Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

முல்லைப் பெரியாறு அணையை இடித்துவிட்டு புதிய அணை கட்ட கேரளா அரசு முயற்சி: வைகோ கடும் கண்டனம்

சென்னை: முல்லைப் பெரியாறு அணையை இடித்துவிட்டு புதிய அணை கட்ட கேரளா அரசு முயற்சிக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை : கேரளா மாநில அரசு முல்லை பெரியாறு அணையை இடித்து விட்டு புதிய அணை கட்டுவது தொடர்பாக சுற்றுச்சூழல் தாக்க அறிக்கையை தயார் செய்ய மத்திய அரசின் சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழுவிடம் விண்ணப்பித்து கடந்த பிப்ரவரி மாதம் விண்ணப்பத்தை ஒன்றிய அரசிடம் அளித்ததாகவும், இந்த விண்ணப்பம் மே 28ம் தேதி மதிப்பீட்டு குழுவின் பரிசீலனைக்காக பட்டியலிடப்பட்டு இருக்கிறது என்று வெளிவந்துள்ள செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. முல்லை பெரியாறு புதிய அணைதொடர்பான விரிவான திட்ட அறிக்கையை 10 பேர் அடங்கிய சிறப்புகுழு தயார் செய்துள்ளது.

இதன்படி பழைய அணையை முழுமையாக இடித்துவிட்டு ரூ.1,300 கோடிமதிப்பீட்டில் புதிய அணை கட்டப்படும். அணை கட்டத் தொடங்கிய 5 ஆண்டுகளில் கட்டுமானப் பணிகள் நிறைவடையும். முல்லைப் பெரியாறு அணை உறுதியாக இருப்பதால், வேறு புதிய அணை கட்டத் தேவை இல்லை. நில நடுக்கம் ஏற்பட்டாலும முல்லைப் பெரியாறு அணைக்கு மட்டுமின்றி, அதன் அருகில் இருக்கும் பேபி அணை, இடுக்கி அணை மற்றும் வைகை அணைகளுக்கும் எந்தவிதப் பாதிப்பும் இல்லை. பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 152 அடியாக உயர்த்தினாலும் கூட எந்தப் பாதிப்பும் இருக்காது. அந்த அளவுக்கு முல்லைப் பெரியாறு அணை பலமாக உள்ளது’’ என்று நீதிபதி ஏ.எஸ்.ஆனந்த் தலைமையிலான ஐவர் குழு அறிக்கையில் தெளிவாகக் கூறி இருக்கின்றது. தலைமை நீதிபதி எச்.எல்.தத்து தலைமையிலான அரசியல் சாசன அமர்வு, 2014 டிசம்பர் 3ம் தேதி, கேரளாவின் மறு சீராய்வு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மேலும், “முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை உயர்த்திக்கொள்ள உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு சரியானதே.

அணையின் நீர் மட்டத்தை 142 அடி வரை தேக்கி வைக்கலாம். அதற்கு எந்தத் தடையும் இல்லை” என்று தனது முந்தைய தீர்ப்பை உறுதி செய்தது. இந்நிலையில், உச்ச நீதிமன்றத் தீர்ப்பை ஏற்காமல், கேரள மாநில அரசு புதிய அணை கட்டுவதற்கு ஆய்வுகள் மேற்கொள்வதும் , திட்ட அறிக்கையை தயாரித்து உள்ளதும் கண்டிக்கத்தக்கது. தமிழ்நாட்டை வஞ்சிக்கும் வகையில் ஒன்றிய அரசு செயல்படுவது கண்டனத்துக்குரியது. முல்லைப் பெரியாறு அணையை இடித்து விட்டு, உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக புதிய அணை கட்ட முயற்சிக்கும் கேரளா அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்து, கேரளா மாநில அரசின் திட்டத்தை தமிழ்நாடு அரசு முறியடிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.