாக்கி புதுப்பெண் காரில் கடத்தல்: 4 பேர் கும்பலுக்கு வலை

திருமங்கலம்: மதுரை திருமங்கலத்தில் சினிமா பாணியில் கணவரை தாக்கி புதுப்பெண்ணை காரில் கடத்தி சென்ற 4 பேர் கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே சுவாமிமல்லம்பட்டியை சேர்ந்தவர் விஜயபிரகாஷ் (29). சிவில் இன்ஜினியர். சென்னையில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கும், கரிசல்காளன்பட்டியை சேர்ந்த ஆதிநாராயணன் மகள் சுபலெட்சுமி (22) என்பவருக்கும் கடந்த 28ம் தேதி திருமணம் நடந்தது. இந்நிலையில் நேற்று இரவு 9 மணியளவில் விஜயபிரகாஷ், மனைவி சுபலெட்சுமி மற்றும் தங்கை நாகலட்சுமி, அவரது குழந்தை ரக்‌ஷன் ஆகியோரை டூவீலரில் ஏற்றிக்கொண்டு விடத்தகுளம் சென்றார். அங்கு தங்கை நாகலட்சுமியை வீட்டில் இறக்கிவிட்டு மனைவியுடன் விஜயபிரகாஷ் மீண்டும் வீட்டிற்கு புறப்பட்டு வந்தார்.

விடத்தகுளம்-திருமங்கலம் ரோட்டில் சுங்குராம்பட்டி கிராமம் அருகே வந்தபோது பஸ் ஸ்டாப்பில் கார் ஒன்று நின்றிருந்தது. கார் அருகே நின்றிருந்த 30 வயது மதிக்கத்தக்க மூவர் திடீரென சாலையின் குறுக்கே வந்து விஜயபிரகாஷை வழிமறித்து திடீரென சரமாரி தாக்கினர். இதில் அவர் நிலைதடுமாறி கீழே விழுந்தார். விஜயபிரகாஷ் கண்முன்னே அவரது மனைவி சுபலெட்சுமியை பிடித்து தரதரவென இழுத்து சென்று காரில் ஏற்றினர். காரில் தயாராக இருந்த டிரைவர் கண் இமைக்கும் நேரத்தில் திருமங்கலம் நோக்கி ஓட்டி சென்றார்.

இதுகுறித்து விஜயபிரகாஷ் திருமங்கலம் தாலுகா போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். கணவரை தாக்கி சினிமா பாணியில் புதுப்பெண் கடத்தப்பட்ட சம்பவம் திருமங்கலம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.