நெமிலி அருகே ஆபத்தான முறையில் ஆற்றில் கழுத்தளவு தண்ணீரை கடந்து பள்ளிக்கு செல்லும் மாணவர்கள்: மேம்பாலம் அமைக்க கோரிக்கை
நெமிலி: நெமிலி அருகே மாணவர்கள் ஆபத்தான முறையில் ஆற்றில் ஓடும் அதிகளவு தண்ணீரில் பள்ளிக்கு செல்கின்றனர். எனவே இங்கு மேம்பாலம் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த வேட்டாங்குளம் ஊராட்சி சில்வர்பேட்டையில் 500க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இங்குள்ள மாணவ, மாணவிகள் வேட்டாங்குளத்தில் உள்ள பள்ளியில் படித்து வருகின்றனர். சில்வர்பேட்டை-வேட்டாங்குளம் இடையே கொசஸ்தலை ஆறு உள்ளது. இந்த ஆற்றில் மழைக்காலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் பல மாதங்கள் வரை அதிகளவு செல்லும். இந்த ஆற்று வழியாகத்தான் சில்வர்பேட்டை மக்கள் ரேஷன் பொருட்கள் உள்ளிட்ட பொருட்கள் வாங்கவும் பள்ளிக்கு மாணவ, மாணவிகள் சென்று வரவேண்டி உள்ளது. இந்த சம்பவம் பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.
சாலை வழியாக செல்லவேண்டும் என்றால் சில்வர்பேட்டையில் இருந்து நெமிலி, அசநெல்லிகுப்பம் வழியாக சுமார் 10 கிலோ மீட்டர் சுற்றிக்கொண்டு வேட்டாங்குளம் செல்லவேண்டும். இந்நிலையில் கடந்த மாதம் பெய்த தொடர் கனமழை காரணமாக கொசஸ்தலை ஆற்றில் தண்ணீர் அதிகளவு ஓடுகிறது. இதில் இறங்கி சில்வர்பேட்டை பகுதி மாணவ, மாணவிகள் ஆபத்தான முறையில் தினமும் பள்ளிக்கு சென்று வருகின்றனர். புத்தகப்பையை தலையில் சுமந்து கொண்டு கழுத்தளவு தண்ணீரில் மறுகரைக்கு செல்கின்றனர். பின்னர் அங்கு பள்ளி சீருடை மாற்றிக்கொண்டு செல்கின்றனர்.
எனவே வேட்டாங்குளம்-சில்வர்பேட்டை இடையே மேம்பாலம் அமைக்கவேண்டும் என மாணவர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேம்பாலம் கட்டும் வரை ஆற்றில் தண்ணீர் வரும் காலங்களில் பள்ளிகல்வித்துறை சார்பில் மாணவர்களுக்கு பள்ளிக்கு செல்ல வாகனம் ஏற்பாடு செய்து தர வேண்டும் என மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


