உச்சநீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணா பதவியேற்பு: ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்
புதுடெல்லி: உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணா நேற்று பதவியேற்றுக் கொண்டார். அவர் அடுத்த ஆண்டு மே 13ம் தேதி வரையிலும் தலைமை நீதிபதியாக பதவி வகிப்பார். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் பதவிக்காலம் முடிந்ததைத் தொடர்ந்து, 51 வது தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணா நியமிக்கப்பட்டார். அவரது பதவியேற்பு விழா, டெல்லி ராஷ்டிரபதி பவனில் நேற்று நடந்தது. ஜனாதிபதி திரவுபதி முர்மு, புதிய தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணாவுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். அப்போது அவர், கடவுளின் பெயரால் ஆங்கிலத்தில் உறுதிமொழி ஏற்றுக் கொண்டார். விழாவில், துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர், பிரதமர் மோடி, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், ஒன்றிய சட்ட அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால், முன்னாள் தலைமை நீதிபதிகள் ஜே.எஸ்.கேகர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் பங்கேற்றனர்.
கடந்த 2019ம் ஆண்டு ஜனவரி 18ம் தேதி உச்ச நீதிமன்ற நீதிபதியாக பொறுப்பேற்ற சஞ்சீவ் கண்ணா பல்வேறு முக்கிய தீர்ப்புகளில் பங்களித்துள்ளார். தேர்தல்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்துவதை உறுதி செய்து, இந்த சாதனங்கள் பாதுகாப்பானவை, வாக்குச்சாவடி கைப்பற்றுதல் மற்றும் போலி வாக்குப்பதிவை நீக்குவதை உறுதி செய்கின்றன என்கிற தீர்ப்பளித்த உச்ச நீதிமன்ற அமர்வில் இடம் பெற்றவர்.
மேலும், அரசியல் கட்சிகளுக்கு நிதி உதவி அளிக்கும் தேர்தல் பத்திரத் திட்டம் அரசியலமைப்புக்கு எதிரானது என அறிவித்த 5 நீதிபதிகள் கொண்ட அமர்வில் அங்கம் வகித்தவர். ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியலமைப்பின் 370வது பிரிவை ரத்து செய்த ஒன்றிய அரசின் முடிவை உறுதி செய்த 5 நீதிபதிகள் கொண்ட அமர்விலும் இடம் பெற்றவர். மதுபான முறைகேடு வழக்கில் டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு நீதிபதி சஞ்சய் கண்ணா தலைமையிலான அமர்வு தான் இடைக்கால ஜாமீன் வழங்கியது. கடந்த 1960, மே 14ம் தேதி டெல்லியில் பிறந்த சஞ்சீவ் கண்ணா, அவரது குடும்பத்தின் 3ம் தலைமுறை வழக்கறிஞர் ஆவார். இவரது தந்தை டெல்லி உயர் நீதிமன்ற முன்னாள் நீதீபதி தேவ்ராஜ் கண்ணா, இவரது மாமா உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி எச்.ஆர்.கண்ணா ஆவர்.
கடந்த 1983ல் டெல்லி பார் கவுன்சிலில் வழக்கறிஞராகப் பதிவு செய்த சஞ்சீவ் கண்ணா, டெல்லி உயர்நீதிமன்றத்தில் பல கிரிமினல் வழக்குகளில் கூடுதல் அரசு வழக்கறிஞராக பணியாற்றியவர். தற்போது 64 வயதாகும் இவர், அடுத்த ஆண்டு மே 13ம் தேதி வரை தலைமை நீதிபதியாக பதவி வகித்து ஓய்வு பெறுவார். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தனது எக்ஸ் பதிவில் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், ‘‘இந்தியாவின் 51வது தலைமை நீதிபதியாக பதவியேற்ற நீதிபதி சஞ்சீவ் கண்ணாவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். ஆழமான ஆய்வுகள் மற்றும் எதிர்பார்ப்புகளை கொண்ட தலைமை நீதிபதி பொறுப்பு, சந்தேகத்திற்கு இடமின்றி உங்கள் தோளில் அதிக சுமையை ஏற்படுத்தும். நீண்ட அனுபவத்தின் மூலம் இந்த பொறுப்பின் சுமையை தாங்கி, நீதித்துறைக்கு சிறப்பான சேவையை சஞ்சீவ் கண்ணா செய்வார் என உறுதியாக நம்புகிறேன்’’ என்றார்.
முதல் நாளில் 45 வழக்குகள் விசாரணை
புதிய தலைமை நீதிபதியாக பதவியேற்றதும் நேற்று பிற்பகல், உச்ச நீதிமன்றத்தில் உள்ள தலைமை நீதிபதியின் அறைக்கு சஞ்சீவ் கண்ணா சென்றார். அப்போது, மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி உள்ளிட்ட வழக்கறிஞர்கள் அவரை வாழ்த்தி வரவேற்றனர். பின்னர் பிற்பகல் 2.30 மணிக்கு தலைமை நீதிபதியாக வழக்குகளை விசாரிக்கத் தொடங்கினார் சஞ்சீவ் கண்ணா. முதல் நாளிலேயே 45 வழக்குகளை விசாரித்தார். இதில் பெரும்பாலானவை வணிக பிரச்னை தொடர்பான வழக்குகள்.