சென்னை: 2023ம் ஆண்டிற்கான திரைப்பட தேசிய விருது நேற்று அறிவிக்கப்பட்டது. அதில் சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை ‘வாத்தி’ படத்திற்காக ஜி.வி.பிரகாஷ் குமார் வென்றார். முன்னதாக சுதா கொங்கரா இயக்கி சூர்யா நடித்த ‘சூரரை போற்று’ படத்திற்காகவும் அவர் தேசிய விருது வென்றுள்ளார். இந்நிலையில், 2வது முறையாக தேசிய விருது வென்ற ஜி.வி.பிரகாஷ் குமார் கூறியது: ‘‘வாத்தி’ படத்திற்காக தேசிய விருது பெற்றது மகிழ்ச்சி. தேர்வுக் குழுவினருக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
‘பொல்லாதவன்’, ‘அசுரன்’, ‘வாத்தி’, இட்லி கடை’ படங்களுக்கு இசையமைக்க என்னை தேர்வு செய்த சகோதரர் தனுஷுக்கு நன்றி. இயக்குனர் வெங்கி ஆட்லுரி மற்றும் தயாரிப்பாளர் நாக வம்சி, திரிவிக்ரம் ஆகியோர் என் மீது வைத்த நம்பிக்கைக்கு நன்றி. என் குடும்பம், எனது இசை குழுவினர், பாடலாசிரியர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள், நண்பர்கள் மற்றும் எனக்கு எப்போதும் உறுதுணையாக இருக்கும் ரசிகர்கள் அனைவருக்கும் நான் கடமைப்பட்டுள்ளேன் என்றார்.