சென்னை: 2023ம் ஆண்டிற்கான திரைப்பட தேசிய விருது நேற்று அறிவிக்கப்பட்டது. தமிழில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கி ஹரிஷ் கல்யாண், எம்.எஸ்.பாஸ்கர், இந்துஜா ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளியான ‘பார்க்கிங்’ 3 தேசிய விருதுகளை வென்றுள்ளது. சிறந்த தமிழ் திரைப்படம், சிறந்த துணை நடிகர் (எம்.எஸ்.பாஸ்கர்), சிறந்த திரைக்கதை என மூன்று பிரிவுகளில் விருது வென்றுள்ளது.
இதுகுறித்து ஹரிஷ் கல்யாண் பேசும்போது, ``விருது வாங்கவேண்டும் என்ற எண்ணத்தில் நாங்கள் படம் எடுக்கவில்லை. ஒரு நல்ல படத்தை மக்களுக்கு கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ‘பார்க்கிங்’ படத்தை எடுத்தோம். இதன் கதைக்களம் மக்களுடன் தொடர்புடையதாக இருந்தது. மக்களுக்கு நன்றி. தேசிய விருது கிடைக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. விருது வென்றதில் மகிழ்ச்சியும், பெருமையாகவும் இருக்கிறது.
தயாரிப்பாளர், இயக்குனர், ரசிகர்களுக்கு நன்றி. மக்கள் நல்ல படங்களை கொண்டாடுகிறார்கள். ‘லப்பர் பந்து’ படத்தையும் வெற்றியடைய செய்தார்கள். என் நடிப்பில் அடுத்ததாக ‘டீசல்’ படம் விரைவில் திரைக்கு வருகிறது” என்றார். ‘பார்க்கிங்’ படத்தின் இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் பேசியதாவது: ``ஒரு அறிமுக இயக்குனராக எனக்கு கிடைத்த இந்த அங்கீகாரம் மிகப்பெரியது. நான் நினைத்தது போல மக்களை சென்றடைந்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் எந்த படம் தேசிய விருது வாங்கும் என்பதை டிவியில் பார்த்துக் கொண்டிருந்த எனக்கு தேசிய விருது கிடைத்ததை என்னால் நம்பமுடியவில்லை. இது ஒட்டுமொத்த படக்குழுவினரால் சாத்தியமானது. எம்.எஸ்.பாஸ்கரின் திறமைக்கு ஏற்ற அங்கீகாரம் என் படத்தில் கிடைத்தது எனக்கு மகிழ்ச்சி. திரைக்கதை ஒரு படத்திற்கு எவ்வளவு முக்கியம் என்பதை இப்படத்தின் மூலம் தெரிந்துகொண்டேன். சிவகார்த்திகேயன் முதல் ஆளாக போன் செய்து என்னை வாழ்த்தினார்’’. இவ்வாறு அவர் பேசினார்.