நெல்லையில் ஓட்டல் முன்பு பட்டப்பகலில் பசுபதி பாண்டியன் ஆதரவாளர் ஓட ஓட விரட்டி படுகொலை: 6 பேர் கொண்ட கும்பலுக்கு வலை
நெல்லை: பசுபதிபாண்டியன் ஆதரவாளரான புது மாப்பிள்ளையை காரில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் பட்டப்பகலில் ஓட்டல் முன்பு வெட்டிக் கொன்று விட்டு தப்பியது. நெல்லை பாளையங்கோட்டை மூன்றடைப்பு அருகே வாகைக்குளத்தை சேர்ந்த சிவகுருநாதன் மகன் தீபக்ராஜன் (32). இவர் மீது அடிதடி, கொலை மிரட்டல் உட்பட பல்வேறு வழக்குகள் மூன்றடைப்பு காவல் நிலையத்தில் உள்ளன. இந்நிலையில் தீபக் ராஜனும், இவரது காதலி செல்வியும் (28) நேற்று பாளை. கேடிசி நகர் ரவுன்டானா பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் சாப்பிடுவதற்காக காரில் வந்தனர். காதலி செல்வி ஓட்டலுக்குள் சென்ற நிலையில் தீபக் ராஜன் காரை நிறுத்தி விட்டு இறங்கினார்.
அப்போது அவரை பின்தொடர்ந்து காரில் வந்த மர்ம கும்பல் அரிவாள்களுடன் தீபக் ராஜனை விரட்டியது. அவர்களிடமிருந்து தப்பித்து குறுக்கும், நெடுக்குமாக சிறிது தூரம் அவர் தப்பியோடினார். ஆனால், ஓட்டல் வாசலில் அவரை மடக்கிய 6 பேர் கும்பல் அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்து விட்டு காரில் ஏறி தப்பிச் சென்றது. பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் ஓட்டலுக்கு சாப்பிட வந்தவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அப்போது ஓட்டலின் உள்ளே இருந்து ஓடி வந்த காதலி செல்வி ரத்த வெள்ளத்தில் விழுந்த கிடந்த தீபக் ராஜன் உடலை பார்த்து கதறினார்.

போலீசார் நடத்திய விசாரணையில் கொலையான தீபக்ராஜனும், அவரது உறவுக்கார பெண்ணான செல்வியும் காதலித்துள்ளனர். அடுத்த மாதம் அவர்களுக்கு திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கொலையாளிகள் தீபக்ராஜனை கடந்த சில நாட்களாக கண்காணித்து வந்துள்ளனர். நேற்றும் பின் தொடர்ந்து காரில் வந்த கும்பல், ஓட்டல் முன்பாக அவரை வெட்டிக் கொன்று விட்டு தப்பியது. பதை பதைக்க வைக்கும் படுகொலை காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தீபக்ராஜன் மீது மூன்றடைப்பு காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் உள்ளதால், அவரை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ரவுடி பட்டியலில் சேர்த்துள்ளனர். அவர் பசுபதிபாண்டியனின் ஆதரவாளர் எனவும் போலீசார் தெரிவித்தனர். தீபக்ராஜன் மீது விருதுநகர், தாழையூத்து, தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர், முறப்பநாடு உட்பட 5 காவல் நிலையங்களில் கொலை வழக்குகள், உள்ளிட்ட மொத்தம் 23 வழக்குகள் உள்ளது. இந்த கொலை சம்பவத்தை அடுத்து பதற்றம் நிலவுவதால் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் முக்கிய இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.


