சென்னை: நீதித்துறை மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை பொய்க்கும் வகையில் ஊழலை ஒருபோதும் ஆதரிக்கக் கூடாது என்று புதிய வழக்கறிஞர்களுக்கு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர்.ராம் அறிவுரை வழங்கினார். நாட்டின் 75வது அரசியல் சாசன தினம் மற்றும் புதிய வழக்கறிஞர்கள் பதிவு நிகழ்ச்சி சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார்கவுன்சில் சார்பில் நடத்தப்பட்டது. 1,200 சட்ட பட்டதாரிகள் வழக்கறிஞர்களாக பதிவு செய்துகொண்டனர். நிகழ்ச்சியில், சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர்.ராம் பேசியதாவது: வழக்கறிஞராக பணியாற்றும் போது ரகசியம் காக்க வேண்டும்.
கட்சிக்காரர்களின் ரகசியம் நிழலுக்கு கூட தெரியாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். தொடர்ந்து படிக்க வேண்டும். நல்ல நடத்தையை கொண்டிருக்க வேண்டும். உணர்வுகளுக்கு பலியாகாமல் திறம்பட செயல்பட வேண்டும். நீதித்துறை மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ள நிலையில் அதை பொய்க்கும் வகையில் ஊழலை ஒருபோதும் ஆதரிக்கக் கூடாது. நீதிமன்றங்களுக்கு, நீதிபதிகளுக்கு உரிய மரியாதையை வழங்க வேண்டும். வாழ்நாளில் ஒரு குழந்தைக்காவது கல்வி வழங்க வேண்டும், பணத்தைத் தேடி ஓடுவதை விடுத்து, குடும்பத்தினருடன் நேரத்தை செலவழிக்க வேண்டும். அரசியல் சட்டத்தை நிலை நிறுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.


