Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

நெட்டப்பாக்கம் சுற்றுப்புற பகுதிகளில் ஊறல் வாய்க்காலில் தேங்கி நிற்கும் கழிவுநீர்

*அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் சேதம்

நெட்டப்பாக்கம் : புதுச்சேரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காலை நேரங்களில் வெயிலும், மாலை நேரங்களில் சூறைக்காற்றுடன் கனமழையும் பெய்து வருகிறது. புதுச்சேரி நெட்டப்பாக்கம் தொகுதிக்கு உட்பட்ட ஊரல் வாய்க்கால் சாலையோரம் சுமார் 100க்கும் மேற்பட்ட ஏக்கரில் நெல் பயிரிடப்பட்டுள்ளது. இப்பயிர்கள் அனைத்தும் விளைந்து அறுவடைக்கு தயாராக இருந்தது.

ஆனால், நெட்டப்பாக்கத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சூறைக்காற்றுடன் பெய்த பலத்த மழையால் நெற்பயிர்கள் அனைத்தும் அடியோடு சாய்ந்து, அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. விளைநிலங்களில் இருக்கும் மழைநீரானது, விளைநிலங்களில் ஒட்டி செல்லும் வடிகால் வாய்க்கால் வழியாக முன்பு சென்றது.

ஆனால், தற்போது இந்த வடிகால் வாய்க்காலில், நெட்டப்பாக்கம், கரியமாணிக்கம், ஏரிப்பாக்கம் பகுதிகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் நிரம்பி இருப்பதால் விளைநிலங்களில் உள்ள மழைநீர் வடிகால் வாய்க்காலில் செல்வதற்கு வழியில்லை.

இதனால் கழிவுநீருடன் மழைநீர் தேங்கி விளைநிலங்களில் நிற்கிறது. மேலும், இந்த கழிவுநீரானது அவ்வப்போது விளைநிலங்களுக்கு சென்று நெற்பயிர்களை சேதப்படுத்தி விடுகிறது. இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள், பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்துள்ளனர். ஆனால் நடவடிக்கை இல்லை என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இது பற்றி, ஊறல் வாய்க்காலில் கழிவுநீர் செல்வதை தடுக்கக்கோரி கடந்த மாதம் தினகரன் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது.

அதன்பிறகும் எந்த நடவடிக்கையும் இல்லை. கடந்த 2 நாட்களுக்கு முன்பு பெய்த மழைக்கே விளைநிலங்களில் உள்ள மழைநீர் வெளியேறாமல் பயிர்கள் அனைத்தும் சேதமடைந்துள்ளது. மேலும், நன்கு விளைந்து அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் சாய்ந்து, புதிய நாற்றங்கால் முளைக்க தொடங்கியுள்ளது. எனவே விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு எல்லாவிதத்திலும் பாதிப்புகளை ஏற்படுத்தும் இந்த ஊறல் வாய்க்காலில் கழிவுநீர் கலப்பதை தடுக்க விரைந்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

கழிவுநீரால் விளைச்சல் பாதிப்பு

அப்பகுதி விவசாயி ஒருவரிடம் கேட்டதற்கு, இந்த வாய்க்கால் ஓரமாக சுமார் 50க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்களில் நெல் பயிரிடப்பட்டுள்ளது. ஆனால் நிலத்தின் ஓரமாக செல்லும் இந்த வடிகால் வாய்க்காலில் கழிவுநீர் தேங்கி நிற்பதால், மழைக்காலங்களில் மழைநீர் வடிய வழியில்லாமல் விளைநிலங்களில் தேங்கி நிற்கிறது.

இதனால் அறுவடைக்கு தயாரான நெற்பயிர்களை அறுவடை செய்ய முடியாமல் அவதிப்படுகிறோம். மேலும் கழிவுநீர் கலந்துவிட்டதால் நிலங்கள் அதிகளவில் சேதமடைந்து, உரிய விளைச்சல் கிடைப்பதில்லை என வேதனையுடன் கூறினார்.

தொற்றுநோய் பரவும் அபாயம்

அப்பகுதி பொதுமக்களிடம் கேட்டபோது, குடியிருப்பு ஓரத்தில் செல்லும் வடிகால் வாய்க்காலில் கழிவுநீர் தேங்கி ஊருக்குள் பாய்கிறது. இதனால் குழந்தைகள், பொதுமக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. இந்த வடிகால் வாய்க்காலில் தேங்கி நிற்கும் கழிவுநீர் செல்வதை பொதுப்பணித்துறை அதிகாரிகள் தடுக்க நடவடிக்கை எடுக்காவிட்டால், வரும் சட்டமன்ற தேர்தலை புறக்கணிப்போம் என்று கூறினர்.