ரூ3.25 கோடியில் கட்டப்பட்டு குலசேகரன்புதூரில் புதர் மண்டி கிடக்கும் புதிய வட்டார போக்குவரத்து அலுவலகம்: பணிகள் முடிந்து 2 வருடங்கள் ஆகியும் திறக்கவில்லை
நாகர்கோவில்: நாகர்கோவில் அடுத்த குலசேகரன்புதூரில் ரூ.3.25 கோடி செலவில் கட்டப்பட்டு உள்ள நாகர்கோவில் வட்டார போக்குவரத்து அலுவலகத்தை விரைவில் திறக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். குமரி மாவட்டத்தில் நாகர்கோவில், மார்த்தாண்டம் என இரு வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது. நாகர்கோவில் வட்டார போக்குவரத்து அலுவலகம், தோவாளை அருகே விசுவாசபுரத்தில் வாடகை கட்டிடத்தில் உள்ளது. மார்த்தாண்டம் வட்டார போக்குவரத்து அலுவலகம் கோழிப்போர் விளையில் ரூ.3 கோடியே 57 லட்சம் செலவில் கட்டி முடிக்கப்பட்டு, சொந்த கட்டிடத்தில் இயங்கி வருகிறது. நாகர்கோவில் வட்டாரபோக்குவரத்து அலுவலகத்திற்கு நாகர்கோவில் அருகே உள்ள குலசேகரன்புதூர் சமத்துவபுரம் அருகே ரூ.3 கோடியே 25 லட்சம் செலவில் புதிய கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு 2 வருடங்களுக்கு மேல் ஆகியது.
ஆனால் இன்னும் திறக்கப்படாமல் உள்ளது. இதனால் கட்டிடம் புதர் மண்டி கிடக்கிறது. தற்போது விசுவாசபுரத்தில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகம் இட நெருக்கடியாக உள்ளது. தனியாருக்கு சொந்தமான இடத்தில் தான் வாகனங்கள் நிறுத்தப்பட்டு எப்.சி. பார்க்கப்படுகிறது. நான்கு வழிச்சாலை பகுதியில் தான் வாகனங்களை ஓட்ட செய்து லைசென்சு வழங்குகிறார்கள். குலசேகரன்புதூரில் கட்டப்பட்டுள்ள வட்டார போக்குவரத்து அலுவலகம், விசாலான இட வசதி கொண்டதாகும். அங்கு ஏராளமான வாகனங்களை நிறுத்த முடியும். கழிவறை உள்ளிட்ட வசதிகள் உள்ளன. மேலும் போக்குவரத்து நெருக்கடியும் இருக்காது. இதனால் வாகன ஓட்டிகள் வந்து செல்ல வாய்ப்பாக இருக்கும் என பொதுமக்கள் கருதுகிறார்கள். அரசு செலவில் கட்டப்பட்டு ஒரு கட்டிடம் 2 வருடங்கள் ஆகியும் திறக்கப்படாமல் இருப்பது ஏன்? என்று பொதுமக்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து வாகன ஓட்டிகள் கூறுகையில், நாகர்கோவில் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு பதிவுக்கு வரும் புதிய வாகனங்கள் சமத்துவபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள அலுவலகம் அருகே ஆய்வுக்காக நிறுத்தி வைக்கப்படுகிறது. விசுவாசபுரத்தில் உள்ள அலுவலகத்தில் இருந்து 6 கிலோ மீட்டர் தூரம் உள்ள குலசேகரன்புதூர் சமத்துவபுரத்திற்கு அதிகாரிகள் வந்து ஆய்வு செய்து செல்கின்றனர். பின்னர் வாகன ஓட்டிகள் மீண்டும் விசுவாசபுரத்துக்கு செல்லவேண்டிய நிலை இருந்து வருகிறது. இதனால் குலசேகரன்புதூரில் கட்டப்பட்டுள்ள அலுவலகத்ைத விரைவில் திறக்க வேண்டும் என்றனர்.


