நேருவின் வரலாற்றை மறைக்கும் வகையில் நவீன இந்தியாவின் அடித்தளத்தை தகர்க்கிறார்கள்!: சோனியா காந்தி அடுக்கடுக்கான குற்றச்சாட்டு
புதுடெல்லி: நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் புகழை இருட்டடிப்பு செய்து, நவீன இந்தியாவின் கட்டமைப்பைச் சிதைக்க ஆளும் பாஜக அரசு முயல்வதாக சோனியா காந்தி குற்றம் சாட்டியுள்ளார். கடந்த சில ஆண்டுகளாகவே நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பங்களிப்பைக் குறைத்து மதிப்பிடுவதாகவும், அவரது வரலாற்றைத் திரித்துக் கூறுவதாகவும் ஒன்றிய பாஜக அரசு மீது காங்கிரஸ் கட்சி தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்காத மற்றும் காந்தியடிகளின் கொலையாளிகளைப் போற்றும் சித்தாந்தத்தைக் கொண்டவர்கள், நேருவின் புகழைச் சீர்குலைக்கத் திட்டமிட்டுச் செயல்படுவதாக அக்கட்சி ஏற்கனவே பலமுறை கவலை தெரிவித்திருந்தது. நேருவின் கொள்கைகள் மற்றும் அவர் உருவாக்கிய கட்டமைப்புகளை அழிக்கும் முயற்சி நடைபெறுவதாகவும் அக்கட்சி தொடர்ந்து விமர்சித்து வருகிறது.
இந்நிலையில் டெல்லியில் நேற்று நடைபெற்ற ‘நேரு சென்டர் இந்தியா’ எனும் டிஜிட்டல் காப்பகத் தொடக்க விழாவில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், ‘ஜவஹர்லால் நேருவை இழிவுபடுத்துவதையே ஆளும் வர்க்கம் தங்களின் முதன்மை நோக்கமாகக் கொண்டுள்ளது’ என்று கடுமையாகச் சாடினார். மேலும், ‘இது வெறும் நேருவின் சகாப்தத்தை அழிப்பதற்கான முயற்சி மட்டுமல்ல; சமூக, அரசியல் மற்றும் பொருளாதார ரீதியாக அவர் உருவாக்கிய நவீன இந்தியாவின் அடித்தளத்தையே தகர்க்கும் செயலாகும்’ என்று அவர் வேதனை தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், ‘அரசியலமைப்புச் சட்ட உருவாக்கத்தில் எந்தப் பங்கும் வகிக்காதவர்கள் இன்று வரலாற்றைத் திரிக்கின்றனர். இத்தகைய பொய்ப் பிரசாரங்களை முறியடித்து, நேருவின் பாரம்பரியத்தையும் நாட்டின் அரசியலமைப்பு விழுமியங்களையும் பாதுகாக்க நாம் அனைவரும் தீவிரமாகப் போராட வேண்டும்’ என்று சோனியா காந்தி அழைப்பு விடுத்தார்.


