Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தேசிய திறனாய்வுத்தேர்வு உதவித்தொகைக்கான பதிவுக்கு புது நடைமுறை அறிமுகம்

சென்னை: தேசிய திறனாய்வுத்தேர்வு உதவித்தொகைக்கான ஆன்லைன் பதிவுக்கு இந்த ஆண்டு முதல் புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்படுகிறது. அதன்படி, ஓடிஆர் எனப்படும் ஒருமுறை பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கல்வியில் சிறந்து விளங்கும் 8ம் வகுப்பு மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் என்எம்எம்எஸ் எனப்படும் தேசிய திறனாய்வுத்தேர்வு நடத்தப்பட்டு அதில் வெற்றிபெறுவோருக்கு 12ம் வகுப்பு வரை மாதம்தோறும் ரூ.1,000 கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. ஆண்டுதோறும் நடத்தப்படும் இத்தேர்வை அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், ஊராட்சி பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் தேர்வை எழுதலாம். தமிழகத்தில் இத்தேர்வை மத்திய அரசு சார்பில் அரசு தேர்வுத்துறை நடத்துகிறது.

இந்நிலையில் நடப்பு கல்வி ஆண்டுக்கான (2025-26) தேசிய திறனாய்வுத்தேர்வு உதவித்தொகைக்கான விண்ணப்ப பதிவில் புதிய நடைமுறை பின்பற்றப்படும் என ஒன்றிய பள்ளிக்கல்வி மற்றும் எழுத்தறிவுத்துறை அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக, மத்திய பள்ளிக்கல்வித்துறை மாநில அரசுகளின் பள்ளிக்கல்வித்துறை செயலர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், 2025-26ம் கல்வி ஆண்டுக்கான தேசிய திறனாய்வுத்தேர்வு உதவித்தொகைக்கான ஆன்லைன் பதிவு ஜூன் 2ம் தேதி முதல் தொடங்கப்பட வேண்டும்.

தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் (என்எஸ்பி) உதவித்தொகைக்காக ஆன்லைனில் பதிவுசெய்யும்போது ஓடிஆர் எனப்படும் ஒருமுறை பதிவு அவசியம். இதற்கு மாணவர்களின் செல்போன் எண் தேவை. ஆதார் சார்ந்த இ-கேஒய்சி மேற்கொள்ளப்படும்போது ஓடிஆர் ஐடி வழங்கப்படும். இதுதொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் கடந்த ஆண்டே அனுப்பப்பட்டன. மாணவர்களுக்கு எளிதில் உதவித்தொகை கிடைக்கும் வகையில் இதுகுறித்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கும் ஒருங்கிணைப்பு அலுவலர்களுக்கும் தகவல் தெரிவிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.