Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

வடகிழக்கு பருவமழை காலத்திற்கு முன் மாநகராட்சி, நகராட்சிகளில் வெள்ள அபாய பகுதிகளில் பணிகளை முடிக்க வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

சென்னை: வடகிழக்கு பருவமழை காலத்துக்கு முன்பே மாநகராட்சிகள், நகராட்சிகளில் வெள்ள அபாயம் இருக்கிற பகுதிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, முதலில் அங்கு நடைபெறும் பணிகளை முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாட்டில் உள்ள 25 மாநகராட்சிகள், 144 நகராட்சிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் அடிப்படை பணிகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நேற்று தலைமை செயலகத்தில் நடந்தது. கூட்டத்தில், முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

தமிழ்நாட்டில் அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு உட்கட்டமைப்பு உருவாக்கம் மற்றும் பராமரிப்பு பணிகளை விரைந்து நிறைவேற்றிட வேண்டும். குறிப்பாக, மழைநீர் வடிகால் பணிகள், குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் மற்றும் சாலைப் பணிகள் ஆகியவற்றை விரைந்து முடிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.

நகர்ப்புற உள்ளாட்சிகளில் திடக்கழிவு மேலாண்மை, குடிநீர் விநியோகம், துப்புரவு பணி மற்றும் தெருவிளக்குகள் பராமரிப்பு பணிகளை திறம்பட மேற்கொள்ள வேண்டும். சட்டமன்ற அறிவிப்புகளில் வெளியிடப்பட்டுள்ள பணிகளை விரைந்து முடித்திட வேண்டும். இந்த பணிகளை நிர்ணயிக்கப்பட்ட கால அளவிற்குள் நிறைவேற்றி, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும். கடந்த 4 ஆண்டுகளில் 8 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமான செலவில் 15 ஆயிரம் கிலோமீட்டருக்கும் அதிகமான சாலை மேம்பாட்டு பணிகளை மேற்கொண்டுள்ளது.

கடந்த 4 ஆண்டுகளில் நகர்ப்புற மக்களுக்கு பயனளிக்கக்கூடிய பல்வேறு உட்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளான மெட்ரோ ரயில் திட்டங்கள், புதிய குடிநீர் திட்டங்கள், மழைநீர் வடிகால் பணிகள் போன்ற பல்வேறு முக்கிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாநகராட்சிகளில் 3,199 பணிகளும், நகராட்சிகளில் 4,972 பணிகளும் தொடங்கப்பட உள்ளது. இந்த பணிகள் அனைத்தையும் விரைவில் தொடங்கி, வடகிழக்கு பருவமழை காலத்துக்கு முன்பே முடிக்க வேண்டும்.

அதேபோன்று, இறுதிக்கட்டத்தில் இருக்கின்ற பணிகள், பாதி முடிவுற்ற பணிகளையெல்லாம் போர்க்கால அடிப்படையில செய்து முடித்திட, மின் வாரியம், குடிநீர் வழங்கல் வாரியம், நெடுஞ்சாலைகள் துறை, மாநகராட்சி நிர்வாகங்கள் ஒருங்கிணைப்புடன் செயல்பட வேண்டும். பருவமழை காலம் தொடங்குவதற்கு முன்பே மழைநீர் வடிகால்கள் சுத்தம் செய்யப்பட்டு தண்ணீர் வெளியேற வழி ஏற்படுத்த வேண்டும்.

குறிப்பாக தாழ்வான பகுதிகள், வெள்ள அபாயம் இருக்கின்ற பகுதிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, முதலில் அங்கு பணிகளை முடிப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு, தலைமை செயலாளர் முருகானந்தம், நிதித்துறை செயலாளர் உதயச்சந்திரன், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர் கார்த்திகேயன், சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன், மாநகராட்சி ஆணையர்கள், துணை ஆணையர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

* நகர்ப்புற உள்ளாட்சிகளில் திடக்கழிவு மேலாண்மை, குடிநீர் விநியோகம், துப்புரவு பணி மற்றும் தெருவிளக்குகள் பராமரிப்பு பணிகளை திறம்பட மேற்கொள்ள வேண்டும்.

* சட்டமன்ற அறிவிப்புகளில் வெளியிடப்பட்டுள்ள பணிகளை நிர்ணயிக்கப்பட்ட கால அளவிற்குள் நிறைவேற்றி, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும்.

* கடந்த 4 ஆண்டுகளில் 8 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமான செலவில் 15 ஆயிரம் கிலோமீட்டருக்கும் அதிகமான சாலை மேம்பாட்டு பணிகளை மேற்கொண்டுள்ளது.