என்டிஏ வெற்றி பெற்றால் தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி தான்: நான்காவது முறையாக அமித்ஷா பேட்டி, பதிலளிக்காமல் எடப்பாடி ஓட்டம்
சென்னை: தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றால், கூட்டணி அமைச்சரவைதான் அமைக்கப்படும் என்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா 4வது முறையாக பேட்டி அளித்தார். ஆனால், அதிமுக தனித்து பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்று பதில் அளித்த எடப்பாடி பழனிசாமி, நிருபர்களின் கேள்விக்கு பதில் அளிக்காமல் ஓட்டம் பிடித்தார். தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டப் பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பாஜவுடன் அதிமுக கூட்டணி அமைத்துள்ளது. ஆனால், இந்த கூட்டணிக்கு அதிமுகவில் எதிர்ப்பு நிலவி வருகிறது.
இந்நிலையில் கூட்டணி அறிவிப்பதற்காக சென்னை வந்த அமித்ஷா அளித்த பேட்டியில், ‘தமிழக சட்டப் பேரவை தேர்தலை எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவும், பாஜவும் இணைந்து சந்திக்கும்; தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும். முதல்வர் பதவி அதிமுகவைச் சேர்ந்தவருக்கு வழங்கப்படும்’ என்று கூறினார். அமித்ஷாவின் இந்த அறிவிப்பு தமிழகத்தில் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு பதில் அளித்து, அதிமுக பொதுச் செயலாளரான எடப்பாடி பழனிசாமி அளித்த பேட்டியில், ‘தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமையாது;
அமித்ஷாவின் கருத்து தவறாக பரப்பப்படுகிறது. தேசிய அளவில் பிரதமர் மோடியும், மாநில அளவில் நானும் கூட்டணியை வழிநடத்துவோம். ஆட்சியில் பகிர்வு இல்லாமல் அதிமுக தனித்து ஆட்சியமைக்கும்’ என்று கூறினார். அமித்ஷா தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று உறுதியாக கூறியிருந்தாலும், அதிமுக தலைமையில் கூட்டணி ஆட்சி என்ற கருத்தை மறுத்து, தனித்து ஆட்சியமைக்கும் என்று அதிமுக வலியுறுத்தி வருகிறது.
இந்நிலையில் டெல்லியில் உள்துறை அமித்ஷா நேற்று முன்தினம் அளித்த பேட்டியில், ‘பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அரசு பொறுப்பேற்ற பிறகு, இந்தியாவின் மீது நம்பிக்கை மீட்டெடுக்கப்பட்டது. மொழி சார்ந்த பிரச்னைகள் எழுப்பப்படுகின்றன. எங்களைப் பொறுத்தவரை எங்களிடம் உறுதியான கொள்கை உள்ளது. இந்தியா இந்திய மொழிகளால் ஆளப்பட வேண்டும். வெளிநாட்டு மொழிகளால் இந்தியா ஆளப்பட வேண்டும் என்று நம்புபவர்களின் மனதில்தான் பிரச்னை இருக்கிறது.
மொழி விஷயத்தில் சீனா, ரஷ்யா, ஜப்பான், ஜெர்மனி, பிரான்ஸ் ஆகிய நாடுகளிடமிருந்தும் நாம் கற்றுக்கொள்ள வேண்டும். அனைத்து இந்திய மொழிகளையும் மதிக்கிறோம். தென்மாநில மொழிகள், அதன் சொந்த மொழிகளில் இயங்க வேண்டும். ஆந்திரா, ெதலங்கானா மாநிலங்கள் தெலுங்கில் இயங்க வேண்டும். தமிழ்நாடு தமிழிலும், கேரளா மலையாளத்திலும் செயல்பட வேண்டும். தமிழகத்தில் வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் பாஜ இணைந்து மாபெரும் வெற்றி பெறுவோம். பாஜ நிச்சயம் அரசில் அங்கம் வகிக்கும் என்றார்.
அப்போது, நடிகர் விஜய் நடத்தும் தவெக, பாமக ஆகிய கட்சிகள் உங்கள் கூட்டணியில் அங்கம் வகிக்குமா என்றபோது, ‘இப்போது அதுபற்றி கூற முடியாது. ஆனால் நாங்கள் ஓரணியில் கட்சிகளை இணைக்க முயற்சி செய்வோம்’ என்றார். அடுத்தாண்டு தமிழகத்தில் நடக்கும் சட்டமன்ற தேர்தலில், தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி தான் என்று அமித்ஷா 4வது முறையாக வலியுறுத்தி வரும் நிலையில், எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து மறுத்து வருவது கூட்டணிக்குள் ஏற்பட்ட உடன்பாட்டை கேள்விக்குறியாக்கியது.
இந்நிலையில், அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி விழுப்புரத்தில் நேற்று முன்தினம் சுற்றுப்பயணத்தை முடித்து புதுச்சேரி பூரணாங்குப்பத்தில் உள்ள தனியார் விடுதியில் ஓய்வெடுத்தார். அங்கு கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாய பிரதிநிதிகளை, வியாபாரிகளை அழைத்து நேற்று கலந்துரையாடி மனுக்களை பெற்றார். அப்போது, எடப்பாடி நிருபர்களிடம் கூறுகையில், ‘‘2026 சட்டசபை ேதர்தலில் அதிமுக பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும், நன்றி வணக்கம் என்று கூறிவிட்டு, நிருபர்களின் கேள்விகளை எதிர்கொள்ளாமல் ஓட்டம் பிடித்தார்.
உள்துறை அமைச்சர் அமித்ஷா 4வது முறையாக இந்த கருத்தை தெரிவித்துள்ள நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் எடப்பாடி தனித்து ஆட்சி அமைக்கும் என கூறினாலும், தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்பதில் அமித்ஷா பிடிவாதமாக உள்ளதற்கு அவர் பதில் அளிக்காமல் சென்றது அதிமுகவினர் மத்தியில் விரக்தியை ஏற்படுத்தியுள்ளது. இது அதிமுகவுக்கு பெரும் பின்னடைவாக அமையலாம் என்றே தெரிகிறது. இதனால் அதிமுக- பாஜ கூட்டணியில் தொண்டர்களிடையே சுமுக நிலை நீடிக்குமா? என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.
* அமித்ஷா சொல்வதே வேதவாக்கு எல்.முருகன்
சென்னையில், எல்.முருகன் கூறும்போது, ‘பிரதமர் நரேந்திர மோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கி நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அதிமுக-பாஜ கூட்டணி மற்றும் ஆட்சி பொறுப்பு குறித்து அமித்ஷா என்ன சொல்கிறாரோ அதுதான் முடிவு. கூட்டணி குறித்து தேசிய தலைவர்கள் என்ன சொல்கிறார்களோ அதுதான் எங்களுக்கு வேத வாக்கு’ என்றார்.


