*5 பேர் கைது
*பரபரப்பு வாக்குமூலம்
நெட்டப்பாக்கம் :புதுச்சேரி நெட்டப்பாக்கம் அருகே இளம்பெண் குளிப்பதை எட்டிப் பார்த்ததாக புதுமாப்பிள்ளை அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை
ஏற்படுத்தியுள்ளது. நெட்டப்பாக்கம் அடுத்த பனையடிக்குப்பம் வையாபுரி நகரை சேர்ந்தவர் ராஜகுரு (34), வெல்டர் வேலை செய்து வருகிறார்.
இவருக்கு திருமணமாகி மூன்று மாதங்கள் ஆகிறது. ராஜகுருவுக்கும் அதே பகுதியை சேர்ந்த தினேஷ் என்பவருக்கும் முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே கடந்த 19ம்தேதி இரவு ஒரு மணியளவில் பனையடிக்குப்பம் மோகன்ராஜ் என்பவருக்கு சொந்தமான மீன்குட்டை அருகே ராஜகுரு படுத்து தூங்கிக் கொண்டிருந்தார்.
அப்பொழுது தினேஷ் பாபு மற்றும் அவரது நண்பர்களான அதே பகுதியை சேர்ந்த சர்மா (24), முகிலன் (20), சுமித் (20), கரையாம்புதூர் பகுதியைச் சேர்ந்த அச்சுதன் (24) ஆகிய உள்ளிட்ட 5 பேர் கொண்ட கும்பல் ராஜகுருவை எழுப்பி அவரிடம் தகராறு செய்து இரும்பு தடி மட்டும் பிளாஸ்டிக் நாற்காலியால் சரமாரியாக தாக்கி உள்ளனர். பின்னர் ராஜகுரு மயக்கமடைந்த நிலையில் அவரை மீன்குட்டை அருகே வீசிவிட்டு சென்றதாக கூறப்படுகிறது.
பின்னர் அவ்வழியாக சென்ற பொதுமக்கள், வாலிபர் ரத்தக் காயங்களுடன் மயங்கிக் கிடப்பதை பார்த்து கரையாம்புத்தூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கரையாம்புத்தூர் எஸ்ஐ சந்திரசேகர் தலைமையிலான போலீசார் ராஜகுருவை மீட்டு மதகடிப்பட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக ராஜகுரு ஜிப்மர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
இதுகுறித்து ராஜகுருவின் சகோதரர் கதிர் கொடுத்த புகாரின்பேரில் கரையாம்புத்தூர் போலீசார் கொலை முயற்சி வழக்குபதிவு செய்து தினேஷ் மற்றும் அவரது நண்பர்கள் உள்பட 5 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனிடையே ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராஜகுரு சிகிச்சை பலனின்றி நேற்று காலை உயிரிழந்தார்.
ராஜகுரு இறந்ததை அடுத்து போலீசார் குற்றவாளிகளிடம் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். அப்பொழுது கொலைக்கான காரணம் குறித்து தினேஷ் அளித்த வாக்குமூலத்தில், எனது தங்கை குளிக்கும்பொழுது ராஜகுரு மெத்தையிலிருந்து எட்டிப் பார்த்தார்.
இதனால் எனக்கு ராஜகுரு மீது பயங்கரமான கோபம் ஏற்பட்டது. அதனால்தான் என் நண்பருடன் சென்று அடித்து கொலை செய்தேன் என்று வாக்குமூலம் அளித்துள்ளார். இச்சம்பவத்தால் பனையடிக்குப்பத்தில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. இதனிடையே அடித்து கொலை செய்யப்பட்ட ராஜகுருவின் மனைவி தற்போது கர்ப்பமாக இருப்பதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.


