Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

அதிமுக ஆட்சியில் கிடப்பில் போடப்பட்ட மூல வைகை அணை திட்டம் செயல்படுத்தப்படுமா?

Moola vaigai, Theni*விவசாயிகள், பொதுமக்கள் எதிர்பார்ப்பு

வருசநாடு : தேனி மாவட்டத்தில் பொதுமக்களுக்கு முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்குவது மூல வைகை ஆறு. இப்பகுதியில் 1984ம் ஆண்டு மூல வைகை அணை திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது. இதுகுறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வாலிப்பாறை மலைப்பகுதிக்கு இடைப்பட்ட மலைக்கிராம பகுதிகளில் அடிக்கல் நாட்டு விழாவும் நடைபெற்றது.

அப்போதிருந்த அதிமுக ஆட்சி இத்திட்டத்திற்காக முன்னெடுப்பு பணிகள் எதுவும் எடுக்காததால், இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது. இதனால், இப்பகுதி விவசாயிகளும், பொதுமக்களும் மிகவும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். மேலும், ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலங்களில் வருகின்ற ஆற்று தண்ணீர் விவசாயத்திற்கு பயன்படாமல் வீணாகி வருகிறது.

எனவே, தண்ணீரை பாதுகாப்பதற்கும் புதியதாக மூல வைகை அணை கட்ட வேண்டும் என இப்பகுதி விவசாயிகளும் பொதுமக்களும் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதுகுறித்து அதிமுக ஆட்சியில் பலமுறை கோரிக்கை வைத்தும், ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என விவசாயிகள் கூறுகின்றனர்.

எனவே இப்பகுதி விவசாயிகள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கிணற்று நீர் பாசனங்கள் ஆழ்துளை கிணற்றுப் பாசனங்கள் இதுபோன்ற பாசங்களின் மூலம் மிகவும் பாதிப்படைந்து விவசாயம் செய்ததாகவும் கூறினர். இதனை தொடர்ந்து டெல்லி, சென்னை போன்ற பகுதிகளிலிருந்து சிறப்புக்குழு ஒன்று மூல வைகை ஆற்றை சில ஆண்டுகளுக்கு முன்பு ஆய்வு பணியை மேற்கொண்டது.

ஆனால், விரைவில் இந்த திட்டத்தின் மூலம் புதிய மூல வைகை அணை திட்டத்தை நிறைவேற்றி விடுவோம் என அதிகாரிகள் கூறிச் சென்றார்கள். ஆனால், அப்போதிருந்த அதிமுக ஆட்சியால் அலட்சியத்தால், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் காலம் தாழ்த்தி கிடப்பில் போடப்பட்டது.இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘‘வருசநாடு பகுதியில் விவசாயமே பிரதான தொழிலாக உள்ளது. இப்பகுதியில் மலையும், மலை சார்ந்த 150க்கும் மேற்பட்ட குக்கிராமங்கள் உள்ளது.

மேலும் மூல வைகை ஆற்றில் புதிய அணை கட்ட வேண்டும் என்பது இப்பகுதி விவசாயிகளின் நீண்ட கால கோரிக்கையாக உள்ளது. ஆனால் அதிமுக ஆட்சியில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, இப்பகுதியில் குடிநீர் சப்ளைக்கும், விவசாயத்திற்காகவும் புதியதாக மூல வைகை அணை கட்ட வேண்டும்.’’ என்றனர்.இதுகுறித்து வருசநாடு மக்கள் கூறுகையில், ‘‘தேனி மாவட்டத்தில் விவசாயிகள் நலன் சார்ந்த திட்டங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. குறிப்பாக நீர்நிலைகளை காக்கும் திட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது.

நீர்வரத்து கால்வாய்கள் மற்றும் கண்மாய், குளம் உள்ளிட்ட நீர்நிலைகளை தூர்வாரும் பணிகள் கடந்த அதிமுக ஆட்சியில் ஆமை வேகத்தில் இருந்தது, தற்போது ராக்கெட் வேககத்தில் படுஜோராக நடந்து வருகிறது. கடமலை மயிலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 18 ஊராட்சி மன்றங்கள் உள்ளது.

இந்த ஊராட்சி பகுதிகளில் பல கண்மாய்கள் உள்ளது. இந்த கண்மாய்களுக்கு மூல வைகை ஆற்றில் இருந்து கால்வாய் அமைத்து தண்ணீரை கொண்டு சென்றால் இப்பகுதிகளில் எப்போதும் குடிநீர் பஞ்சம் வராது. இதற்கு பல முறை அதிமுக அரசிடம் முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

வருசநாடு சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ‘‘கடமலை மயிலை ஒன்றியத்தில் மழைக்காலங்களில் மூல வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு அதிகம் ஏற்படுகிறது. ஆனால் தண்ணீர் வீணாக கடலில் கலக்கிறது. எனவே இப்பகுதி விவசாயிகளும், பொதுமக்களும் பயன்பெறும் வகையில், மூல வைகை அணை திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.

மேலும் இப்பகுதி சுற்றுலாத்தலமாக மாற்றினால் பல லட்சம் ரூபாய் வருவாயையும் ஈட்ட முடியும். இதற்கு மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து பாதுகாக்க வேண்டும், என்றார்.இதுகுறித்து ஆண்டிபட்டி திமுக எம்எல்ஏ மகாராஜன் கூறுகையில், இது சம்பந்தமாக தமிழக முதலமைச்சரிடம் பேசி முறையான பணிகள் நடைபெறும். அதற்காக திமுக அரசு எப்போதும் உறுதுணையாக இருக்கும், என்றார்.

தமிழக நீர்வளம் பாதுகாப்பு குழு மாவட்ட செயலாளர் அங்குசாமி கூறுகையில், ‘‘கடமலை மயிலை ஒன்றியத்தில் மழைக்காலங்களில் மூல வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு அதிகம் ஏற்படுகிறது ஆனால் தண்ணீர் வீணாக கடலில் கலக்கிறது.எனவே இப்பகுதிகளில் ஒவ்வொரு விவசாயிகளும் பொதுமக்களும் பயன்படுமாறு மூல வைகை அணை திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.அவ்வாறு செய்தால் கடமலை மயிலை ஒன்றியத்தில் எப்போதும் குடிநீர் பஞ்சம் வராது . மேலும் இப்பகுதி மாபெரும் சுற்றுலாத்தலமாக அரசு அமைத்தால் பல லட்சம் ரூபாய் வருவாயையும் ஈட்ட முடியும். இதற்கு தேனி மாவட்ட நிர்வாகமும் தற்போதைய திமுக அரசும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.’’என்றனர்.