Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சென்னையில் மேற்கொள்ளப்பட்டு வரும் மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

சென்னையில் மேற்கொள்ளப்பட்டு வரும் மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் குறித்து ஒன்றிய அமைச்சர் மனோகர் லால் கட்டாருடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். சென்னை நந்தனத்தில் உள்ள மெட்ரோ நிறுவனத்தின் தலைமையகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.

மெட்ரோ ரயில் 2-ம் கட்ட திட்டத்துக்கு கடந்த அக்.3-ம் தேதி ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருந்தது. சென்னையில் 3 வழித்தடங்களில் 128 ரயில் நிலையங்களுடன் 118.9 கி.மீ. தூரத்துக்கு மெட்ரோ ரயில் வழித்தடம் அமைக்கப்பட உள்ளது. ரூ.63,246 கோடி மதிப்பில் செயல்படுத்தப்படும் மெட்ரோ ரயில் 2-ம் கட்ட திட்டம் 2027-ல் நிறைவடையும் என தகவல் தெரிவித்துள்ளனர்.

2ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப் பணிகளுக்கு நிதி ஒதுக்கிய பிரதமருக்கும் மத்திய அரசுக்கும் முதலமைச்சர் நன்றி தெரிவித்துள்ளார். நிர்ணயிக்கப்பட்ட கால வரையறைக்குள் மெட்ரோ 2ஆம் கட்ட பணிகளை முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் ஆட்சி காலத்தில் 2007-ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசும் ஒன்றிய அரசும் இணைந்து மெட்ரோ ரயில் திட்டத்தின் முதல் கட்டப் பணிகளை துவக்கினோம். 22 ஆயிரத்து 150 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 54.1 கிலோ மீட்டர் நீளத்திற்கு 2 வழித்தடங்களில் இந்தத் திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தினால் சென்னை மக்கள் பெரும் பயனடைந்து வருகின்றனர். நாள்தோறும் 3 லட்சத்து 10 ஆயிரத்திற்கும் மேல் பயணிகளுக்கு பலனளித்து இத்திட்டம் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக 63 ஆயிரத்து 246 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 118.9 கிலோ மீட்டர் நீளத்திற்கு 3 வழித்தடங்களில் இந்த மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாவது கட்டப் பணிகளை செயல்படுத்தி வருகிறோம். இதுவரை 19 ஆயிரத்து 229 கோடி ரூபாய் செலவிடப்பட்டு இப்பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. மெட்ரோ ரயில் திட்டத்தின் முதல் கட்டம் செயல்படுத்தப்பட்ட அதே முறையில் இரண்டாவது கட்டப் பணிகளும் செயல்படுத்தப்பட வேண்டும் என்று நான் பலமுறை வலியுறுத்திய கோரிக்கையை ஏற்று. அதற்கான ஒப்புதலை அண்மையில் அளித்த பிரதமர் அவர்களுக்கும் - ஒன்றிய அரசுக்கும் முதற்கண் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த இரண்டாவது கட்டத்திற்கான பணிகளை விரைந்து செயல்படுத்துமாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தியுள்ளேன். இப்பணிகளை முடிக்க இலக்கிடப்பட்டுள்ள கால வரையறைக்குள் இந்தப் பணிகளை முடிப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் எனது அரசும், அலுவலர்களும் மேற்கொண்டு வருகின்றனர் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இக்கூட்டத்தில், தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் எம்.ஏ. சித்திக், சிறப்பு முயற்சிகள் துறை முதன்மைச் செயலாளர் ஹர் சஹாய் மீனா, ஒன்றிய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை கூடுதல் செயலாளர் டி. தாரா, இயக்குநர்கள் இஷா காலியா, சுபாஷ் குமார், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் இயக்குநர்கள் டி. அர்ச்சுனன், ராஜேஷ் சதுர்வேதி, முதன்மை நிதி அலுவலர் ஆர். முரளி, சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.