Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

தேசிய சராசரியை விட அதிக மதிப்பெண் பெற்ற தமிழ்நாடு: நிதி ஆயோக் அறிக்கையில் தகவல், 13 இலக்குகளில் தமிழ்நாடு முன்னிலை, காலநிலை மாற்ற கட்டுப்பாட்டுகளில் 81 மதிப்பெண்

சென்னை: இந்தியாவில் நிலையான வளர்ச்சி இலக்குகளில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் செயல்பாடுகளை ஒன்றிய அரசின் பொது கொள்கைக் குழுவான நிதி ஆயோக் ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டு வருகிறது. வேலைவாய்ப்பு, வறுமை ஒழிப்பு உள்ளிட்ட 17 இலக்குகளை நிலையான வளர்ச்சிக் குறியீடாக ஐக்கிய நாடுகள் சபை நிர்ணயித்துள்ளது. இதை அடிப்படையாக கொண்டு, இப்பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

2023-24 நிதி ஆண்டுக்கான அறிக்கை தற்போது வெளியாகி உள்ளது. இந்த அறிக்கையில், 0-49மதிப்பெண் (ஆசைப்படுபவர்), 50-64 மதிப்பெண் (செயல்படுபவர்), 65-99மதிப்பெண் (முன்னிலை வகிப்பவர்), 100 மதிப்பெண் (சாதனையாளர்) என மாநிலங்களின் செயல்பாடுகளின் அடிப்படையில் மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது. நீடித்த நிலைத்த வளர்ச்சியை அடைவதில் உத்தரகாண்ட் மாநிலம் முதலிடம் பெற்றுள்ளதாக நிதி ஆயோக் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேரளம் இரண்டாம் இடத்தையும், தமிழ்நாடு மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளன. பீகார், ஜார்கண்ட் மற்றும் நாகலாந்து மாநிலங்கள் பட்டியலில் கடைசி இடங்களில் உள்ளன. யூனியன் பிரதேசங்களை பொருத்தவரை சண்டீகர் முதலிடத்திலும், லடாக் கடைசி இடத்திலும் உள்ளது. தமிழ்நாடு 13 இலக்குகளில் முன்னிலை வகிக்கிறது. 11 இலக்குகளில் தமிழ்நாட்டின் மதிப்பெண் தேசிய சராசரியைவிட அதிகமாக உள்ளது. மொத்த இலக்குகளில் தமிழ்நாடு பெற்றிருக்கும் மதிப்பெண் தேசிய சராசரியைவிட அதிகம் ஆகும்.

2020-21 நிதி ஆண்டில் தமிழ்நாட்டின் மதிப்பெண் 74ஆக இருந்தது. தற்போது அது 78ஆக உயர்ந்துள்ளது. தேசிய சராசரி மதிப்பெண் 71ஆக உள்ளது. குறைந்த விலை மற்றும் சுத்தமான எரிஆற்றல் இலக்கில் தமிழ்நாடு 100 மதிப்பெண் பெற்றுள்ளது. வறுமை ஒழிப்பில் தேசிய சராசரி 72 ஆக இருக்கும் நிலையில் தமிழ்நாடு 92 மதிப்பெண் பெற்று முன்னிலை வகிக்கிறது. பாலின பகுபாடு இலக்கில் 53 மதிப்பெண், நீர்வள இலக்கில் 61 மதிப்பெண் பெற்று செயல்படுபவர் பிரிவில் தமிழ்நாடு உள்ளது.

தமிழ்நாட்டில் மகப்பேறு சமயத்தில் தாய்மார்களின் இறப்புவிகிதம் 1 லட்சத்துக்கு 54 ஆகவும், 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு விகிதம் 1000க்கு 13 ஆகவும் உள்ளது. இது ஒன்றிய அரசு நிர்ணயித்துள்ள வரம்புக்குள் உள்ளது. கல்வியில் தமிழ்நாடு மிக மேம்பட்ட நிலையில் உள்ளது. உயர்நிலைப் பள்ளியில் மாணவர் சேர்க்கையில் தேசிய சராசரி 57.6 சதவீதமாக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் அது 81.5 சதவீதமாக உள்ளது. அதேபோல் கல்லூரி சேர்க்கையில் தேசிய சராசரி 28.4 சதவீதமாக உள்ள நிலையில் தமிழ்நாட்டில் அது 47 சதவீதமாக உள்ளது.

தமிழ்நாட்டில் கிராமப்புறங்களில் 81.87 சதவீத குடும்பங்கள் சுத்தமான குடிநீர் வசதியைப் பெற்றுள்ளன. அதேபோல், 92.8 சதவீத குடும்பங்களில் ஒருவரிடமாவது மொபைல் போன் உள்ளது. வேலையின்மை விகிதம் 4.8 சதவீதமாகவும், 15-59 வயதுக்குட்பட்டவர்களில் வேலைவாய்ப்பில் உள்ளவர்களின் எண்ணிக்கை 62.3 சதவீதமாகவும் உள்ளது. நிதி ஆயோக் வெளியிட்டுள்ள 2023 -24ம் ஆண்டுக்கான இந்த அறிக்கையில், தேசத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக் குறியீடு 71 ஆக அதிகரித்துள்ளது.

இதுவே 2020-21 ஆண்டில் வளர்ச்சிக் குறியீடு 66 ஆக இருந்தது. 2018ம் ஆண்டு வெளியிடப்பட்ட அடிப்படை அறிக்கைக்கு முன்பு, நாட்டின் வளர்ச்சிக் குறியீடு 57 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. பருவநிலை மாற்ற கட்டுப்பாடுகள் மற்றும் காலநிலை நடவடிக்கைகளை பொறுத்தவரை தேசிய சராசரி 67 என்று இருக்கும் நிலையில் தமிழ்நாடு 81 மதிப்பெண் பெற்றுள்ளது. சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு தமிழ்நாடு அரசு எடுத்து வரும் பல்வேறு நடவடிக்கைகளின் காரணமாக இந்த குறியீட்டில் அதிக மதிப்பெண் கிடைத்துள்ளதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து சுற்றுசூழல் ஆர்வலர்கள் கூறியதாவது: தமிநாட்டில் திமுக அரசு பொறுப்பேற்றதுமுதல் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இருப்பினும் தற்போதை சூழலில் காலநிலை மாற்றம் பெரும் பிரச்னையாக மாறியிருப்பதை கணக்கில் கொண்டு தமிழ்நாடு அரசின் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக தமிழ்நாடு பசுமை காலநிலை நிறுவனம் என்ற ஓர் அமைப்பு உருவாக்கியுள்ளது.

இது தமிழ்நாட்டில் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளை எதிர்கொள்வதற்காக, லாப நோக்கமற்ற முறையில் தனித்துவமாக இயங்க இந்நிறுவனம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனம் காலநிலை மாற்றம் தொடர்பாக நேர்மையான மற்றும் நீடித்த மாற்றத்தை உருவாக்கவும், காலநிலை மாற்றத்திற்கு எதிரான செயல்திட்ட இலக்குகளை உருவாக்கவும், ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு மூலம் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்பிலிருந்து விரைவில் மீண்டு வருவதற்கான திறனை உருவாக்கும்.

இதனை செயல்படுத்தும் விதமாக பசுமை தமிழ்நாடு இயக்கம், தமிழ்நாடு ஈரநிலை இயக்கம், தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கம், தமிழ்நாடு நெய்தல் மீட்சி இயக்கம் ஆகிய இயக்கங்கள் உருவாக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. மேலும் நாட்டிலேயே முதன்முறையாக மாவட்ட ஆட்சியரை தலைவராகவும், மாவட்ட வன அலுவலரை காலநிலை அலுவலராகவும் நியமித்து மாவட்ட காலநிலை மாற்ற இயக்கங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர்கள் கூறினர்.

* நிலையான வளர்ச்சி இலக்குகள் தமிழ்நாடு மதிப்பெண் தேசிய சராசரி

வறுமை ஒழிப்பு 92 72

பட்டினி ஒழிப்பு 75 52

ஆரோக்கியம் 77 77

தரமான கல்வி 76 61

பாலின சமத்துவம் 53 49

சுத்தமான குடிநீர், சுகாதாரம் 90 89

குறைந்த விலை மற்றும் சுத்தமான எரி ஆற்றல் 100 96

பொருளாதார வளர்ச்சி 81 68

தொழிற்சாலை, உட்கட்டமைப்பு 67 61

சமத்துவமின்மை குறைப்பு 76 65

பொறுப்பான நுகர்வு மற்றும் உற்பத்தி 78 78

நிலையான நகரங்கள் 81 83

நில வளம் 72 75

பருவநிலை மாற்ற கட்டுப்பாட்டுகள் 81 67

சமாதான நீதி மற்றும் வலுவான நிறுவனங்கள் 78 74