நாட்றம்பள்ளி: நாட்றம்பள்ளி அருகே 3 யூனிட் செயற்கை மணலை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த வெலக்கல்நத்தம் ஊராட்சியில் அமைந்துள்ள செட்டேரி டேம் பகுதியை சுற்றிலும் பல ஏக்கர் பரப்பளவில் விவசாய நிலங்கள் உள்ளது. 10 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் பெய்த மழைக்காரணமாக செட்டேரி அணை நிரம்பியது. இதனால் விவசாய பணிகள் மீண்டும் களைகட்ட ெதாடங்கியது.
இந்நிலையில் மணல் மாபியா கும்பல், அங்குள்ள அணை மற்றும் நீர்வரத்து கால்வாய்களில் மணல் அள்ளி விற்று வருகின்றனர். குறிப்பாக டேம் அருகே விவசாய நிலங்கள் மற்றும் அரசுக்கு சொந்தமான இடங்களில் உள்ள மண் மற்றும் மணலை செயற்கையாக தயாரித்து விற்று வருகின்றனர். இதுதொடர்பாக அப்பகுதி மக்கள் கொடுத்த தகவலின்பேரில் சில வாரங்களுக்கு முன்பு அதிகாரிகள் ஆய்வு செய்து, செயற்கை மணல் தயாரிக்கும் தொட்டிகளை அகற்றினர்.
இந்நிலையில் அரசு அதிகாரிகளுக்கு தெரியாத வகையில் கடந்த வாரம் மீண்டும் செயற்கை மணல் தயாரிக்கும் தொட்டிகளை அமைத்து இரவோடு இரவாக செயற்கை மணல் தயாரித்து விற்பனை செய்வதை தொடங்கியுள்ளனர்.
இதுதொடர்பாக அதிகாரிகளுக்கு மீண்டும் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் நேற்றிரவு நாட்றம்பள்ளி தாசில்தார் ராமகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி தலைமையிலான போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் சம்பவ இடம் சென்று அங்கு பதுக்கி வைத்திருந்த 3 யூனிட் செயற்கை மணலை பறிமுதல் செய்து பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.


