Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

காஷ்மீர்-கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் ஓசூர் மேம்பால மைய இணைப்பு அரை அடி விலகியதால் பரபரப்பு: போக்குவரத்துக்கு தடை

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் பழைய நகராட்சி அலுவலகம் எதிரில் பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில் மைய இணைப்பு பகுதி அரை அடிக்கு விலகியதால் வாகனங்கள் திருப்பி விடப்பட்டன. இதனால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

காஷ்மீர் -கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையானது கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வழியாக செல்கிறது. ஒன்றிய அரசின் கீழ் செயல்படும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் இந்த சாலையை பராமரித்து வருகிறது. இந்த சாலை வழியாக தினமும் கனகரக வாகனங்கள் மற்றும் கார், பஸ்கள் உள்ளிட்ட 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. ஓசூர் பஸ் நிலையத்தையொட்டி உள்ள பழைய நகராட்சி அலுவலகம் எதிரில் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் கடந்த 15 ஆண்டுக்கு முன்பு உயர்மட்ட மேம்பாலம் அமைக்கப்பட்டது. இந்த மேம்பலத்தின் வழியாக அதிக பாரங்களை ஏற்றிக்கொண்டு கனரக வாகனங்கள் ஏராளமாக இயக்கப்பட்டு வருகின்றன. நேற்று மதியம் இந்த மேம்பாலத்தில் இணைப்பு பகுதி விலகி உள்ளதாக பணியாளர்கள் சிலர் தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். இதன்பேரில், தேசிய நெடுஞ்சாலைத்துறையின் தலைமை பொறியாளர் பிரசன்னா தலைமையிலான பொறியாளர்கள் வந்து ஆய்வு செய்தனர். அதே நேரத்தில் அந்த வழியாக வாகனங்கள் தொடர்ந்து இயக்கப்பட்டு வந்தது. இதனால், இணைப்பு பகுதி மேலும் விலகும் அபாயம் ஏற்பட்டது.

இதனைத்தொடர்ந்து மேம்பாலம் வழியாக சென்னை -பெங்களூரு செல்லும் வாகனங்கள் மாற்று வழியில் திருப்பி விடப்பட்டன. அனைத்து வாகனங்களும் தேசிய நெடுஞ்சாலையிலிருந்து ஓசூர் பஸ் நிலையத்திற்கு செல்லும் சர்வீஸ் சாலை வழியாகவும், ரிங் ரோடு வழியாகவும் மாற்றி விடப்பட்டன. இதனால், வாகனங்கள் பஸ் நிலையம் வழியாக தர்கா வரை சென்று மீண்டும் தேசிய நெடுஞ்சாலைக்கு செல்கிறது. 2 கிலோ மீட்டர் தொலைவிற்கு சர்வீஸ் சாலை வழியாக வாகனங்கள் மாற்றி விடப்பட்டதால், நகரின் மையப்பகுதிகளில் உள்ள அனைத்து சாலைகளிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து தலைமை பொறியாளர் பிரசன்னா கூறுகையில், ‘‘மேம்பாலத்தின் வழியாக அதிகளவில் கன்டெய்னர் லாரிகள் இயக்கப்பட்டு வருகிறது. மேம்பலத்தின் தூணிற்கு மேல் உள்ள பாட்பேரிங் (பானை போன்ற பேரிங் கம்பிகள்) ஒரு பகுதி உடைந்திருக்கலாம். அல்லது விலகி இருக்கலாம். இதனால், மைய இணைப்பு பகுதி சுமார் அரை அடிக்கு விலகி உள்ளது. இதையடுத்து, வாகனங்கள் செல்வதற்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து உயரதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐதராபாத்திலிருந்து திட்ட அதிகாரி வந்து ஆய்வு செய்த பின்னர் ஜாக்கி வைத்து சீரமைக்கப்படும். அதன் பிறகு வாகனங்கள் செல்வதற்கு அனுமதிக்கப்படும்’’ என்றார்.