Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

நாடு முழுவதும் நீட் தேர்வு 23 லட்சம் பேர் எழுதினர்: கடும் கெடுபிடிகளால் மாணவர்கள் அதிர்ச்சி

சென்னை: நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளில் இந்த ஆண்டில் மாணவ மாணவியரை சேர்ப்பதற்கான தேசிய அளவிலான நுழைவுத் தேர்வு (நீட்) நேற்று நடந்தது. இந்த தேர்வில் நாடு முழுவதும் 23 லட்சம் மாணவ மாணவியர் பங்கேற்றனர். வழக்கமாக கடுமையான கெடுபிடிகளை காட்டிய அதிகாரிகள் தாலியையும் கழற்றச் சொன்னதால் மாணவ மாணவியர் அதிர்ச்சி அடைந்தனர். தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ) நீட் தொடர்பான அறிவிப்புகளை பிப்வரி மாதம் வெளியிட்டதை தொடர்ந்து பிப்ரவரி 7ம் தேதி முதல் மார்ச் 7ம் தேதி வரை நாடு முழுவதும் ஆன்லைன் மூலம் மாணவ மாணவியர் தங்களை பதிவு செய்தனர்.

கடந்த வாரம் 23 லட்சம் பேருக்கு ஹால்டிக்கெட்டுகள் வினியோகம் செய்யப்பட்டன. இதையடுத்து தேசிய தேர்வு முகமை அறிவித்தபடி நேற்று மதியம் 2 மணிக்கு தொடங்கியது. இந்த தேர்வில் மொத்தம் 720 மதிப்பெண்களுக்கு மாணவ மாணவியர் விடை அளிக்க வேண்டும். விலங்கியல் மற்றும் தாவரவியல் பாடங்களில் இருந்து தலா 90 கட்டாய கேள்விகள் இடம் பெற்றன. மதியம் 2 மணிக்கு தொடங்கிய தேர்வு மாலை 5 மணி வரை நடந்தது. இந்ததேர்வுக்காக நாடு முழுவதும் 550 நகரங்களில் 5000க்கும் மேற்பட்ட தேர்வு மையங்களை தேசிய தேர்வு முகமை அமைத்துள்ளது.

தேசிய தேர்வு முகமை அறிவிப்பில், மே 4ம் தேதி மதியம் 2 மணிக்கு தேர்வு தொடங்கும் என்பதால், காலை 11 மணிக்கே மாணவ மாணவியர் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட தேர்வு மையங்களுக்கு வந்துவிட வேண்டும், அதற்கு பிறகு அதிகாரிகள் சோதனைக்கு பிறகு மாணவ மாணவியர் தேர்வு மைய வளாகத்துக்குள் அனுமதிக்கப்படுவார்கள். அதற்கு பிறகு தேர்வு அறைக்கு 1 மணியில் இருந்து 1.30 மணி வரை அனுமதிக்கப்படுவார்கள், மதியம் 1.45 மணிக்கு விடைத்தாள் மாணவ மாணவியருக்கு வழங்கப்படும். அதில் மாணவர்கள் முகப்பு பக்கத்தில் அவர்களின் விவரங்களை எழுத வேண்டும். 2 மணிக்கு கேள்வித்தாள் வழங்கப்படும்.

மாலை 5 மணிக்கு தேர்வு முடிந்துவிடும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி நேற்று காலை 11 மணியில் இருந்தே அந்தந்த மையங்களிலும் மாணவ மாணவியர் மைய வளாங்களுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர். மேலும், தேர்வு எழுத வரும் மாணவ மாணவியர் தேசிய தேர்வு முகமை ஏற்கெனவே அறிவித்தபடி தடை செய்யப்பட்ட பொருட்களை தேர்வு மையங்களுக்கு எடுத்து வரக்கூடாது எச்சரிக்கப்பட்டனர். அதற்கேற்ப தேர்வு மையப்பணியில் நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மாணவ மாணவியரிடம் கடுமையான சோதனைகளை நடத்தி அதன்பிறகே உள்ளே அனுமதித்தனர்.

குறிப்பாக காதணிகள், ஷூ, டை, வளையல், நீண்ட கையுடைய மேலாடைகள் அனுமதிக்கப்படவில்லை. பல் வரிசை ஒழுங்கமைப்புக்கான மாணவியர் பொருத்தி வந்த பல் கிளிப்புகள் கூட அகற்றப்பட்டன. மேலும், திருமணமான பெண்களின் தாலியையும் அகற்றும்படி அதிகாரிகள் கெடுபிடிகள் காட்டினர். இதுபோன்ற கெடுபிடிகளை ஒரு சில தேர்வு மையங்களில் பெற்றோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், உரிய ஆவணங்கள் இல்லை என்றும் நகல்கள் இல்லை என்றும் மாணவ மாணவியரை அதிகாரிகள் வெளியில் செல்லும்படி கூறியதால் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

நாடு முழுவதும் இந்த தேர்வில் 23 லட்சம் மாணவ மாணவியர் எழுதிய நிலையில், தமிழ்நாட்டில் இருந்து சுமார் 1 லட்சத்து 50 ஆயிரம் மாணவ மாணவியர் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ளனர். தமிழ்நாட்டில் தேனி, பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், மயிலாடுதுறை ராணிப்பேட்டை, தென்காசி மாவட்டங்கள் தவிர 31 மாவட்டங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன. சென்னையில், 44 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன. அவற்றில் 21960 பேர் தேர்வு எழுதினர். தேர்வு மையங்கள் தொடர்பான விவரங்களை தேசிய தேர்வு முகமையின் இணையத்தில் தெளிவாக குறிப்பிடவில்லை என்ற குற்றச்சாட்டுகளை மாணவ மாணவியர் தெரிவித்தனர்.

நேற்று காலை 10 மணி முதலே மாணவ மாணவியர் தேர்வு வளாங்களுக்கு வரத் தொடங்கினர். அவர்களை கடுமையான சோதனைக்கு பிறகு வளாகத்துக்குள் அதிகாரிகள் அனுமதித்தனர். வழக்கம் போலவே நீட் தேர்வில் காட்டப்படும் கெடுபிடிகள் நேற்றும் தொடர்ந்தது. மாணவ மாணவியர் மிகுந்த சிரமங்களுக்கு இடையே தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர். தேர்வு மையங்களை பொருத்தவரையில் சென்னையில் தனியார் கல்வி நிறுவனங்களில் அமைக்கப்பட்ட தேர்வு மையங்கள், அரசு கல்வி நிறுவனங்களில் அமைக்கப்பட்ட தேர்வு மையங்கள் என பல்வேறு இடங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன.

அவற்றில் 50 சதவீத தேர்வு மையங்களில் போதிய வசதிகள் இல்லை என்று மாணவ மாணவியர் தெரிவித்தனர். மேலும், நேற்றைய தேர்வில் இடம் பெற்ற கேள்விகள் மிகவும் கடினமாக இருந்ததாகவும் மாணவ மாணவியர் தெரிவித்தனர். அதே நேரத்தில் பயிற்சி மையங்களில் பிளஸ் 2 வகுப்பு படிக்கும் போதே பயிற்சி பெற்று வந்த மாணவ மாணவியர் கேள்விகள் எளிதாக இருந்தாகவும் தெரிவித்தனர். கிராமப் பகுதிகளை சேர்ந்த மற்றும் அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு நீட் தேர்வு கேள்விகள் கடினமாக இருந்தன. இந்த கேள்விகள் பெரும்பாலும் என்சிஇஆர்டி பாடப்புத்தகங்களில் இருந்தும் கேட்கப்பட்டதாகவும் அவர்கள் கூறினர்.