Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க செல்லும் ஸ்ரீவாரிமிட்டா மலைப்பாதையில் தரிசன டிக்கெட் கவுன்டர் மூடல்: அலிபிரியில் புதிய கவுன்டர் திறப்பு

திருமலை: திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க ஸ்ரீவாரிமிட்டா மலைப்பாதையில் இருந்த திவ்ய தரிசன டிக்கெட் கவுன்டர் மூடப்பட்டு அலிபிரியில் புதிய கவுன்டர் நாளை மறுதினம் திறக்கப்படுகிறது. திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் அலிபிரி மற்றும் வாரிமிட்டா பகுதிகள் வழியாக நடைபயணமாக சென்று சுவாமி தரிசனம் செய்கின்றனர். வாரிமிட்டா பகுதியில் தரிசன டிக்கெட் கவுன்டர் உள்ளது. இங்கு தினசரி 3,000 பக்தர்களுக்கு டிக்கெட் தரப்படுகிறது.

அப்பகுதியில் தினமும் 3,000 டிக்கெட்டுகள் மட்டும் வழங்கப்படும் நிலையில் பக்தர்களின் வருகை அதிகரிப்பதால் தள்ளுமுள்ளு, தேவஸ்தான ஊழியர்களுடன் வாக்குவாதம் போன்ற சம்பவங்கள் நடக்கிறது. இப்பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் திருப்பதி தேவஸ்தானம் நேற்று அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி வரும் வெள்ளிக்கிழமை முதல், வாரிமிட்டா மலையில் உள்ள தரிசன டிக்கெட் கவுன்டர் தற்காலிகமாக மூடப்படுகிறது.

அதற்கு பதிலாக அலிபிரி மலையடிவாரத்தில் உள்ள பூதேவி காம்பளக்சில் புதிதாக கவுன்டர் திறக்கப்படுகிறது. இங்கு தினமும் மாலையில் கவுன்டர்கள் திறக்கப்பட்டு 3,000 டிக்கெட் வழங்கப்படும். இவற்றை ஆதார் அட்டையை காண்பித்து பக்தர்கள் பெறலாம். அதனை பெற்றுக்கொண்டு மறுநாள் காலை வாரிமிட்டா மலைப்பாதை வழியாக செல்லலாம் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

மலைப்பாதையில் பக்தர்களை அனுமதிக்கும் நேர விவரம்

வாரிமிட்டா மலைப்பகுதியில் தினமும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே பக்தர்கள் நடந்து செல்ல அனுமதிக்கப்படுவார்கள். அலிபிரி மலைப்பாதையில் சிறுத்தை நடமாட்டம் காரணமாக அதிகாலை 5 மணி முதல் பிற்பகல் 2 மணி வரையும், பிற்பகல் 2 மணி முதல் இரவு 9 மணி வரை 12 வயதுக்கு மேற்பட்டவர்களை 70 முதல் 100 பக்தர்கள் வரை ஒருங்கிணைத்து அதன்பின்னர் மலையேற அனுமதிக்கப்படுகின்றனர். அலிபிரி மலைப்பாதை வழியாக நடந்து செல்லும் பக்தர்களுக்கு எவ்வித தரிசன டிக்கெட்டுகளும் வழங்கப்படாது என்பது குறிப்பிடத்தக்கது.