நெல்லையில் உறவினருடன் கள்ளக்காதலால் கோவையில் மகளிர் விடுதிக்குள் புகுந்து மனைவியை வெட்டிக்கொன்ற கணவன்
* சடலத்துடன் செல்பி எடுத்து ‘துரோகத்தின் சம்பளம் மரணம்’ என ஸ்டேட்டஸ்
* போலீசுக்கு தகவல் சொல்லி வரும் வரை காத்திருந்து உடலை ஒப்படைத்த உத்தமர்
கோவை: கோவையில் மகளிர் விடுதிக்குள் புகுந்து மனைவியை அரிவாளால் வெட்டி கொன்றதோடு, சடலத்துடன் செல்பி எடுத்து ‘துரோகத்தின் சம்பளம் மரணம்’ என வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் வைத்த கணவரை போலீசார் கைது செய்தனர். கோவை கணபதி பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீபிரியா (30). இவருக்கும் திருநெல்வேலியை சேர்ந்த கட்டிட தொழிலாளியான பாலமுருகனுக்கும் (32) திருமணமாகி 10 வயதில் மகனும், 3 வயதில் மகளும் உள்ளனர். பாலமுருகன் கோவையில் கட்டிட வேலை செய்த போது, ஸ்ரீபிரியாவை காதலித்து திருமணம் செய்துள்ளார். தற்போது பாலமுருகன் குடும்பத்தினருடன் திருநெல்வேலியில் வசித்து வருகிறார். ஸ்ரீபிரியா காந்திபுரம் ராஜூ நாயுடு லே அவுட்டில் உள்ள ஒரு மகளிர் விடுதியில் தங்கி, தனியார் நிறுவனம் ஒன்றில் ஊழியராக பணியாற்றி வந்தார்.
இந்நிலையில், ஸ்ரீபிரியாவுக்கும் அவரது உறவினரான திருநெல்வேலியை சேர்ந்த இசக்கிராஜாவுக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டதாக தெரிகிறது. இதுதெரிந்த பாலமுருகன் மனைவியை கண்டித்தார். நேற்று காலை 9 மணி அளவில் பாலமுருகன், நெல்லையில் இருந்து கோவைக்கு வந்தார். ஸ்ரீ பிரியா தங்கியிருந்த விடுதிக்கு சென்று மனைவியிடம், ‘பலமுறை எச்சரித்தும் நீ கேட்கவில்லை. உன் கள்ளக்காதலன் எனக்கு நீங்கள் இருவரும் சேர்ந்து இருக்கும் போட்டோவை அனுப்பி இருக்கிறார். இதை பார்த்து கொண்டு நான் சும்மா இருக்க வேண்டுமா’ என கோபத்துடன் கேட்டுள்ளார்.
இந்த விவகாரத்தில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒருகட்டத்தில் பாலமுருகன் மறைத்து வைத்திருந்த அரிவாளால் ஸ்ரீபிரியாவை 5 முறை வெட்டினார். இதில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே ஸ்ரீபிரியா இறந்து விட்டார். பின்னர் பாலமுருகன் அவரது சடலத்தின் முன் நாற்காலியில் அமர்ந்து செல்போனில் செல்பி எடுத்தார். அந்தப் போட்டோவை தனது வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் ஆக வைத்திருந்தார்.
இதில் ‘துரோகத்தின் சம்பளம் மரணம்’ என கமெண்ட் பதிவு செய்திருந்தார். அவரே போலீஸ் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு மனைவியை கொலை செய்து விட்டேன், சீக்கிரம் வாருங்கள் என அழைத்துள்ளார். அங்கிருந்து தப்பி ஓடாமல் போலீஸ் வரும் வரை சடலத்தின் முன்பே அமைதியாக காத்திருந்தார். இதையடுத்து கோவை ரத்தினபுரி போலீசார் வந்து ஸ்ரீபிரியாவின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலை குறித்து வழக்கு பதிந்து பாலமுருகனை கைது செய்தனர்.
* உறவினர்களுக்கு தெரிவிக்க ஸ்டேட்டஸ்
போலீசாரிடம் பாலமுருகன் அளித்த வாக்குமூலத்தில், ‘‘என் மனைவியின் நடத்தை சரியில்லை. அவர் திருந்தவில்லை, இதனால் எனக்கு அவமானமாக இருந்தது. அவரை நான் பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்று பேசலாம் என நினைத்தேன்.ஆனால் அவர் என்னை நிராகரித்தார். இந்த கோபத்தினால் நான் அவரை கொலை செய்து விட்டேன். என் உறவினர்கள், நண்பர்களுக்கு இந்த தகவலை தெரியப்படுத்தவே ஸ்டேட்டஸ் வைத்தேன்,’’ என கூறியுள்ளார்.
* சமரசம் பேச வந்தவர்...கொலை செய்தார்...
மனைவியை சமாதானப்படுத்தி திருநெல்வேலிக்கு அழைத்து செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் பாலமுருகன் மனைவியின் உறவினர் ஒருவரையும் தன்னுடன் கோவைக்கு அழைத்து வந்துள்ளார். அவரிடம் பாலமுருகன் நான் பேசி விட்டு உங்களை அழைக்கிறேன், அதுவரை வெளியே காத்திருங்கள் எனக்கூறி விட்டு சென்றுள்ளார். அவர் வெளியே காத்திருந்த நிலையில்தான் கடும் வாக்குவாதத்திற்கிடையில் மனைவியை பால முருகன் வெட்டிக்கொலை செய்துள்ளார். போலீஸ் விசாரணையில் இதை தெரிவித்துள்ளார்.

