Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மேற்கு வங்கத்தில் பாஜவின் வெற்றியை தடுக்க திரிணாமுல் கட்சிக்கு முஸ்லிம்கள் ஆதரவு

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் பாஜ கட்சியின் வெற்றியை தடுத்து நிறுத்துவதற்கு திரிணாமுல் கட்சிக்கு ஆதரவாக முஸ்லிம்கள் வாக்களிப்பார்கள் என்று சிறுபான்மையின தலைவர்கள் தெரிவித்தனர். மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் தனியாகவும், பாஜ தனியாகவும் தேர்தலில் போட்டியிடுகின்றன. காங்கிரஸ் மற்றும் இடது சாரிகள் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கின்றன.

இதைதவிர முஸ்லிம்கள் சார்ந்த இந்தியன் செக்யூலர் முன்னணியும் களம் காண்கிறது.

காஷ்மீர், அசாமுக்கு அடுத்தபடியாக மேற்கு வங்கத்தில்தான் முஸ்லிம் வாக்காளர்கள் அதிகம் உள்ளனர். 16 முதல் 18 தொகுதிகளில் முஸ்லிம்களின் வாக்கு வெற்றி தோல்வியை தீர்மானிக்கின்றது. ராமர் கோயில், குடியுரிமை திருத்த சட்டம் உள்பட பல்வேறு சர்ச்சைக்குரிய பிரச்னைகளை பாஜ எழுப்பி வருவதால் சிறுபான்மையினரின் வாக்குகள் சிதற கூடும். இந்த வாய்ப்பை பயன்படுத்தி சிறுபான்மையினர் பகுதிகளில் வெற்றி பெறுவதற்கு பாஜ வியூகம் வகுக்கலாம் என தெரிகிறது.

இந்நிலையில் மேற்கு இமாம்கள் சங்க தலைவர் முகமது யாஹ்யா,‘‘முர்ஷிதாபாத்,மால்டா, வடக்கு தினாஜ்பூர் தொகுதிகளில் மதசார்பற்ற கட்சிகள் தனித்தனியே வேட்பாளர்களை நிறுத்தியுள்ளதால் எந்த வேட்பாளருக்கு வாக்களிப்பது என்பதில் சிறுபான்மையினருக்கு குழப்பம் ஏற்படும். இந்த தொகுதிகளில் வாக்கு சிதறுவது பாஜவின் வெற்றிக்கு வழி வகுக்கும். 2019 தேர்தலில் சிறுபான்மையினர் வாக்குகள் சிதறியதால் வடக்கு தினாஜ்பூர்,மால்டா ஆகிய தொகுதிகளில் பாஜ வெற்றி பெற்றது.

பாஜவை வீழ்த்த முஸ்லிம்கள் அனைவரும் திரிணாமுல் கட்சிக்கு வாக்களிக்கும்படி மாநிலத்தில் உள்ள 40,000 மசூதிகளின் இமாம்கள் மூலம் மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்படும்’’ என்றார். மேற்கு வங்க சிறுபான்மையின இளைஞர் சங்கத்தின் பொது செயலாளர் முகமது கம்ரூஸ்ஸமான்,‘‘பாஜவை எதிர்க்க திரிணாமுல் கட்சி தான் மிகவும் வலுவான கட்சியாக இருக்கும்’’ என்றார்.