Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

7 நாடுகள் பங்கேற்கும் தெற்காசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப்: சென்னையில் இன்று தொடக்கம்

சென்னை: இந்தியா உட்பட 7 நாடுகள் பங்கேற்கும் தெற்காசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியை சென்னையில் இன்று மாலை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். சர்வதேச விளையாட்டுக் களமாக மாறி வரும் சென்னையில் அடுத்து தெற்கு ஆசிய அளவிலான எஸ்ஏஏஎப் இளையோர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி நடைபெறுகிறது. இத்தொடரில் இந்தியா உட்பட 7 நாடுகளைச் சேர்ந்த 210 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.

28 வகையான விளையாட்டுகளில் போட்டிகள் நடக்க உள்ளன. சுமார் 29 ஆண்டுகளுக்கு பிறகு சர்வதேச தடகள போட்டி சென்னையில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தப் போட்டியை இன்று மாலை நடைபெறும் விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். நிகழ்ச்சியில் ஆசிய தடகள கூட்டமைப்பின் தலைவர் தஹ்லான் ஜூமான் அல்-ஹமத் உட்பட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்கின்றனர். போட்டிகள் இன்று முதல் 13ம் தேதி வரை தினமும் மாலை 5.00 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடைபெறும்.

* பங்கேற்கும் நாடுகள்

இந்தியா (62 பேர்), பாகிஸ்தான் (12), இலங்கை (54), பூடான் (5), நேபாளம் (9), வங்கதேசம் (16), மாலத்தீவுகள் (15)

* இந்தியா சார்பில் பங்கேற்கும் தமிழக வீரர், வீராங்கனைகள்

வருண் ஊரி மனோகர் (100 மீ.), ஹரிஹரன் கதிரவன் (100 மீ. ஹர்டுல்ஸ்), ஆர்சி ஜிதின் அர்ஜூனன் (நீளம் தாண்டுல்), ரவி பிரகாஷ் (மும்முறை தாண்டுதல்), எஸ்.கார்த்திகேயன் (4X100 மீ. ரிலே), பிரதிக்‌ஷா யமுனா (நீளம் தாண்டுதல், மும்முறை தாண்டுதல்), எஸ்.என்.லக்‌ஷன்யா (நீளம் தாண்டுதல்), கனிஸ்டா டீனா (4X100 மீ. ரிலே).