Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மும்பை - ஆர்சிபி இன்று பலப்பரீட்சை: 2வது வெற்றி யாருக்கு

மும்பை: ஐபிஎல் 17வது சீசனின் 25வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் இன்று மோதுகின்றன. புதிய கேப்டன் ஹர்திக் தலைமையிலான மும்பை அணி ஹாட்ரிக் தோல்வியில் சிக்கித் தவித்த நிலையில், டெல்லிக்கு எதிராக முதல் வெற்றியை பதிவு செய்து புள்ளிப் பட்டியலில் கணக்கை தொடங்கியது. இந்த நிலையில், 5வது லீக் ஆட்டத்தில் இன்று ஆர்சிபி சவாலை சந்திக்கிறது. ரோகித், இஷான், சூரியா, ஹர்திக், டிம் டேவிட், திலக் வர்மா, ரொமாரியோ என மும்பையின் அதிரடி பேட்டிங் வரிசை மிரட்டலாக அமைந்திருந்தாலும், இவர்கள் ஒருங்கிணைந்து விளையாடி பெரிய ஸ்கோர் அடித்தால் மட்டுமே ராயல் சேலஞ்சர்சை சமாளிக்க முடியும்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு களமிறங்கிய ‘ஸ்கை’ டக் அவுட்டானதால், இன்று கணிசமாக ரன் குவிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். பந்துவீச்சில் பும்ரா, முகமது நபி, ஜெரால்டு கோட்சீ சிறப்பாக செயல்பட்டு வரும் நிலையில், பியுஷ் சாவ்லா சுழல் அவ்வளவாக கை கொடுக்காதது மும்பை அணிக்கு பின்னடைவை கொடுத்துள்ளது.

மும்பையை போலவே டு பிளெஸ்ஸி தலைமையிலான ஆர்சிபி அணியும் தடுமாற்றத்தில் தான் உள்ளது. 5 போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிராக வெற்றியை பதிவு செய்த ஆர்சிபி அணி சென்னை, கொல்கத்தா, லக்னோ, ராஜஸ்தான் அணிகளிடம் மண்ணைக் கவ்வியது. தொடக்க வீரர் கோஹ்லி மட்டுமே தொடர்ந்து சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் நடப்பு தொடரின் முதல் சதத்தை பதிவு செய்த கோஹ்லி, இது வரை 316 ரன் குவித்து (சராசரி 105.33) ஆரஞ்சு தொப்பியை தன் வசம் வைத்துள்ளார்.

டு பிளெஸ்ஸி, மேக்ஸ்வெல், கிரீன், பட்டிதார், தினேஷ் கார்த்திக் என அதிரடி ஆட்டக்காரர்களுக்கு பஞ்சமில்லை என்றாலும், பெரிய பார்ட்னர்ஷிப் அமைப்பதில் கோட்டைவிட்டு வருகின்றனர். பந்துவீச்சிலும் ஆர்சிபி கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இரு அணிகளுமே 2வது வெற்றிக்காக வரிந்துகட்டுவதால், இன்றைய ஆட்டம் மிகவும் சுவாரசியமாக அமையும் என எதிர்பார்க்கலாம்.

* இரு அணிகளும் 32 முறை மோதியுள்ளதில் மும்பை 18, பெங்களூரு 14ல் வென்றுள்ளன.

* அதிகபட்சமாக பெங்களூரு 235, மும்பை 213 ரன் விளாசியுள்ளன. குறைந்தபட்சமாக பெங்களூரு 122, மும்பை 111 ரன்னில் சுருண்டுள்ளன.

* கடைசியாக மோதிய 5 ஆட்டங்களில் பெங்களூரு 4-1 என முன்னிலை வகிக்கிறது.