Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஆகஸ்ட் 14ம் தேதி முதல் நீட் இளநிலை மருத்துவ கல்விக்கான கவுன்சிலிங் பணி தொடங்கும்: மருத்துவ கவுன்சிலிங் கமிட்டி தகவல்

டெல்லி: வரும் ஆகஸ்ட் 14-ம் தேதி முதல் நீட் இளநிலை மருத்துவ கல்விக்கான கவுன்சிலிங் பணி தொடங்கும் என மருத்துவ கவுன்சிலிங் கமிட்டி தெரிவித்துள்ளது. இதற்கான பதிவு நடைமுறை ஆகஸ்ட் முதல் வாரத்தில் தொடங்கும் என தேசிய மருத்துவ ஆணையம் தெரிவித்துள்ளது. கவுன்சிலிங் தொடர்பான தகவல்களைப் பெற மருத்துவ கவுன்சிலிங் கமிட்டி இணையதளத்தை பார்க்குமாறு மாணவர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். “நாடு முழுவதும் உள்ள 710 மருத்துவக் கல்லூரிகளில் சுமார் 1.10 லட்சம் எம்பிபிஎஸ் இடங்களுக்கான மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் நடைபெற உள்ளது. ஆயுஷ், நர்சிங் படிப்புகளை தவிர்த்து சுமார் 21,000 பிடிஎஸ் படிப்புக்கான சேர்க்கைக்கும் கவுன்சிலிங் நடைபெறும்” என தேசிய மருத்துவ ஆணைய செயலாளர் மற்றும் மருத்துவர் பி.ஸ்ரீநிவாஸ் தெரிவித்துள்ளார்.

அகில இந்திய அளவில் மாணவர் சேர்க்கையில் 15 சதவீதம் மற்றும் எய்ம்ஸ், ஜிப்மர் புதுச்சேரி, மத்திய பல்கலைக்கழகங்கள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் 100 சதவீத சேர்க்கையை மருத்துவ கவுன்சிலிங் கமிட்டி கவனிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருத்தப்பட்ட நீட் தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை (என்டிஏ) கடந்த 26-ம் தேதி வெளியிட்டது. நீட் தேர்வு தொடர்பான பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் இந்த முடிவை உச்ச நீதிமன்ற உத்தரவின் படி என்டிஏ வெளியிட்டது. தற்போது இந்த முடிவுகளின் அடிப்படையில் கவுன்சிலிங் தொடங்க உள்ளது. முன்னதாக, நடப்பு ஆண்டுக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் 571 நகரங்களில் கடந்த மே 5-ம் தேதி நடத்தப்பட்டது. இத்தேர்வை 4,750 மையங்களில் 23.33 லட்சம் மாணவர்கள் எழுதினர். தேர்வு முடிவுகள் ஜூன் 4ம் தேதி வெளியாகின. இந்த நிலையில், வினாத்தாள் கசிவு, கணிசமான மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கப்பட்டது ஆகிய விவகாரங்கள் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, தேர்வை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

அதன் மீதான விசாரணையில், மறுதேர்வு நடத்த முடியாது என நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும், ஒரே கேள்விக்கு இரண்டு பதில்கள் தொடர்பான வாதத்திலல் டெல்லி ஐஐடியின் உதவியை உச்ச நீதிமன்றம் நாடியது. டெல்லி ஐஐடி அந்த வினாவுக்கு சரியான ஒரு பதிலை தெரிவித்தது. இதனால் கணிசமான மாணவர்களுக்கு 5 மதிப்பெண் குறைக்கப்பட்டது. அதனுடன் ஏற்கனவே கருணை மதிப்பெண் ரத்து செய்யப்பட்டதன் அடிப்படையிலும் திருத்தப்பட்ட நீட் தேர்வு முடிவுகளை என்டிஏ கடந்த 26-ம் தேதி வெளியிட்டது. கடந்த ஜூன் மாதம் வெளியான முடிவுகளின்படி, நாடு முழுவதும் மொத்தம் 13 லட்சத்து 16,268 பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர். அண்மையில் வெளியான திருத்தப்பட்ட முடிவுகளில் 13 லட்சத்து 15,853 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி பெற்றவர்கள் எண்ணிக்கை 415 குறைந்துள்ளது. இதனால் தரவரிசையிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது.