Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

முருக பக்தர்கள் மாநாட்டில் பெரியார், அண்ணா பற்றி வெளியிட்ட வீடியோவை துளியும் ஏற்க முடியாது: அதிமுகவுக்கு திடீர் ஞானோதயம்

சென்னை: இந்து முன்னணி நடத்திய முருக பக்தர்கள் மாநாட்டில் பெரியார், அண்ணா பற்றி வெளியிடப்பட்ட வீடியோவை துளியும் ஏற்றுக்கொள்ள முடியாது. அதற்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்துக்கொள்வதாக அதிமுக ஐடி விங்க் சார்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது.

முருக பக்தர்கள் மாநாட்டில் பெரியார், அண்ணாவை விமர்சித்து வெளியான வீடியோ தொடர்பாக அதிமுக ஐடி விங் எக்ஸ் தளத்தில் நேற்று வெளியிட்டுள்ள பதிவு:

அதிமுக என்றென்றும் திராவிடத்தின் உறைவிடமாகவே திகழும். ‘திராவிடத்தை அழிக்க முருகா வா’ என்று ஒட்டப்பட்ட போஸ்டர்களால் திராவிடம் அழிந்து விடுமா. திராவிடம் என்ற கொள்கையை தான் யாராவது அழித்துவிட முடியுமா. திராவிடம் என்பது எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையிலான, ஏழை எளிய மக்கள் ஏற்றம் பெற வேண்டும் என்ற நோக்கில் தமிழ்நாட்டை செலுத்திக் கொண்டிருக்கும் உயரிய கொள்கை நெறி. மக்களுக்கான ஒரு கொள்கையை யாரால் வீழ்த்த முடியும். பெரியார், அண்ணாவின் வாழ்வியல் உரத்தில் தழைத்தோங்கி நிற்கும் கொள்கையை, ஒரு மாநாடு சிதைத்து விடுமா என்ன. இல்லை, அப்படி நடக்க தான் அதிமுக விட்டுவிடுமா.

திராவிட கொள்கை எங்கள் குருதியில் கலந்த ஒன்று. ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்ற பேரறிஞர் அண்ணாவின் நெறிப்படி வாழ்பவர்கள் நாங்கள். ஒவ்வொருவருடைய தனிப்பட்ட கடவுள் நம்பிக்கைக்கும் மதிப்பளிக்கக்கூடிய இயக்கம் அதிமுக என்பதால் தான், கடவுள் பக்தியை பறைசாற்ற, அமைப்பு ரீதியாக நடத்தப்பட்ட மாநாட்டிற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஜனநாயக ரீதியாக வாழ்த்து தெரிவித்தார். எங்கள் இயக்கத்தை சேர்ந்த நிர்வாகிகளும், தனிப்பட்ட முறையில் முருக பக்தர்கள் என்ற அடிப்படையிலேயே அந்த மாநாட்டில் கலந்துகொண்டனரே தவிர எந்தவித அரசியல் நோக்கத்திலும் அல்ல. அந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களையோ, உறுதிமொழிகளையோ அதிமுகவை சேர்ந்த யாரும் ஏற்கவில்லை என்பதை திட்டவட்டமாக தெரிவித்துக்கொள்கிறோம்.

அதேபோல், அந்த மாநாட்டில் பெரியார், அண்ணா ஆகியோர் பற்றி வெளியிடப்பட்ட வீடியோ என்பது துளியும் ஏற்றுக்கொள்ள முடியாதது. அதற்கு அதிமுக சார்பில் எங்கள் கடுமையான கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறோம். உண்மையில் அப்படிப்பட்ட வீடியோ வெளியிட்டதாக எங்கள் கவனத்திற்கு வரவோ, நாங்கள் யாரும் பார்க்கவோ இல்லை. மாநாடு முடித்து வந்த பிறகே இதுபற்றிய செய்திகள் வாயிலாக தான் நாங்களும் அறிந்து கொண்டோம்.

ஜாதியின் பெயரால் மக்கள் பிரிந்து இருக்க, அந்த ஜாதிக்கு மூலமாக கடவுளை வைத்து சிலர் அரசியல் செய்ய, அந்த அரசியலை எதிர்க்கவே ‘கடவுள் மறுப்பு’ கொள்கையை ஆயுதமாக ஏந்தினார் பெரியார். பெரியாரின் கோபம் எப்போதும் கடவுள் மீது அல்ல; மாறாக, கடவுளின் பெயரைச் சொல்லி சிலரின் தவறான அரசியலால் ஏற்பட்ட கொடும் ஜாதிய பேதங்கள் மீது தான். ‘நான் பிள்ளையாரையும் உடைக்க மாட்டேன்; பிள்ளையாருக்கு தேங்காயும் உடைக்க மாட்டேன்’ என அரசையும், மதத்தையும் தெளிவாக வேறுபடுத்தி, மதச்சார்பின்மைவாதி அரசியலை முன்னெடுத்தவர்.

நாங்கள் பெயரில் மட்டுமல்ல, எங்கள் நெஞ்சங்களிலும் தாங்கும் இதயதெய்வம் அண்ணா.அதேபோல் கட்சியின் தலைமை நிலையச் செயலாளர் எஸ்.பி.வேலுமணி, தனது தொகுதிக்கு உட்பட்ட மிகவும் பழமைவாய்ந்த, பேரூர் ஆதீனத்தின் நூற்றாண்டு விழாவையொட்டி அளிக்கப்பட்ட அழைப்பினை ஏற்று கலந்துகொண்டதாகவும், ஆர்எஸ்எஸ் விழாவில் கலந்துகொள்ளவில்லை எனவும் தெளிவுபடுத்திவிட்டார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.