Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மோடியின் சீன உத்தரவாதம் லடாக் மக்களுக்கு துரோகம்: கார்கே சாடல்

புதுடெல்லி: ‘சீனாவுடன் எல்லை பிரச்னையை கையாள்வதில் நாட்டின் பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் தேசிய பாதுகாப்பை ஆபத்தில் ஆழ்த்திய மோடி அரசு, லடாக் குடிமக்களின் அரசியலமைப்பு உரிமைகளை காக்கத் தவறி துரோகம் செய்துவிட்டது’ என காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே குற்றம்சாட்டி உள்ளார். கடந்த 2019ம் ஆண்டு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370வது சட்டப்பிரிவை ரத்து செய்த ஒன்றிய அரசு காஷ்மீரையும், லடாக்கையும் தனித்தனி யூனியன் பிரதேசமாக பிரித்தது. அரசியலமைப்பு சட்டத்தின் 6வது அட்டவணையின்படி அசாம், மேகாலயா, திரிபுரா மற்றும் மிசோரமில் பழங்குடியின பகுதிகளில் தன்னாட்சி மாவட்ட கவுன்சில் மூலம் நிர்வாகம் செய்யக் கூடிய சிறப்பு சலுகை வழங்கப்பட்டுள்ளது.

ஆனால், அந்த அரசியலமைப்பு உரிமையை வழங்காமல், லடாக்கை தனி மாநிலமாக்காமல் ஒன்றிய பாஜ அரசு தங்களை வஞ்சித்து விட்டதாக அங்குள்ள மக்கள் சமீபத்தில் போராட்டம் நடத்தினர். ஒன்றிய அரசுடனான பேச்சுவார்த்தையை தொடர்ந்து போராட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே நேற்று தனது டிவிட்டர் பதிவில், ‘‘மோடியின் சீன உத்தரவாதம்! லடாக்கில் அரசியலமைப்பு உரிமைகளை கோரி பலதரப்பு மக்களும் போராடுகின்றனர். ஆனால் மற்ற அனைத்து உத்தரவாதங்களைப் போலவே லடாக் மக்களுக்கு அரசியலமைப்பு உரிமைகளை உறுதிப்படுத்தும் மோடியின் உத்தரவாதமும் ஒரு மாபெரும் துரோகமாக உள்ளது.

இது போலியான, சீன தயாரிப்பை போன்றதைத் தவிர வேறில்லை. சீனா உடனான எல்லை பிரச்னையில் கல்வான் பள்ளத்தாக்கில் நமது 20 துணிச்சல் மிகு வீரர்களை தியாகம் செய்து, நமது நிலத்தை அபகரிக்க சீனாவுக்கு வாய்ப்பளித்த பாஜ அரசு நாட்டின் பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் தேசிய பாதுகாப்பை ஆபத்தில் ஆழ்த்தி உள்ளது. மறுபுறம் லடாக் மக்களின் அரசியலமைப்பு உரிமைகள் மீது தாக்குதல் நடத்துகிறது’’ என குற்றம்சாட்டி உள்ளார்.