Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

என் கட்சியை குறை சொல்வதா? மோதி பார்ப்போம் வா... எஸ்.பிக்கு சீமான் மிரட்டல்

கோவை: நாதக பிரிவினைவாத கட்சி, அதனை கண்காணிக்க வேண்டும் என்று திருச்சி எஸ்பி வருண்குமார் ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாட்டில் பேசியுள்ளார். இதற்கு சீமான், மோதி பார்ப்போம் வா என்று பகிரங்க மிரட்டல் விட்டுள்ளார். கோவை ஹோப்காலேஜ் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நாதக மாணவர் பாசறை சார்பில் கலந்துரையாடல் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு மாணவர்களுடன் கலந்துரையாடினார். முன்னதாக, அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

மக்களுக்கு உதவ வேண்டும் என்று தவெக தலைவர் விஜய் நினைப்பதை எப்படி குறை சொல்ல முடியும். பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ வேண்டும் என நினைப்பதை பாராட்ட வேண்டும். எல்லாத்தையும் திட்டிக்கொண்டே, குறை சொல்லிக் கொண்டே இருப்பதற்கு நாங்கள் என்ன மன நோயாளிகளா? சரி என்றால் சரி, தவறு என்றால் தவறு. இந்திய அரசியலமைப்பு சட்டப்படி தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்து 13 ஆண்டுகளாக கட்சி நடத்தி வருகிறோம். மக்களை சந்தித்து தேர்தலில் நின்று வருகிறோம்.

தனித்து நின்று போட்டி போட்டு 36 லட்சம் வாக்குகளை பெற்றுள்ளோம். எங்களது கட்சியை, பிரிவினைவாத இயக்கம், கண்காணிக்க வேண்டும் என்ற வருண்குமார் ஐ.பி.எஸ், தான் நாட்டை ஆளுகின்றாரா?, எதை வைத்து பிரிவினைவாதிகள் என்று சொல்கிறாய்?, அடிப்படை தகுதியே இல்லாமல் எப்படி ஐபிஎஸ் அதிகாரி ஆனார்?, உண்மையில் உன்னுடைய தாய் மொழி எது?, உண்மையான தமிழ் தாய், தந்தைக்கு பிறந்திருந்தால் இப்படி பேசியிருக்க மாட்டாய்.

உனக்கு மட்டும் தான் மனைவி, குழந்தை இருக்கிறதா?. ஆப்டர் ஆல் நீ ஒரு ஐபிஎஸ். இந்த காக்கி உடையில் எத்தனை வருடம் இருப்பாய்? ஒரு 50 வருடம். இல்ல 30 வருடம். அதன் பின்னர் இறங்கி தானே ஆக வேண்டும். நாங்கள் இங்கேயே தான் இருப்போம். பார்த்து பேச வேண்டும். பிரதமர், உள்துறை அமைச்சர் போன்றவர்கள் துவக்கி வைத்த நிகழ்வில், அவர்கள் பேசியது வெளியே வரவில்லை. நீ பேசிய காட்சிகள் மட்டும் ஊடகத்திற்கு வந்தது எப்படி? பதவி பிரமாணம் எடுத்த போது இப்படித்தான் எடுத்தாயா?

என் கட்சியை குறை சொல்வதற்காக ஐபிஎஸ் ஆனாயா? மோதுவோம் என்றாகி விட்டது, வா மோதுவோம். அசாமில் மாட்டிறைச்சி தடை செய்து இருப்பது கேவலமானது. நான் என்ன கறி வேண்டுமானாலும் உண்பேன். உனக்கென்ன? மாடு புனிதம் என்கிறார்கள். ஆனால் மாட்டு கறியை அதிகமாக ஏற்றுமதி செய்யும் நாடாக இந்தியா உள்ளது. எதற்காக மாட்டுக்கறியை ஏற்றுமதி செய்கிறார்கள்?. இவ்வாறு அவர் கூறினார்.