Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

எம்பி தேர்தலில் அதிமுக 3ம் இடம் ஏன்? சிறுபான்மையினர் நம்பிக்கைக்கு உரியவர்களா எங்கள நினைக்கல: செல்லூர் ராஜூ பகீர் பதில், அதிமுக தொண்டர்கள் அதிர்ச்சி

மதுரை: மதுரையில் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக மூன்றாமிடம் பிடித்தது குறித்து செல்லூர் ராஜூ ‘சிறுபான்மையினர் எங்கள நம்பிக்கைக்குரியவர்களா நினைக்கல’ என்று கூறியது அதிமுக தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் முதல்வர் காமராஜரின் பிறந்தநாளை முன்னிட்டு, மதுரை கீழவாசலில் உள்ள அவரது சிலைக்கு, முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் அதிமுகவினர் நேற்று மாலை அணிவித்தனர். பின்னர் செல்லூர் ராஜூவிடம் நிருபர்கள், ‘‘கட்சி நிர்வாகியிடம் நீங்கள் பேசிய ஆடியோ பேச்சு பெரிய விஷயமாகி இருக்கிறதே?’’ என்றதற்கு, அவர், ‘‘நான் நேற்று வெளிய ஒரு இடத்துல இருந்தேன்.

எங்க தலைவரே தொடர்பு கொண்டார். தெரியல... நான் பார்த்து தகவல் சொல்றேன்..’’ என பதற்றத்துடன் பதில் தந்தார். தொடர்ந்து நிருபர்கள், ‘உங்கள் குரல்தாங்க அது..’ என்றனர். ‘‘அதாங்க... என்னன்னு பார்த்துட்டு நான் தகவல் சொல்றேன்...’’ என்றபடி அடுத்த விஷயத்திற்கு தாவினார். தொடர்ந்து செல்லூர் ராஜூ நிருபர்களிடம் கூறும்போது, ‘‘பாராளுமன்ற தேர்தலில் நாங்களும் கூவிக்கூவித்தாம்பா அழைச்சோம். வேகாத வெயில்ல வேட்பாளர் சரவணனுக்காக ஓட்டுக்கேட்டோம். ஓட்டுக்கேட்டதில் ஏதும் கம்மியா இருந்துச்சா? அதிமுக தொண்டர்கள் பம்பரமாகத்தான் பணியாற்றினர்.

இதுக்கு மேல ஒருத்தர் எப்படி ஒரு கட்சியில் வேலை பார்க்க முடியும்? எதிர்க்கட்சிகள் நல்லாத்தான் வேலை பார்த்தாங்க... எல்லோரும் நல்லாத்தான் வேலை பார்த்தாங்க. ஓரளவுக்கு 2வது இடத்துல வந்திருக்கோம், அதிகமான ஓட்டு வாங்கி இருக்காங்க.. மத்த இடங்கள்ல இதைக்காட்டிலும் கம்மியா இருக்கு.. அதைப்பற்றியெல்லாம் கவலை இல்லை..’’ என்றார். நிருபர்கள், ‘‘எதிர்கட்சிகள் நல்லா வேலை பார்த்தாங்களா? என்ன சொல்றீங்க..

நீங்கள் 3ம் இடத்திற்கல்லவா போயிருக்கிறீர்கள்? அதுதான் கேள்வி’’ என்றதும், சமாளித்தபடி செல்லூர் ராஜூ, ‘‘அதான் 3வது இடம்தான். அதிமுகவின் கோட்டை மதுரைன்னு எங்களுக்கே தெரியும். இது எங்களுக்கு மனஉளைச்சல்தான். மக்கள் இந்த மாதிரி முடிவெடுத்துட்டாங்களே? சவுராஷ்டிரர்கள், வடமாநிலத்தவரான சேட்டுகள், பிராமணர்கள்னு சில சமூகங்கள் இந்தியாவை ஆளக்கூடிய பிரதமர் மோடின்னு நினைச்சு ஓட்டுப் போட்டாங்க.

அதேமாதிரி, சிறுபான்மையினர் ஒரு நம்பிக்கைக்குரியவர்களாக எங்களை அவங்க நினைக்கல. ராகுல் காந்திக்கு வாக்களித்தனர். இதில் அதிமுகவினர் நாங்கள் அடிபட்டு விட்டோம். பல இடங்களில் நாங்கள் தோல்வியை தழுவினோம், பல இடங்களில் இரண்டாவது இடம் பெற்றோம். இதுகுறித்தும், என்னைப்பற்றிய ஆடியோ குறித்தும் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எதுவும் கூறவில்லை. ஆலோசனைதான் வழங்கினாரே தவிர வேறு ஒன்றும் இல்லை’’ என்றார்.