Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

மொரார்ஜி தேசாய் சாதனையை முறியடிக்கும் நிர்மலா சீதாராமன்; நாளை ஒன்றிய பட்ஜெட் தாக்கல்.! 4 மாநில பேரவை தேர்தல் வருவதால் சலுகைகள் எதிர்பார்ப்பு

புதுடெல்லி: நாளை ஒன்றிய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நிலையில், மொரார்ஜி தேசாய் சாதனையை நிர்மலா சீதாராமன் முறியடிக்க உள்ளார். மகாராஷ்டிரா உட்பட 4 மாநில பேரவை தேர்தல் வருவதால் பட்ஜெட்டில் சலுகைகள் எதிர்பார்க்கப்படுகிறது. நாடாளுமன்ற 18வது மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றதையடுத்து பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை கடந்த மாதம் பதவியேற்றது. இதையடுத்து நாளை (ஜூலை 23) 2024-25 நிதியாண்டுக்கான முழு பட்ஜெட்டை ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். நாடு சுதந்திரம் அடைந்து பிரதமராக நேரு பதவியேற்ற பின்பு முதல் பட்ஜெட்டை நிதியமைச்சர் ஆர்.கே.சண்முகம் தாக்கல் செய்தார்.

முன்னாள் பிரதமர்கள் நேரு, லால் பகதூர் சாஸ்திரி தலைமையிலான அமைச்சரவையில் நிதி அமைச்சராகப் பதவி வகித்த போது மொரார்ஜி தேசாய் ஒட்டுமொத்தமாக 10 முறை பட்ஜெட் தாக்கல் செய்து, அதிக முறை பட்ஜெட் தாக்கல் செய்தவர் என்ற பெருமையை பெற்றார். அவருக்கு அடுத்தபடியாக காங்கிரஸ் மூத்த தலைவரான முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் ஒட்டுமொத்தமாக 9 முறை பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார். இவர் 2004 முதல் 2008 வரை தொடர்ச்சியாக 5 முறை பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார். முன்னாள் குடியரசுத் தலைவரான பிரணாப் முகர்ஜி 8 முறை பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார்.

அதேபோல் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் 1991 முதல் 1995 வரையிலான காலகட்டத்தில் தொடர்ந்து 5 முறை பட்ஜெட் தாக்கல் செய்தார். இந்நிலையில் பிரதமர் மோடியின் இரண்டாவது பதவிக் காலத்தில் நாட்டின் முழுநேர நிதியமைச்சராக நிர்மலா சீதாராமன் கடந்த 2019ம் ஆண்டு நியமிக்கப்பட்டார். அப்போது தனது முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதன்பின்பு தொடர்ந்து 4 முழு பட்ஜெட்டையும், கடந்த பிப்ரவரியில் இடைக்கால பட்ஜெட்டையும் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இந்நிலையில் நாளை ஏழாவது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ள நிர்மலா சீதாராமன், தொடர்ச்சியாக 5 முறை முழு பட்ஜெட்டும், ஒருமுறை இடைக்கால பட்ஜெட்டும் தாக்கல் செய்த முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாயின் சாதனையை முறியடிக்கவுள்ளார். கடந்த 2020ம் ஆண்டு பட்ஜெட் தாக்கல் செய்தபோது 2 மணி நேரம் 40 நிமிஷங்களுக்கு நிர்மலா சீதாராமன் உரையாற்றினார்.

இதுவே பட்ஜெட் தாக்கலின்போது நிதியமைச்சர் ஒருவர் நிகழ்த்திய உரைகளில் மிக நீளமானதாகும். நடப்பாண்டு இறுதியில் மகாராஷ்டிரா, அரியானா, ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் சட்டப் பேரவைத் தேர்தல்கள் நடைபெறவுள்ளன. அத்துடன் ஜம்மு - காஷ்மீருக்கான பேரவை தேர்தலும் நடைபெற வாய்ப்புள்ளது. இந்தச் சூழலில், மக்களவைத் தேர்தலையடுத்து ‘கூட்டணி’ ஆட்சியில் தாக்கல் செய்யப்படும் இந்த முழு பட்ஜெட்டில், பல்வேறு மாநிலங்களின் கோரிக்கைகளை உள்ளடக்கிய சமூக-பொருளாதாரம் சார்ந்த முக்கிய அறிவிப்புகள் இடம்பெறும் எனக் கூறப்படுகிறது. பேரிடர் மேலாண்மை திருத்த மசோதா, வானூர்தி சட்டத்துக்கு மாற்றான சட்ட மசோதா, நிதி மசோதா-2024 உள்பட 6 புதிய மசோதாக்கள் பட்ஜெட் கூட்டத் தொடரில் அறிமுகப்படுத்தப்படவுள்ளன.