பண்ருட்டி பலாவின் பெருமையை நாம் விவரிக்கத் தேவையில்லை. பலா என்றாலே பண்ருட்டி பலா என்பதுதான் ஒவ்வொரு தமிழனும் உச்சரிக்கும் வார்த்தை. இப்போது இதற்குப் புவிசார் குறியீடு கிடைத்திருப்பதால் உலகளவில் கவனம் கிடைத்திருக்கிறது. இத்தகைய பண்ருட்டி பலாவை விளைவித்து அசத்தலான லாபம் பார்க்கிறார் பண்ருட்டி சாத்திப்பட்டு அருகே உள்ள நெல்லித்தோப்பு என்ற கிராமத்தைச் சேர்ந்த செந்தில்நாதன். ஒரு காலைப்பொழுதில் நெல்லித்தோப்பில் உள்ள அவரது வயலுக்குச் சென்று சந்தித்தோம். ``இன்ஜினியரிங் படிச்சி முடிச்சிட்டு சென்னையில் மல்டிமீடியா துறையில் வேலை பார்த்தேன். கம்ப்யூட்டர் டிசைனிங், வீடியோ எடிட்டிங் எல்லாம் கத்துக்கிட்டு பிஸியாதான் இருந்தேன். அந்த சமயத்துல நம்ம வாழ்க்கை நகரத்திலயே செட்டிலாகிடும் போலன்னு நினைச்சேன். ஆனா உண்மை வேற மாதிரி இருந்துச்சி. அம்மா திடீர்னு இறந்ததால என்னோட வாழ்க்கை மாற ஆரம்பிச்சிது. அம்மா இல்லாம அப்பா தனியா இருந்ததால, அவரு கூட நாம துணையா இருக்கலாமேன்னு தோணுச்சி. அவருக்கு விவசாயம்தான் உசுரு. எப்ப பார்த்தாலும் வயல்ல ஏதாவது வேலை செஞ்சிக்கிட்டு இருப்பாரு. இனிமே நாமும் அப்பா கூட விவசாயம் பார்க்கலாம்னு முடிவெடுத்து சொந்த ஊருக்கு வந்துட்டேன். இங்க வந்து அப்பாவுக்கு துணையா சில நேரங்கள்ல வயலுக்கு போவேன். சில மாதங்கள்ல அப்பாவுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால நானே முழுநேர விவசாயியா மாறிட்டேன்’’ என தனது கல்வி, வேலை தொடங்கி விவசாயத்திற்கு வந்தது முதலான கதையை சுருக்கமாக பேசிய செந்தில்நாதன் மேலும் தொடர்ந்தார்.
``அப்பாவுக்கு பிரதான விவசாயம்னா அது பலா சாகுபடிதான். எங்களோட வயல் முழுக்க பலாமரங்கள் இருக்கும். அதை முழுக்க முழுக்க இயற்கை முறையிலதான் சாகுபடி செய்வாரு. அவரு செஞ்ச இயற்கை முறை விவசாயத்தை நானும் தொடர்ந்து செய்றேன். எங்களுக்கு சொந்தமா 3 ஏக்கர் நிலம் இருக்கு. ஒவ்வொரு ஏக்கர் நிலத்திலயும் தலா 70 பலா மரங்கள் வச்சிருக்கோம். இந்தக் கணக்குப்படி எங்ககிட்ட 210 பலா மரங்கள் இருக்கு. இது எல்லாமே எங்க அப்பா நட்டு வளர்த்ததுதான். பொதுவா ஒரு மரம் நல்லா வளரணும்னா நிலம் வளமானதாக இருக்கணும். அதனால பசுமாட்டு உரம், பஞ்சகவ்யம் போன்ற இடுபொருட்களை நிலத்துக்கு வச்சி சத்தான நிலமா மாத்துறோம். முக்கியமா இங்க சொல்ல வேண்டிய விஷயம் ஒன்னு இருக்கு. மரத்திற்கு நான் நேரா தண்ணீர் ஊத்தமாட்டேன். மரத்தைச் சுற்றி ஒரு வட்டமா பாத்தி எடுத்து அதுக்கு வெளியில் மட்டும்தான் தண்ணீர் ஊத்துவேன். அப்படி செஞ்சா வேர்கள் நீர் தேடி வௌியே பரவும். வேர்கள் இப்படி வெளியே பரவினால்தான் மரத்துக்கு வலிமை கிடைக்கும்.
பலா மரங்களுக்கு சத்து கிடைக்க இன்னொரு விசயம் பண்றோம். அதாவது மரங்களுக்கு அடியில் உளுந்து, கொள்ளு விதைகளை விதைச்சி, வளர வைப்போம். இந்தச் செடிகள் வளரும்போது மண்ணுக்கு நல்லா நைட்ரஜன் கிடைக்குது. தண்ணீர் தேங்கும் நேரங்கள்ல அதிக ஈரப்பதத்தை மரத்திற்கு கொடுக்காம, இந்த செடிங்க இழுத்து வச்சிக்கும். இதனால மரம் நல்ல ஊட்டமாக வளரும். உளுந்து, கொள்ளுச்செடிகள் நன்கு வளர்ந்த பிறகு அதை வெட்டி மீண்டும் மரத்துக்கே உரமா போட்டுடுவேன். அதுக்கப்புறம் ஒரு வாரம் கழிச்சி வேறொரு சிறுதானியப் பயிரோட விதையை மரத்திற்கு அடிப்பாகத்தில் விதைக்க ஆரம்பிப்பேன். அது வளர்ந்த பிறகு வெட்டி உரமாக போடுவேன். இதுதான் பலா மரத்திற்கு நான் உரம் கொடுக்கும் டெக்னிக்.
மரத்திற்கு தண்ணீர் கொடுக்கும்போது புண்ணாக்கு கரைசலையும் சேர்த்துக் கொடுப்பேன். அதாவது வேப்பம்புண்ணாக்கு, கடலைப்புண்ணாக்கு, புங்கன் புண்ணாக்கு இந்த 3 புண்ணாக்கையும் பத்து நாட்கள் ஊற வச்சி, தண்ணியில கலந்து மரங்களைச் சுற்றியுள்ள இடத்திற்கு பாய்ச்சுவேன். இந்தக் கரைசல் மரத்துக்கு உரமா செயல்படுறது மட்டும் இல்லாம, மண்ணையும் நச்சில்லாத வளமான மண்ணா மாத்தும். அப்பா நட்டு வச்ச எந்த மரங்கள்லயும் 4வது வருசத்துல அதிக விளைச்சல் கிடைக்கலை. ஒரு சில மரத்துல காயே வைக்கலை. சில மரங்கள் வாடிப்போச்சி. சில மரங்களோட வேர்கள்ல நிறைய பூச்சி இருந்துச்சி. ஆனா 5வது வருசத்தில் இருந்து பழங்கள் அதிகமாக வரத்தொடங்கிச்சி. அப்போதான் இயற்கை விவசாயத்தில் கிடைக்கும் மகிமை புரிஞ்சது. பலாவுல 5வது வருசம் காய் காய்க்குற வரைக்கும் இடைப்பட்ட காலத்துல ஊடுபயிரா மல்லாட்டை (நிலக்கடலை), சோளம், கம்பு பயிர்களை சாகுபடி செஞ்சி வருமானம் பார்த்தோம். 5வது வருசத்துல இருந்து பலா மரங்கள் நல்லா காய்க்க ஆரம்பிச்சதால, பழங்களை அறுவடை செஞ்சி விற்பனையை ஆரம்பிச்சோம்’’ என்றவர் பலாப்பழ விற்பனை விவரங்களையும் பகிர்ந்துகொண்டார்.
``பலாப்பழங்களை நாங்க அறுவடை செஞ்சி வெளியில் எடுத்துட்டு போய் விற்பனை செய்வது கிடையாது. வாடிக்கையாளர்கள் நேரா நம்மளோட நிலத்துக்கே வந்து பழங்களை வாங்கிட்டு போறாங்க. மக்கள் பழங்களா சாப்பிட அதிகளவில் வாங்கிட்டு போறாங்க. அதுமட்டுமில்லாம சில உணவகங்களும், சிப்ஸ் நிறுவனங்களும் பலாவுல மதிப்புக்கூட்டுப் பொருள் தயாரிக்குறதுக்காக பலாப்பழங்களை வாங்கிட்டு போறாங்க. சோசியல் மீடியாவுல எங்க பண்ணை பத்தின விவரங்களை நான் பதிவு பண்றேன். அதைப் பார்த்துட்டு நிறைய பேரு வராங்க. சில பேர் சோசியல் மீடியாவுல பார்த்துட்டு பழத்துக்கு ஆர்டர் கொடுப்பாங்க. அவுங்களுக்கு நாங்க பழங்களை அறுவடை செஞ்சி நேரடியா அனுப்பி வைக்குறோம். ஒரு வாடிக்கையாளர் இந்த வருசம் நம்மகிட்ட பழம் வாங்கினா, அடுத்த வருசமும் அவர் நம்மகிட்ட பழம் வாங்குவார். அந்தளவுக்கு பழம் ருசியா இருக்கும். அதுக்கு முக்கிய காரணம் பண்ருட்டியோட மண்வளம், எங்களோடு இயற்கை விவசாய யுக்திகளும்தான்.
எங்க கிட்ட இருக்குற ஒரு மரத்துல இருந்து சராசரியாக 11 பழம் கிடைக்கும். ஒரு பழத்தை சுமார் ரூ.300 விலைக்கு விக்கிறேன். இதன்மூலமா ஒரு மரத்துல இருந்து ரூ.3,300 வரை வருமானம் கிடைக்குது. 210 மரங்கள்ல இருந்து ஒரு சீசன்ல சராசரியா 2,310 பழங்கள் வரை கிடைக்குது. அந்தப் பழங்களை விற்பனை பண்றது மூலமா வருசத்துக்கு ரூ.6.93 லட்சம் வரைக்கும் வருமானம் கிடைக்குது. சுளையா வருமானம்னு சொல்வாங்களே. அது இதுதான்’’ என நகைச்சுவை கலந்து பேசி முடித்தார்.
தொடர்புக்கு:
செந்தில்நாதன்: 90804 87724.
பலா விளையும் ஊர்களில் கூட பலருக்கு ஒரு சந்தேகம் வரும். பழம் பழுத்துவிட்டதா? இப்போது அறுக்கலாமா? என்பதுதான் அந்த சந்தேகம். பலாப்பழம் பழுத்தால் எப்படி இருக்கும்? எப்போது அறுவடை செய்யலாம்? என்பதற்கு செந்தில்நாதன் ஒரு விளக்கம் கொடுத்தார்.``பலாப்பழங்கள் நல்லா பழுத்துடுச்சிங்குறதுக்கு சில அறிகுறிகள் இருக்கும். முதல்ல பழத்தின் தோல்பகுதி (முள்பகுதி) மென்மையா மாறும். விரலால் அழுத்தினா உள்ளே செல்வது மாதிரி தெரியும். பழத்தை நல்லா தட்டினா ஒரு வித்தியாசமான ஓசை வரும். வாசமும் தூக்கலா இருக்கும். இதுதான் பழம் பழுத்துடுச்சிங்குறதுக்கு அறிகுறி’’ என்கிறார்.