Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

நீட் தேர்வு மோசடி குறித்து நாடாளுமன்றத்தில் காரசார வாதம் எதிர்க்கட்சி எம்பிக்கள் சரமாரி குற்றச்சாட்டு: இந்திய தேர்வு முறையே ஒரு மோசடி ராகுல்காந்தி கடும் விமர்சனம்

புதுடெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கிய முதல் நாளிலேயே, மக்களவையில் நீட் விவகாரம் குறித்து காரசார வாதம் நடந்தது. இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் சரமாரி குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். இந்திய தேர்வு முறையே மோசடியானது என்றும், பணமிருப்பவர்கள் தேர்வு முடிவுகளை விலைக்கு வாங்கும் நிலை இருப்பதாகவும் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கடும் விமர்சனம் செய்தார். மக்களவை தேர்தலைத் தொடர்ந்து, ஒன்றியத்தில் 3வது முறையாக பாஜ கூட்டணி ஆட்சி பொறுப்பேற்ற நிலையில், நடப்பாண்டிற்கான முழு பட்ஜெட் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது. இதற்காக, நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்று தொடங்கி வரும் ஆகஸ்ட் 12ம் தேதி வரை நடக்க உள்ளது. கூட்டத் தொடரின் முதல் நாளான நேற்று மக்களவை காலையில் தொடங்கியதும், மறைந்த உறுப்பினர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர், கேள்வி நேரத்தில் நீட் விவகாரம் குறித்து எம்பிக்கள் அனல் தெறிக்கும் கேள்விகளை எழுப்பினர்.

இதில், எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தி பேசியதாவது: நீட் தேர்வில் மட்டுமல்ல, அனைத்து முக்கிய தேர்வுகளிலும் முறைகேடுகள் நடக்கின்றன. இந்திய தேர்வு முறையில் மிகப்பெரிய சிக்கல் உள்ளது என்பதை முழு நாடும் தெளிவாக உணர்ந்திருக்கிறது. ஆனால், ஒன்றிய கல்வி அமைச்சரோ தன்னைத் தவிர மற்ற அனைவரையும் குற்றம்சாட்டி உள்ளார். இங்கு என்ன நடக்கிறது, என்ன பிரச்னை என்பது அவருக்கு புரிகிறதா என எனக்குத் தெரியவில்லை.

ஒருவரிடம் பணம் இருந்தால், தேர்வு முடிவுகளை விலைக்கு வாங்கலாம் என மக்கள் கருதுகின்றனர். அந்தளவுக்கு இந்திய தேர்வு முறையே ஒரு மோசடி என நம்புகிறார்கள். இந்த நாட்டில் லட்சக்கணக்கான மாணவர்கள் உள்ளனர். அவர்களின் நலனுக்காக நீங்கள் என்ன செய்திருக்கிறீர்கள்? முறைகேடுகளை தடுக்க என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள்? இவ்வாறு ராகுல் கேள்வி எழுப்பினார்.

சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ் பேசுகையில், ‘‘வினாத்தாள் கசிவில் ஒன்றிய அரசு சாதனை படைத்துக் கொண்டிருக்கிறது. நீட் தேர்வில் சிறப்பாக செயல்பட்ட மாணவர்களை அதிகளவில் கொண்ட தேர்வு மையங்களை மட்டும் தனியாக தேசிய தேர்வு மையம் வெளியிட வேண்டும். குறிப்பிட்ட சில மையங்களில் மட்டும் மற்ற தேர்வு மையங்களை விட அதிகமான மாணவர்கள் சிறந்த மதிப்பெண் எடுப்பது எப்படி சாத்தியம்?’’ என்றார்.

காங்கிரஸ் உறுப்பினர் மாணிக்கம் தாகூர் பேசுகையில், ‘‘கடந்த 7 ஆண்டுகளில் 70 முறை வினாத்தாள் கசிவு சம்பவங்கள் நடந்துள்ளன. இதற்கு பொறுப்பேற்று ஒன்றிய கல்வி அமைச்சர் பதவி விலகுவாரா’’ என கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்து பேசிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், ‘‘நாட்டின் தேர்வு முறையே மோசடியானது என கூறியது தான் எதிர்க்கட்சி தலைவரின் அதிகபட்ச மோசமான குற்றச்சாட்டாக இருக்கும். இதை வன்மையாக கண்டிக்கிறேன். கடந்த 7 ஆண்டுகளில் வினாத்தாள் கசிந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு எந்த அடிப்படை ஆதாரங்களும் இல்லை. இதில் நாங்கள் எதையும் மறைக்கவில்லை. எல்லாமே பதிவு செய்யப்படுகின்றன. நீங்கள் இங்கு சத்தம் போடுவதால் எதுவும் உண்மையாகி விடாது. நான் எனது தலைவரான பிரதமர் மோடியின் கருணையால் இங்கு இருக்கிறேன். எந்தவொரு குற்றச்சாட்டுக்கும் எனது அரசு கூட்டாக பதிலளிக்கும்’’ என்றார்.

அப்போது குறுக்கிட்ட மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா, ‘‘இந்த விவகாரத்தில் ஆக்கப்பூர்வமான விவாதங்கள் நடத்தப்பட வேண்டும். நாட்டில் உள்ள அனைத்துத் தேர்வுகள் குறித்தும் கேள்விகள் எழுப்பப்பட்டால், அது இந்தியக் கல்வி முறையிலும், உலகம் முழுவதும் அதைப் பற்றிய பார்வையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்’’ என்றார். இதைத் தொடர்ந்து ராகுல் காந்தி மீண்டும் பேச முயன்ற போது, அவருக்கு சபாநாயகர் அனுமதி தரவில்லை. இதற்கு கண்டனம் தெரிவித்து ராகுல் தலைமையில் காங்கிரஸ் எம்பிக்கள், திமுக, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட பெரும்பாலான எதிர்க்கட்சி எம்பிக்கள் வெளிநடப்பு செய்தனர். அப்போது, காங்கிரஸ் துணைத் தலைவர் கவுரவ் கோகாய் உள்ளிட்டோர் ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டுமென கோஷமிட்டபடி சென்றனர். நீட் விவகாரத்தால் கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே அனல் பறந்தது. இன்று ஒன்றிய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. தொடர்ந்து 7வது முறையாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை காலை 11 மணிக்கு மக்களவையில் தாக்கல் செய்ய உள்ளார்.

* நீட் நடவடிக்கை குறித்து அமைச்சர் பேசவில்லை

வெளிநடப்பு செய்த எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி வெளியில் வந்ததும் நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்கள் அவரிடம், ‘‘அமைச்சரின் பதில் திருப்திகரமாக இருந்ததா?’’ என கேள்வி கேட்டனர். அதற்கு ராகுல், ‘‘கல்வி அமைச்சர் நீட் குற்றச்சாட்டு பற்றி ஏதாவது ஒரு பதிலை சொல்லியிருக்க வேண்டும். அவர் உச்ச நீதிமன்றம் பற்றி பேசுகிறார், பிரதமர் பற்றி பேசுகிறார், ஆனால் அவருக்கு புரியவில்லை. நீட் தொடர்பாக அவர் என்ன செய்தார் என்பதை அவரால் சொல்ல முடியவில்லை. நீட் முறைகேடு விவகாரத்தில் எடுத்த நடவடிக்கை பற்றி எதையும் அமைச்சர் பேசவில்லை’’ என்றார்.

* நீட் மிகப்பெரிய ஊழல்

எர்ணாகுளத்தை சேர்ந்த காங்கிரஸ் எம்பி ஹிபி ஈடன் கேள்வி நேரத்தில் பேசுகையில், ‘‘அரசு தரவுகளின் படி, கடந்த 7 ஆண்டுகளில் 15 மாநிலங்களில் 70 வினாத்தாள் கசிவு சம்பவங்கள் நடந்துள்ளன. தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் பல்வேறு பிராந்திய கட்சிகளும் ஆரம்பத்தில் இருந்தே நீட் தேர்வை கடுமையாக எதிர்த்து குரல் கொடுத்து வருகின்றன. நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டுமென வலியுறுத்துகின்றன. அரியானாவில் ஒரே தேர்வு மையத்தில் 6 பேர் உட்பட 67 பேர் 99.99 சதவீத மதிப்பெண் பெற்றுள்ளனர். அந்த தேர்வு மையங்கள் யாருக்கு சொந்தமானவை? குஜராத்தின் கோத்ராவில் குறிப்பிட்ட ஒரு அமைப்புக்கு ரூ.35 லட்சம் அபராதத்தை அம்மாநில உயர் நீதிமன்றம் விதித்துள்ளது. அந்த அமைப்பின் கீழ் இயங்கும் பள்ளியை தேர்வு மையமாக நியமித்துள்ளனர். எனவே நீட் தேர்வு, நாட்டில் நடந்த மிகப்பெரிய ஊழல்களில் ஒன்று. இதுதொடர்பாக உயர்மட்ட கமிட்டி அமைத்து விசாரிக்க வேண்டும்’’ என்றார்.

* எனது குரலை ஒடுக்க பார்க்கிறார்கள்: மோடி

கூட்டத் தொடர் தொடங்கும் முன்பாக நாடாளுமன்ற வளாகத்தில் பேட்டி அளித்த பிரதமர் மோடி, ‘‘அனைத்து எம்பிக்களுக்கும் நான் ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். கடந்த ஜனவரி மாதம் முதல் 6 மாதம் தேர்தல் போரில் ஈடுபட்டோம். அது முடிந்து மக்கள் தீர்ப்பளித்து விட்டனர். அடுத்த 5 ஆண்டுகள் நாட்டுக்காக நாம் ஒன்றிணைந்து போராட வேண்டும். சில கட்சிகள் தங்கள் அரசியல் தோல்விகளை மறைக்க, எதிர்மறை அரசியல் செய்து நாடாளுமன்றத்தை தவறாக பயன்படுத்துகின்றன. கடந்த கூட்டத்தொடரின் போது அரசின் குரலை, பிரதமரின் குரலை ஒடுக்க ஜனநாயக விரோத முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இது போன்ற முயற்சிகளுக்கு இங்கு இடமில்லை. நாடாளுமன்றம் கட்சிக்கானது அல்ல. இது தேசத்திற்கானது. 140 கோடி மக்களுக்கானது. இங்கு ஆக்கப்பூர்வமான விவாதத்தில் பங்கேற்று நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல அனைவரும் ஒன்றுபட வேண்டும்’’ என்றார்.

* முதலைக் கண்ணீர் வடிக்கிறார்கள்

ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் நேற்று தனது எக்ஸ் தள பதிவில், ‘‘ராகுல் காந்தியும் அவரது கூட்டாளிகளும் நீட் விவகாரத்தில் முதலைக் கண்ணீர் வடிக்கிறார்கள். கடந்த ஐமு கூட்டணி ஆட்சியில் நடந்த வினாத்தாள் கசிவு விவகாரங்களை கூறினால் அவர்களுக்கு அது தர்மசங்கடத்தை ஏற்படுத்தும். ஒன்றியத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி இருந்த போது, கல்வி நிறுவனங்களில் முறைகேடுகளைத் தடுக்கும் சட்ட மசோதா 2010 உள்ளிட்ட சட்டங்களை அமல்படுத்தத் தவறியது ஏன்? ’’ என கேள்வி எழுப்பி உள்ளார்.

நாடாளுமன்ற துளிகள்

* மக்களவையில் கடைசி நபராக திரிணாமுல் காங்கிரசின் சத்ருகன் சின்கா நேற்று எம்பியாக பதவியேற்றுக் கொண்டார். இவர் மேற்கு வங்க மாநிலம் அசன்சால் தொகுதியில் போட்டியிட்டு வென்றவர். தற்போது ராகுலின் வயநாடு தொகுதி காலியாக உள்ள நிலையில், 542 எம்பிக்களும் பதவியேற்றுள்ளனர்.

* கன்வார் யாத்திரை தொடர்பான உபி அரசின் உத்தரவு குறித்து விவாதம் நடத்த எதிர்க்கட்சி எம்பிக்கள் மாநிலங்களவையில் அவை ஒத்திவைப்பு தீர்மான நோட்டீசை தாக்கல் செய்திருந்தன. அதனை மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கர் நிராகரித்தார்.