Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நீட் பிஜி நுழைவுத்தேர்வு ஒத்திவைப்பு; கல்வி மாபியாக்கள் முன்பாக செயலற்று நிற்கிறார் மோடி: ராகுல் கடும் தாக்கு

புதுடெல்லி: ‘வினாத்தாள் கசிவு, மோசடிகளை தடுக்க முடியாமல் கல்வி மாபியாக்கள் முன்பாக பிரதமர் மோடி செயலற்று நிற்கிறார்’ என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறி உள்ளார். நீட் தேர்வு முறைகேடு விவகாரம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், நேற்று நடக்க இருந்த நீட் முதுகலை நுழைவுத்தேர்வு கடைசி நேரத்தில் திடீரென ஒத்திவைக்கப்பட்டது. அதோடு, தேசிய தேர்வு முகமையின் (என்டிஏ) தலைவர் சுபோத் சிங் நீக்கப்பட்டுள்ளார். இந்த விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர்கள் நேற்று ஒன்றிய அரசை கடுமையாக விமர்சித்தனர்.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தனது ட்விட்டர் தள பதிவில், ‘‘தேசிய தேர்வு முகமை தன்னாட்சி அமைப்பாக கருதப்பட்டது. ஆனால் உண்மையில் அது பாஜ, ஆர்எஸ்எஸ்சின் மோசமான நலன்களுக்கு சேவை செய்ய உருவாக்கப்பட்டிருக்கிறது. நீட் ஊழலுக்காக உயர்மட்ட அதிகாரிகளை மாற்றுவதில் எந்த பலனும் இல்லை. மாணவர்களுக்கு நீதி கிடைக்க மோடி அரசு பொறுப்பேற்க வேண்டும்’’ என்றார்.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் தள பதிவில், ‘‘இப்போது நீட் முதுநிலைத் தேர்வும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இது, மோடியின் ஆட்சியில் சீரழிந்த கல்விமுறைக்கு மற்றொரு மோசமான உதாரணம். பாஜ ஆட்சியில், மாணவர்கள் தங்கள் திறனை வளர்ப்பதற்காக படிக்க கட்டாயப்படுத்தப்படாமல், தங்களது எதிர்காலத்தைக் காப்பாற்ற, அரசுடன் போராட வேண்டி கட்டாயப்படுத்தப்படுகின்றனர். ஒவ்வொரு முறையும் இந்த சம்பவங்களை அமைதியாகப் பார்த்துக் கொண்டிருக்கும் மோடி, வினாத்தாள் கசிவு, மோசடி மற்றும் கல்வி மாபியாவின் முன்பாக முற்றிலும் செயலற்றவராக இருக்கிறார். மோடியின் திறமையற்ற அரசு மாணவர்களின் எதிர்காலத்துக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறது. அதிலிருந்து நாட்டின் எதிர்காலத்தைக் காப்பாற்ற வேண்டும்’’ என்றார்.

காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தனது ட்விட்டர் தள பதிவில், ‘‘நாட்டின் மிகப் பெரிய தேர்வுகளில் சிலவற்றின் இன்றைய நிலை இதுதான். பாஜவின் ஆட்சியில் ஒட்டுமொத்த கல்விமுறையும் மாபியா மற்றும் ஊழல்வாதிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பாஜ அரசால் ஒரு தேர்வைக்கூட நியாயமான முறையில் நடத்த முடியாத சூழல் உருவாகியுள்ளது’’ என்றார்.