Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சடலங்களை பதப்படுத்தும் குளிர்சாதன பெட்டிகளை வாடகைக்கு பெறும் வசதி: மாநகராட்சி அறிமுகம்

சென்னை: இந்தியாவிலேயே முதன்முறையாக சடலங்களை பதப்படுத்தி வைக்கும் குளிர்சாதன பெட்டிகளை, தனியார் பங்களிப்புடன் வாடகைக்கு வழங்கும் வசதியை சென்னை மாநகராட்சி அறிமுகப்படுத்தியுள்ளது.

சென்னையில் மாநகராட்சிக்கு சொந்தமான 209 மயானங்கள் உள்ளன. மேலும், இறந்த உடல்களை எரித்தல் மற்றும் புதைக்கும் சேவைகள் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் மூலம் சிபிசிஎல் நகர், புழல், ஜி.கே.எம் காலனி உள்ளிட்ட 14 மயானங்களில் மின் தகன மேடைகள், ₹5 கோடியே 67 லட்சம் செலவில் எல்பிஜி தகன மேடைகளாக மாற்றப்பட்டுள்ளன.

இந்நிலையில் சென்னை அண்ணாநகர் ஆர்டிஒ அலுவலகம் புதிய ஆவடி சாலையில் உள்ள வேலங்காடு மயானம் அருகே தனியார் பங்களிப்புடன், இறந்த உடல்களை பதப்படுத்தி வைக்கும் குளர்சாதன பெட்டியை வாடகைக்கு வழங்கும் வசதியை சென்னை மாநகராட்சி அறிமுகப்படுத்தியுள்ளது.

இங்கு ஒரே நேரத்தில் 12 உடல்களை வைக்கும் வகையில், 2 ஆயிரத்து 400 சதுர அடி நிலத்தில் ₹1 கோடி செலவில் இந்த பிரீஸர் பாக்ஸ் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த பிரீஸர் பாக்ஸில் சடலங்களை வைக்க ஒரு நாள் வாடகையாக ₹3 ஆயிரத்து 500 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தனியார் அமைப்புடன் அடுத்த 8 ஆண்டுகளுக்கு இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

இதில், மைனஸ் 15 டிகிரியில், 7 அடி நீளம், 200 கிலோ எடை, அதிகபட்சம் 7 நாட்கள் வரை உடல்களை வைக்க முடியும். எம்பாமிங் செய்த உடல்களை 40 நாட்கள் வரை கூட வைக்கும் வசதி செய்யப்பட்டுள்ளது. உடல்களை பிரீஸர் பாக்ஸில் வைப்பதைப் போலவே, அஸ்திகளை வைக்கும் லாக்கர் வசதியும் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த லாக்கரில் 1 வருடம் வரை அஸ்தியை பாதுகாப்பாக வைக்க முடியும். இதற்கு நாளொன்றுக்கு ₹100 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

பிரீஸர் பாக்ஸ் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ள பகுதியில் 100 முதல் 150 பேர் அமர்ந்து இறுதிச் சடங்குகள் செய்ய நவீன அறையும் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு கட்டணமாக ₹7ஆயிரத்து 500 வசூலிக்கப்படுகிறது. சோதனை முறையில் அண்ணா நகரில் தொடங்கப்பட்டுள்ள இந்த வசதியை பிற இடங்களுக்கும் விரிவுபடுத்துவது குறித்து மாநகராட்சி பணிகளை மேற்கொண்டு வருகிறது.