Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

புதிய அத்தியாயம் எழுத கமலா ஹாரிசை அதிபராக்க அமெரிக்கா தயாராகி விட்டது: முன்னாள் அதிபர் ஒபாமா பிரசாரம்

சிகாகோ: ‘அதிபராக கமலா ஹாரிசுடன் புதிய அத்தியாயம் எழுத அமெரிக்கா தயாராகி விட்டது’ என முன்னாள் அதிபர் பராக் ஒபாமாக பிரசாரம் செய்துள்ளார். அமெரிக்காவில் அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 5ம் தேதி நடக்க உள்ளது. இதில், குடியரசு கட்சி வேட்பாளரான முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்பை எதிர்த்து ஆளுங்கட்சியான ஜனநாயக கட்சி சார்பில் துணை அதிபர் கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். இந்நிலையில், சிகாகோவில் நடக்கும் ஜனநாயகக் கட்சியின் தேசிய மாநாட்டில் நேற்று முன்தினம், முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, கமலா ஹாரிசை ஆதரித்து பேசியதாவது: பெரும் ஆபத்து தருணத்தில் ஜனநாயகத்தை பாதுகாத்த அதிபராக ஜோ பைடனை வரலாறு நினைவு கூறும். அவரை எனது அதிபராகவும், நண்பர் என்றும் கூறிக் கொள்வதில் பெருமைப்படுகிறேன். இப்போது ஜோதி கைமாறிவிட்டது. புதிய அத்தியாயத்திற்கு அமெரிக்கா தயாராகிவிட்டது.

சிறந்த வரலாறு படைக்க தயாராகி உள்ளது. அதிபர் கமலா ஹாரிசுக்காக நாங்கள் தயாராக உள்ளோம். கமலா ஹாரிசும் அதிபராக பொறுப்பேற்க தயாராகி விட்டார். இதில் எந்த தவறும் செய்யாதீர்கள். இனியும் கொந்தளிப்பும், குழப்பமும் நிறைந்த இன்னொரு நான்காண்டு நமக்கு தேவையில்லை. அந்த படத்தை நாம் ஏற்கனவே பார்த்து விட்டோம். அதன் தொடர்ச்சி மிகவும் மோசமானது என்பதையும் நாம் அனைவரும் அறிவோம். இப்போது டிரம்ப், கமலா ஹாரிசிடம் தோற்றுவிடுவோம் என்கிற பயத்தில் இருக்கிறார். அதனால் முட்டாள்தனமான குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். அமெரிக்கர்கள், புலம்பெயர்ந்தோர் இடையே பிரிவினையை தூண்டுகிறார். இது பழைய அரசியல் தந்திரம். இதில் சிக்கிக் கொள்ளாதீர்கள். இவ்வாறு அவர் பேசினார்.

* காதல் கதையைக் கூறி கலக்கிய கமலா கணவர்: கலகலப்பானது அரசியல் மேடை

ஜனநாயக கட்சியின் தேசிய மாநாட்டில் தன்னை அறிமுகம் செய்து கொண்ட கமலா ஹாரிசின் கணவர் டக்ளஸ் எம்ஹாப் (59), கமலாவுடனான முதல் சந்திப்பு, அவர்களின் காதல் கதைகளை பகிர்ந்து கொண்டு அரசியல் மேடையை கலகலப்பாக்கினார். எம்ஹாப் பேசியதாவது: என் மகன் கோல், மகள் எல்லாவுக்கு தந்தையான நிலையில் 2008ல் விவகாரத்து பெற்று வக்கீலாக பணியாற்றிய போதுதான் எதிர்பாராத அந்த சந்திப்பு நடந்தது. 2013ல் கிளைன்ட் மீட்டிங் வெற்றிகரமாக முடிக்க உதவியதன் மூலம், கமலாவின் போன் நம்பர் எனக்கு கிடைத்தது. அவருக்கு எனது முதல் வாய்ஸ்மெசேஜ் கொஞ்சம் நீளமாகவே அனுப்பினேன். பதிலுக்கு கமலாவும் வாய்ஸ்மெசேஜ் அனுப்பினார்.

எனக்கு தலைகால் புரியவில்லை. பட்டாம்பூச்சிகள் பறந்தன. அந்த வாய்ஸ்மெசேஜை பலமுறை திரும்ப திரும்ப போட்டு கேட்டேன். அந்த சம்பவங்கள் அன்றைய நாளின் சாதாரணமான விஷயங்களாக நடக்கவில்லை. நான் அனுப்பிய வாய்ஸ்மெசேஜை கமலா சேமித்து வைத்து, இப்போது வரையிலும் எங்களின் ஒவ்வொரு திருமணநாளிலும் போட்டுக்காட்டி, இருவரும் கேட்டு மகிழ்கிறோம். 2014ல் நாங்கள் திருமணம் செய்து கொண்டோம். எனது வளர்ந்த குழந்தைகள் முதலில் தயங்கினாலும், பின்னர் கமலாவை ஏற்றுக் கொண்டனர். அவர்கள் அவரை ‘மொமாலா’ என்று தான் செல்லமாக அழைப்பார்கள்.

சவால்களை சந்தோஷமாக சந்திக்கும் வீரம் கொண்ட கமலா, குழந்தைகளுக்கு அன்பான தாயாகவும் இருக்கிறார். வரும் வியாழக்கிழமை எங்களின் 10வது திருமண நாளில் அதிபர் வேட்பாளராக வேட்பு மனுதாக்கல் செய்ய சம்மதித்துள்ளார். என் வாழ்வில் முக்கியமான தருணத்தில் சரியான நபராக கமலா எனக்கு கிடைத்தார். அதே போல, இந்த தருணத்திலும் நம் நாட்டிற்கு சரியான அதிபராக கமலா நிச்சயம் இருப்பார். இவ்வாறு பேசினார். அவரது பேச்சை மாநாட்டில் பங்கேற்க கட்சி ஆதரவாளர்கள் கைதட்டி ரசித்தனர்.