Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

புதிய தொழிலாளர் சட்டங்கள் விவகாரம்; தொழிற்சங்க நிர்வாகிகளுடன் ராகுல் காந்தி ஆலோசனை: நாடாளுமன்றத்தில் குரல் எழுப்ப உறுதி

புதுடெல்லி: புதிய தொழிலாளர் நலச்சட்டங்கள் தொடர்பான தொழிற்சங்கத்தினரின் கவலைகளை கேட்டறிந்த ராகுல் காந்தி, இதுகுறித்து நாடாளுமன்றத்தில் பேசுவதாக உறுதியளித்துள்ளார். ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள நான்கு புதிய தொழிலாளர் நலச் சட்டங்கள், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சாதகமாக இருப்பதாகவும், தொழிலாளர்களின் உரிமைகளை பறிப்பதாகவும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன. ஏற்கனவே நடைமுறையில் இருந்த 29 சட்டங்களை ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்த புதிய சட்டங்கள், ‘கார்ப்பரேட் ஜங்கிள் ராஜ்’ எனப்படும் தனியாரின் ஆதிக்கத்தை ஊக்குவிப்பதாகக் கூறி, ‘இந்தியா’ கூட்டணி கட்சிகள் நாடாளுமன்ற வளாகத்தில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.

புதிய சட்டங்கள் முதலாளிகளுக்கு சாதகமாக வளைக்கப்படுவதாகவும், தொழிலாளர்களின் குறைந்தபட்ச ஊதியம் மற்றும் சமூகப் பாதுகாப்பு கோரிக்கைகள் புறக்கணிக்கப்படுவதாகவும் எதிர்க்கட்சிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, நாடு முழுவதிலும் இருந்து வந்திருந்த பல்வேறு தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளை டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள ‘ஜன சன்சத்’ பகுதியில் நேற்று சந்தித்துப் பேசினார். அப்போது, புதிய சட்டங்கள் தொழிலாளர்களின் உரிமைகளை நசுக்குவதாகவும், அமைப்புகளின் வலிமையை குறைப்பதாகவும் தொழிற்சங்கத்தினர் தங்கள் ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தினர்.

இதுகுறித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள ராகுல் காந்தி, ‘தொழிலாளர்கள் மற்றும் அவர்களது அமைப்புகளின் உரிமைகளைப் பலவீனப்படுத்தவும், அவர்களின் குரலை ஒடுக்கவும் இந்த புதிய சட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளதாகப் பிரதிநிதிகள் வேதனை தெரிவித்தனர். அவர்களின் ஆலோசனைகளை நான் கவனமாகக் கேட்டறிந்தேன். தொழிலாளர்களின் கவலைகள் மற்றும் கோரிக்கைகள் குறித்து நாடாளுமன்றத்தில் நிச்சயமாகக் குரல் எழுப்புவேன்’ என்று உறுதியளித்துள்ளார்.