Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ரயில்வேயின் அலட்சியம்

ச ர்வதேச அளவில் மிகப்பெரிய ரயில் நெட்வொர்க் உள்ள நாடுகளில் இந்தியா நான்காம் இடத்தில் இருக்கிறது. சுமார் 68,525 கிமீ தூரம் வரை ரயில் போக்குவரத்து இயங்கி வருகிறது. இந்திய அளவில் ஓராண்டுக்கு சுமார் 500 கோடி ரயில் பயணங்கள் மேற்கொள்ளப்படுவதாக ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. மிக நீண்ட தூரத்திற்கு ஆடாமல், அசையாமல் செல்லும் பயணம், உணவு, குடிநீர், கழிவறை உள்ளிட்ட வசதிகள் இருப்பதால், முதியவர்கள், குழந்தைகள், நோயுற்றவர்களின் விருப்ப வாகனமாக ரயில் திகழ்கிறது. இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனம் மட்டுமல்ல... வருமானங்களை கொட்டிக் கொடுக்கும் துறையாகவும் ரயில்வே விளங்கி வருகிறது.

ரயில்வேயின் சிறப்புகளை கருதித்தான், முன்பு இத்துறைக்கென ஒன்றிய அரசு சார்பில் தனி பட்ஜெட் போடப்பட்டது. ரயில்வே துறைக்கு மட்டும் ஒரு அமைச்சர் இருந்து வந்தார். ஆனால், பாஜ அரசு ஆட்சியின்போது ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்வது அடியோடு நிறுத்தப்பட்டது. தற்போது பொது பட்ஜெட் மட்டும் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. மேலும், ரயில்வேயை கூடுதல் பொறுப்பாகவே பார்க்கும் துரதிருஷ்ட நிலையையும் ஏற்படுத்தியது. ஒன்றிய அமைச்சரான அஸ்வினி வைஷ்ணவ், மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம், தகவல் ஒலிபரப்பு இவற்றுடன் கூடுதல் பொறுப்பாகத்தான் ரயில்வேயை கவனித்து வருகிறார்.

இதனால் ரயில்வே துறையின் செயல்பாடுகள் தொடர்ந்து விமர்சனத்திற்குள்ளாகி வருகின்றன. விபத்தினால் உயிரிழப்போர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. மேற்கு வங்கம், ஹவுராவில் இருந்து மும்பை நோக்கி நேற்று முன்தினம் சென்ற பயணிகள் ரயில், ஜார்க்கண்ட் மாநிலம், பாராபாம்பூ பகுதியில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. அதே பகுதியில் சரக்கு ரயிலும் தடம் புரண்டுள்ளது. 18 பெட்டிகள் தடம் புரண்டதில் 2 பேர் பலியாகி உள்ளனர். பாஜ ஆட்சிக்கு வந்த பின் ரயில் விபத்துகள் சர்வசாதாரணமாகி விட்டன. ஏற்கனவே, கடந்தாண்டு ஜூன் 2ம் தேதி ஒடிசா மாநிலம், பாலசோர் மாவட்டம், பாஹாநாகா பஜார் பகுதியில் 3 ரயில்கள் அடுத்தடுத்து மோதிக் கொண்டன.

இதில் 293 பேர் உயிரிழந்தனர். 900 பேர் வரை படுகாயமடைந்தனர். இந்தியாவை உலுக்கிய இந்த மாபெரும் ரயில் விபத்தை, மனிதத்தவறால் நிகழ்ந்ததாக இந்திய ரயில்வே அமைச்சகம் சர்வசாதாரணமாக தெரிவித்தது. கடந்த 2 மாதங்களில் மட்டும் சுமார் 10க்கும் மேற்பட்ட ரயில் விபத்துகள் நடந்துள்ளன. பாஜ ஆட்சியில் மிகப்பெரிய கோர ரயில் விபத்துகள் நடப்பது புதிதல்ல. ஏற்கனவே, கடந்த 2015, மார்ச் 20ல் டேராடூனில் இருந்து வாரணாசிக்கு செல்லும் ஜனதா எக்ஸ்பிரஸ் தடம் புரண்டு 34 பேர் உயிரிழந்தனர். 2016, நவ. 20ம் தேதி கான்பூருக்கு அருகே புக்ராயனில் நடந்த பெரிய ரயில் விபத்தில், 150க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 2017, ஜன. 22ம் தேதி ஆந்திர மாநிலம், விஜயநகரம் மாவட்டத்தில் ரயில் பெட்டிகள் தடம் புரண்டு 39 பேர் பலியாகினர். இப்படியாக தொடர் விபத்துகள் நடந்தவண்ணம் உள்ளன.

எல்ஐசி, ரயில்வே போன்ற நாட்டிற்கு வருமானம் அள்ளித்தரும் துறைகளை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளில் இறங்காமல், அவற்றை தனியார் மயமாக்குதல், வளர்ச்சியை தடுத்தல் போன்ற நடவடிக்கைகளில் ஒன்றிய பாஜ அரசு இறங்கி வருவது ஆபத்தானது. இனியாவது, நாட்டின் முக்கிய போக்குவரத்து மையமாக திகழும் ரயில்வே துறையை மேம்படுத்தி, விபத்துகளை குறைப்பதற்கான வழிமுறைகளை ஒன்றிய அரசு ஆராய வேண்டுமென்பதே இந்திய மக்களின் எதிர்பார்ப்பு.