பொள்ளாச்சி : பொள்ளாச்சி சுற்றுவட்டார கிராமங்களில் மானாவாரி பயிர்களான மக்காசோளம், பருத்தி, நிலக்கடலை, தட்டைபயிர் உள்ளிட்டவை ஒவ்வொரு ஆண்டும் சித்திரை, ஆடி மற்றும் தைப்பட்டத்தை எதிர்நோக்கி சாகுபடி செய்யப்பட்டு குறிப்பிட்ட நாட்களில் அறுவடை செய்யப்படுகிறது. மேலும் தென்மேற்கு பருவமழை மற்றும் வடகிழக்கு பருவமழை காலங்களில் விவசாயிகள் தங்கள் நிலங்களை உழுது மானாவாரி பயிடும் பணியில் ஈடுபடுகின்றனர்.
இந்த ஆண்டில் ஏப்ரல் மாதத்தில் கோடை மழை குறைவாக இருந்தாலும், கடந்த மே மாதம் இறுதியிலிருந்து தென்மேற்கு பருவமழைப்பொழிவு தொடர்ந்திருந்தது. இதை தொடர்ந்து, ஆடிப்பட்டத்தை எதிர்நோக்கி விவசாயிகள் தங்கள் விளை நிலங்களில் மானாவாரி பயிர் சாகுபடியில் அதிகளவு ஈடுபட்டுள்ளனர். இதில் அதிகபடியாக நிலக்கடலை மற்றும் தட்டை பயிர் விதைப்பு பணியை மேற்கொள்கின்றனர்.
விவசாயிகள் கூறுகையில், ‘‘பொள்ளாச்சியில் தென்னை சாகுபடி இருந்தாலும், இதற்கு அடுத்தப்படியாக காய்கறி மற்றும் மானாவாரி சாகுபடி அதிகளவு உள்ளது. தென்மேற்கு பருவமழை பெய்ததால், பெரும்பாலான கிராமங்களில் நிலங்களை உழுது பயிர் சாகுபடியில் விவசாயிகள் தீவிரம் காட்டியுள்ளனர். இந்த மழை தொடர்ந்து பெய்தால், அடுத்தடுத்து பயிர் சாகுபடி மேற்கொள்ள ஏதுவாக இருக்கும்’’ என்றனர்.