புதுடெல்லி: 2024ம் ஆண்டில் இந்தியாவில் கூகுள் மூலம் அதிகம் தேடப்பட்ட நபர் பட்டியலை கூகுள் ட்ரெண்ட்ஸ் வெளியிட்டுள்ளது. அதில் ஒலிம்பிக் மல்யுத்த வீராங்கனையும், அரியானா சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு எம்எல்ஏவாக தேர்வு பெற்றவருமான வினேஷ் போகத் முதலிடம் பிடித்துள்ளார். 2வது இடத்தை பீகார் முதல்வர் நிதிஷ்குமாரும், 3வது இடத்தை ஒன்றிய அமைச்சர் சிராக் பாஸ்வானும் பிடித்துள்ளனர். அதை தொடர்ந்து கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா 4வது இடத்தையும், நடிகராக இருந்து அரசியல்வாதியாக மாறி ஆந்திரா துணை முதல்வராக உள்ள பவன் கல்யாண் 5 வது இடத்தையும் பிடித்துள்ளனர்.
அதை தொடர்ந்து 6 வது இடத்தில் கிரிக்கெட் வீரர்கள் ஷஷாங்க் சிங், 7 வது இடத்தில் கிரிக்கெட் வீரர் அபிஷேக் ஷர்மா ஆகியோர் கூகுள் மூலம் அதிகம் தேடப்பட்டுள்ளனர். கர்ப்பப்பை வாய் புற்றுநோய் விழிப்புணர்வு செய்தியை பரப்ப மரணம் அடைந்ததாக செய்தியை பரப்பி, அதன்பின் மன்னிப்பு கேட்ட மாடலும் நடிகையுமான பூனம் பாண்டே 8வது இடத்திலும், ஜூலை மாதம் தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகனை மணந்த ராதிகா மெர்ச்சண்ட் 9வது இடத்தையும், பாரிஸ் ஒலிம்பிக்கில் நான்காவது இடத்தைப் பிடித்த பேட்மிண்டன் நட்சத்திரம் லட்ச சேனா 10வது இடத்தையும் பிடித்துள்ளனர்.


