Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சதுரகிரி மலைப்பாதையில் சிறகடிக்கும் அரிய வகை இலங்கை வண்ணத்துப்பூச்சி

மதுரை: மதுரை மாவட்டம், பேரையூர் தாலுகாவில் வாழைத்தோட்டம் என்னும் மலைப்பகுதி உள்ளது. இப்பகுதி வழியாக சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்குச் செல்லலாம். கடந்த பிப்ரவரி மாதம் இந்த வழியாகச் சென்ற மதுரை இயற்கை பண்பாட்டு குழுவினர், கோயிலுக்கு செல்லும் மலைப்பாதையில் அரியவகை ‘இலங்கை ஐந்து வளையன் என்னும் வண்ணத்துப்பூச்சி’ இருப்பதைப் பார்த்து ஆவணம் செய்துள்ளனர். இது குறித்து குழுவின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான ச.குமரேசன் கூறியதாவது: மதுரை இயற்கை பண்பாட்டு அறக்கட்டளை தொடர்ச்சியாக மதுரையின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று களஆய்வு செய்து, மாவட்டத்தின் பல்லுயிரியச் சூழலை ஆவணம் செய்து வருகிறது. இதன் நீட்சியாக கடந்த மாதம், சதுரகிரி மலைப்பாதையில் ‘இலங்கை ஐந்து வளையன் வண்ணத்துப்பூச்சியை பார்த்து ஆவணம் செய்தது.

இந்த வண்ணத்துப்பூச்சி இலங்கை மற்றும் தீபகற்ப தென்னிந்திய பகுதிகளில் மட்டும் காணப்படும். இது ஒரு அரிய வகை உயிரினமாகும். பொதுவாக இவை புல்வெளிகள் நிறைத்த மலைப்பகுதிகளில் காணப்படும். கோவை, ஈரோடு மாவட்ட வனப்பகுதியிலும், மேகமலை வனப்பகுதியிலும் ஏற்கனவே ஆவணம் செய்யப்பட்டுள்ளது. சதுரகிரி மலைப்பாதையில் கடந்த மாத இறுதியில் மஞ்சள் கறுப்புச் சிறகன், வரி ஐந்து வளையன், மலபார் புள்ளி இலையொட்டி, சிறு கருமஞ்சள் துள்ளி, மரபழுப்பன், பெருங்கண் புதர் பழுப்பு வண்ணத்துப்பூச்சி உள்ளிட்ட 52 வகையான வண்ணத்துப்பூச்சிகளை ஆவணம் செய்தோம். சதுரகிரி மலை ஆன்மீகத் தளம் மட்டுமல்ல, அது ஒரு பல்லுயிரி பசுமைத்தளம் என்பதற்கான சான்றாகும். மதுரை மாவட்டத்தில் இதுவரை 164 வகை வண்ணத்துபூச்சிகளை எங்கள் குழுவினர் ஆவணம் செய்துள்ளனர்.

வண்ணத்துபூச்சிகள்-இயல்தாவரங்கள்-சுற்றுச்சூழலுக்கு இடையே உள்ள உறவை மாணவர்கள், பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில், இயல் தாவர வண்ணத்துபூச்சிகள் பூங்கா ஒன்றை மதுரையில் ஏற்படுத்த வேண்டும். இது தொடர்பாக மதுரை மாவட்ட ஆட்சியருக்கும், வன அலுவலருக்கும் கோரிக்கை மனு கொடுத்து இருக்கிறோம்’ என்றார்.