Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நெல்லை 4 வழிச்சாலை பணியை கண்காணிப்பு பொறியாளர் ஆய்வு

*விரைந்து முடிக்க உத்தரவு

தியாகராஜநகர் : நெல்லை வண்ணார்பேட்டை வடக்கு, தெற்கு பைபாஸ் நான்கு வழிச்சாலையாக விரிவுபடுத்தும் பணியை நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் நேரில் ஆய்வு செய்தார். அப்போது அவர், பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார்.நெல்லை மாநகரில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக பல்வேறு சாலை விரிவாக்க திட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் மிக முக்கிய பணியாக நெல்லை வண்ணார்பேட்டை வடக்கு, தெற்கு பைபாஸ் சாலையை நான்கு வழி சாலையாக அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

சுமார் 4.4 கிலோ மீட்டர் தூரத்திற்கான பணிகள் 51 கோடி ரூபாய் மதிப்பில் நடைபெறுகிறது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் தொடங்கப்பட்ட இந்த பணி 50 சதவீதத்தை நெருங்கியுள்ளது. மேலும் 50 சதவீத பணிகள் முடிக்கப்பட வேண்டி உள்ளது. இந்த சாலை பணி காரணமாக வடக்கு, தெற்கு பைபாஸ் சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது. எனவே சாலை பணியை தங்கு தடை இன்றி விரைவில் முடிக்க வேண்டும் என மாநகர மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

இதுகுறித்து கடந்த 17ம் தேதி தினகரன் நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக 4 வழி சாலை பணியை நெல்லை வட்ட நெடுஞ்சாலை துறை கண்காணிப்பு பொறியாளர் ஜெயராணி நேற்று நேரில் ஆய்வு மேற்கொண்டார். தாமிரபரணி ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள பழைய உயர் மட்ட பாலத்திற்கு இணையாக புதிய உயர்மட்ட பாலப்பணிகள் நடைபெறுவதை பார்வையிட்ட கண்காணிப்பு பொறியாளர், பணியின் முன்னேற்றம் குறித்து விசாரணை நடத்தினார். மேலும் பணிகளை தாமதம் இன்றி விரைந்து மேற்கொள்ள உரிய ஆலோசனைகளை வழங்கினார். இந்த ஆய்வின் போது கோட்ட பொறியாளர் முத்துக்குமரன், உதவிக்கோட்ட பொறியாளர் சண்முகநாதன், உதவி பொறியாளர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் உடன் சென்றனர்.