Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

முல்லை பெரியாறு அணை விவகாரம் நிபுணர் குழு கூட்டம் ரத்து: தமிழ்நாடு அரசின் ஒப்புதல் இல்லாமல் ஆலோசனை நடத்த முடியாது, கேரள அரசுக்கு ஒன்றிய அரசு கண்டிப்பு

புதுடெல்லி: முல்லை பெரியாறில் கேரளா புதிய அணை கட்டும் விவகாரத்தில், தமிழ்நாடு அரசின் ஒப்புதலின்றி ஆலோசனை கூட்டத்தை நடத்த முடியாது என்று கூறி நேற்று நடைபெற இருந்த நிபுணர்கள் குழு கூட்டத்தை ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சகம் ரத்து செய்தது. இது தொடர்பாக கேரள அரசுக்கு ஒன்றிய அரசு கடிதம் அனுப்பியுள்ளது. தமிழ்நாடு, கேரளா இடையே முல்லை பெரியாறு அணை தொடர்பாக நீண்ட காலமாக பிரச்னை நீடித்து வருகிறது.

இந்த நிலையில் முல்லைப் பெரியாறு அணை பலவீனமாகிவிட்டது என்றும், இயற்கை சீற்றங்களால் அணை உடைந்தால் அதன் சுற்று வட்டாரத்திலுள்ள மக்கள் பாதிப்புக்குள்ளாவார்கள் என கேரள அரசு தொடர்ந்து தெரிவித்து வருகின்றது. மேலும் உடனடியாக முல்லைப் பெரியாறுக்கு பதிலாக புதிய அணை கட்ட வேண்டும் எனவும் கேரளா அரசு வலியுறுத்தி வருகிறது. குறிப்பாக முல்லைப் பெரியாறு அணை குறித்து ஏற்கனவே வல்லுனர்களை கொண்டு ஆய்வு நடத்தி உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து முல்லைப் பெரியாறு தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் கடந்த 2018ம் ஆண்டு பிறப்பித்திருந்த உத்தரவில், ‘‘முல்லைப் பெரியாறு அணை தொடர்பான விவகாரத்தில் ஒன்றிய அரசு, தமிழ்நாடு மற்றும் கேரள ஆகிய மூன்று மாநிலங்களும் தனித்தனியாக புதிய சிறப்புக்குழு ஒன்றை அமைக்க வேண்டும். இதில் இரு மாநிலங்களும் மத்திய குழுவுடன் ஒன்றிணைந்து அணை பேரிடர் மேலாண்மை திட்டத்தில் செயல்பட வேண்டும்.

மேலும் இதில் ஒன்றிய அரசு அமைக்கும் குழுவில் இரு மாநிலத்தை சேர்ந்த பிரதிநிதிகளும் இடம்பெற வேண்டும். மேலும் இயற்கை பேரிடர் வரும் காலத்தில் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் அவர்களை பாதுகாக்கும் விதமாக முன்னெச்சரிக்கை நட வடிக்கைகளை இந்த சிறப்பு குழு துரிதமாக மேற்கோள்ள வேண்டும். இதில் அணை முழு பாதுகாப்போடு இருப்பதால் முல்லைப் பெரியாறு பகுதியில் தற்போது இருக்கும் அணைக்கு பதிலாக புதிய அணை கட்ட வேண்டிய அவசியம் இல்லை என்று தெளிவாக தெரிவித்திருந்தது.

ஆனால் இதனையும் மீறி முல்லைப் பெரியாறு பகுதியில் புதிய அணை கட்ட கேரளா அரசுக்கு ஒன்றிய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இதையடுத்து இந்த நடவடிக்கைக்கு எதிராக ஒன்றிய அரசு மற்றும் கேரளா அரசுக்கு எதிராக தமிழ்நாடு அரசு கடந்த 2019ம் ஆண்டு ஜனவரி 4ம் தேதி தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தற்போது வரையில் நிலுவையில் இருக்கிறது.

இந்த சூழலில் முல்லைப் பெரியாறு பகுதியில் புதிய அணை கட்டுவது தொடர்பாக ஒன்றிய அரசு கொடுத்துள்ள ஒப்புதல் குறித்து உடனடியாக பரிசீலனை செய்ய வேண்டும் என்று கேரளா அரசு தரப்பில் ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் கடந்த மாதம் கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக மே 28ம் தேதி (நேற்று) நடக்கும் கூட்டத்தில் பரிசீலிக்கப்படும் என்று ஒன்றிய சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டு குழு தெரிவித்தது.

இதற்கு தமிழ்நாடு முழுவதும் பலத்த எதிர்ப்புகள் கிளம்பியது மட்டுமல்லாமல், போராட்டமும் நடந்து வருகிறது. இதுபோன்ற சூழலில் முல்லைப் பெரியாறு விவகாரம் தொடர்பாக கடந்த 25ம் தேதி தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சர் புபேந்திர யாதவுக்கு ஒரு கடிதம் எழுதி அனுப்பி இருந்தார். அதில், ‘‘உச்ச நீதிமன்ற உத்தரவை மீறி முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்ட ஆய்வு மேற்கொள்ளுமாறு கேரள அரசு விண்ணப்பித்துள்ளது.

இந்த கோரிக்கையை ஒன்றிய அரசு பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டதற்கு தமிழ்நாடு அரசு கடும் ஆட்சேபம் தெரிவித்துக் கொள்கிறது. எனவே முல்லைப் பெரியாறு பகுதியில் புதிய அணை கட்டும் முயற்சிக்கு கேரளாவிற்கு எந்தவித அனுமதியும் வழங்கக் கூடாது என்று திட்டவட்டமாக தெரிவித்திருந்தார். இந்த நிலையில், முல்லைப் பெரியாறு பகுதியில் புதிய அணை கட்டுவது தொடர்பாக ஒன்றிய அரசின் சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டு குழு தலைவர் சக்கரபாணி தலைமையில் நேற்று நடைபெறவிருந்த பரிசீலனை கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு கேரள அரசுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘‘முல்லைப் பெரியாறில் புதிய அணை குறித்த ஆலோசனை கூட்டம் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது. மறுதேதி பின்னர் தெரிவிக்கப்படும். இதில் நீர் மேலாண்மை விதிகளை மீறாத வகையில் தமிழ்நாடு மற்றும் கேரளா ஆகிய மாநில அரசுகள் ஒரு சுமூக உடன்படிக்கையோடு இருந்தால் மட்டுமே புதிய அணை குறித்து விவாதிக்கப்படும்.

குறிப்பாக தமிழ்நாடு ஒப்புதல் இல்லாமல் இந்த விவகாரத்தில் கேரளா அரசு தன்னிச்சையாக எந்த முடிவையும் மேற்கொள்ள இயலாது. மேலும் முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் தமிழ்நாடு அரசு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், அவர்களது ஒப்புதல் இல்லாமல் புதிய அணை குறித்து ஆலோசனை நடத்த முடியாது. இதுகுறித்து கேரளா அரசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தெரிவித்தனர்.

* அணை முழு பாதுகாப்போடு இருப்பதால் முல்லைப் பெரியாறு அணைக்கு பதிலாக புதிய அனை கட்ட வேண்டிய அவசியம் இல்லை என

உச்ச நீதிமன்றம் தீர்ப்பு.

* இதை மீறி புதிய அணை கட்ட கேரளா முயற்சி.

* அதற்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்குவது குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று நடப்பதாக இருந்தது.

* எதிர்ப்பு தெரிவித்து ஒன்றிய அமைச்சருக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதினார்.

* கூட்டம் ரத்து செய்யப்பட்டதாக ஒன்றிய அரசு அறிவிப்பு.