Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மோடி ஆட்சியில் கோடி கோடியாக கொள்ளையடித்த கும்பல்: மருத்துவ கல்லூரிகளில் நடந்த மெகா மோசடி; நாடு முழுவதும் அதிரடியாக 35 பேரை கைது செய்தது சிபிஐ

* ஒன்றிய சுகாதார அமைச்சகத்திலேயே ஊழல் பெருச்சாளிகள்

* சாமியார் முதல் உயர் அதிகாரிகள் வரை விரியும் நெட்வொர்க்

புதுடெல்லி: இந்திய வரலாற்றிலேயே மிகப்பெரிய மருத்துவக் கல்லூரி ஊழலை சிபிஐ கண்டறிந்துள்ளது. மருத்துவக் கல்லூரிகளில் நடத்தப்படும் ஆய்வு குறித்து ரகசிய தகவல் கூறவும், போலியான அறிக்கைகளை தயார் செய்யவும் ஒன்றிய சுகாதார அமைச்சகத்திலேயே ஊழல் பெருச்சாளிகள் பெரிய நெட்வொர்க் அமைத்து பல கோடிகளை சுருட்டியது தெரியவந்துள்ளது. இந்த ஊழலில் சாமியார் முதல் உயர் அதிகாரிகள் வரை பலர் சிக்கியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மருத்துவ கல்லூரிகளில் போதிய கல்வித் தரம் உள்ளதா, போதுமான ஆசிரியர்கள் இருக்கிறார்களா, அவர்களின் வருகைப்பதிவு சரியாக உள்ளதா, தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் உள்ளதா என்பதை தேசிய மருத்துவ கவுன்சில் (என்எம்சி) அவ்வப்போது ஆய்வு செய்து ஒன்றிய சுகாதார அமைச்சகத்திற்கு அறிக்கை சமர்பிக்கும். அந்த அறிக்கையின் அடிப்படையில் போதிய வசதிகள் இல்லாத, விதிமுறை மீறும் மருத்துவக் கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இதே போல புதிதாக தொடங்கப்படும் கல்லூரிகளிலும் என்எம்சி அதிகாரிகள் ஆய்வு செய்து அனுமதி சான்றிதழ் வழங்க பரிந்துரை செய்வார்கள்.

இந்நிலையில், இந்த ரகசிய ஆய்வு விவகாரத்தில் பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியில் ஒன்றிய சுகாதார அமைச்சகத்திலேயே பல உயர் அதிகாரிகள் சிண்டிகேட் அமைத்து மோசடி செய்து பல கோடி ரூபாய்களை சுருட்டிய விவகாரம் தற்போது வெளிச்சத்திற்கு வந்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவின் மருத்துவக் கல்வி முறையில் பெரும் சீரழிவை ஏற்படுத்தும் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் சிபிஐ விசாரணை மூலம் வெளியாகி உள்ளன. இந்த ஊழலின் ஆரம்ப புள்ளி, சட்டீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் உள்ள ராவத்புரா சர்க்கார் மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் இருந்து தொடங்குகிறது.

இக்கல்லூரிக்கு ஆய்வுக்காக சென்று லஞ்சம் வாங்கியதாக எழுந்த புகாரில் சிபிஐ விசாரணை நடத்தியது. அதில், சம்மந்தப்பட்ட கல்லூரிக்கு சாதகமான ஆய்வு அறிக்கையை வழங்குவதற்காக ரூ.55 லட்சம் பெற்றதாக 3 என்எம்சி மருத்துவர்கள் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். ஆய்வுக் குழுத் தலைவரின் உதவியாளரிடமிருந்து ரூ.38.38 லட்சத்தையும், மற்றொரு அதிகாரியின் வீட்டிலிருந்து ரூ.16.62 லட்சத்தையும் சிபிஐ மீட்டது. கையும் களவுமாக அதிகாரிகள் பிடிபட்ட நிலையில் இந்த விவகாரம் குறித்து சிபிஐ தீவிரமாக விசாரித்ததில் இது தேசிய ஊழலாக உருவெடுத்தது.

ராவத்புரா சர்க்கார் மருத்துவ கல்லூரியின் தலைவர் ரவிசங்கர் மகாராஜ். சாமியாரான இவர் பல அரசியல் தலைவர்கள் மற்றும் முக்கிய புள்ளிகளுக்கு நெருக்கமானவர். ஏற்கனவே இவர் நடத்தி வரும் ஆசிரமத்தில் பலமுறை பல்வேறு புகார்கள் எழுந்துள்ளன. இதனால் சர்ச்சைக்குரிய இந்த சாமியார், தனது கல்லூரிக்கு என்எம்சியின் ஆய்வு குறித்த தகவல்களை முன்கூட்டியே பெற தனது கல்வி நிறுவனத்தின் இயக்குநர் அதுல் குமார் திவாரிக்கு உத்தரவிட்டுள்ளார். அதன்படி அதுல் குமார் திவாரி, ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் உள்ள கீதாஞ்சலி பல்கலை பதிவாளர் மயூர் ராவலின் உதவியை நாடி உள்ளார்.

ஆய்வு எந்த தேதியில் நடத்தப்படும், யார் வருகிறார்கள், அவர்களின் தேவை என்ன என்பது குறித்த தகவல்களை தர ராவல் ரூ.25 முதல் ரூ.30 லட்சம் வரை கேட்டதாக கூறப்படுகிறது. மேலும், ஆய்வில் தனக்கு சாதகமான அறிக்கை தயார் செய்ய சாமியார் ரவிசங்கர், மும்பை டாடா இன்ஸ்டிடியூட் ஆப் சோஷியல் சயின்சின் வேந்தர் டி.பி.சிங்கை (பல்கலைக்கழக மானிய குழுவின் முன்னாள் தலைவர்) அணுகி உள்ளார். இவர்களின் பெயர்களை சிபிஐ தனது எப்ஐஆரில் சேர்த்துள்ளது. இதுபோல பல கல்லூரிகளில் ஆய்வு குறித்த தகவல்களை முன்கூட்டியே தர மிகப்பெரிய நெட்வொர்க்கே செயல்பட்டுள்ளது.

மேலும், இந்தூரில் உள்ள இன்டெக்ஸ் மருத்துவக் கல்லூரியில் போலி ஆசிரியர்களை நியமித்து, போலி பயோமெட்ரிக் வருகைப் பதிவை உருவாக்கி, அவர்களுக்கு போலி அனுபவச் சான்றிதழ் உருவாக்கி, ஆய்வுக்கு வந்த என்எம்சி அதிகாரிகளை ஏமாற்றி கல்லூரிக்கு அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இவ்வாறு உரிய தகுதி அல்லது உள்கட்டமைப்பு இல்லாமல் என்எம்சி அங்கீகாரத்தை உறுதி செய்ய இந்தியா முழுவதும் உள்ள தனியார் நிறுவனங்களிடமிருந்து ரூ.3 முதல் 5 கோடி வரை வசூலிக்கப்பட்டிருப்பதாக சிபிஐ கூறி உள்ளது. இதற்கு உடந்தையாக ஒன்றிய சுகாதார அமைச்சகத்திலேயே பல உயர் அதிகாரிகள் இருந்துள்ளனர். அவர்களில் 8 பேரை கண்டறிந்து சிபிஐ எப்ஐஆர் பதிவு செய்துள்ளது.

போலி ஆசிரியர்களை அழைத்து வர சிலர் ஏஜென்ட்களாகவும் செயல்பட்டுள்ளனர். இதன்படி, ஆந்திராவின் கதிரியைச் சேர்ந்த ஏஜென்ட் ஹரி பிரசாத், அவரது கூட்டாளிகள் ஐதராபாத்தை சேர்ந்த அங்கம் ராம்பாபு மற்றும் விசாகப்பட்டினத்தை சேர்ந்த கிருஷ்ண கிஷோர் ஆகியோர் என்எம்சி ஆய்வுகளின் போது போலி ஆசிரியர்கள் மற்றும் போலி நோயாளிகளை ஏற்பாடு செய்ததை சிபிஐ கண்டுபிடித்துள்ளது. நாடு தழுவிய இந்த மோசடி மூலம் பல அதிகாரிகள் கோடிக்கணக்கில் ஊழல் செய்துள்ளனர். இவர்களில் 35 பேர் இதுவரை கைதாகி உள்ளனர். இந்த மோசடியின் வேர்கள் இன்னும் வலுவாக பல இடங்களில் பரவியிருக்கலாம் என சிபிஐ சந்தேகித்துள்ளது. இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

* ஹவாலா பணம்

ராவத்புரா சர்க்கார் கல்லூரி விவகாரத்தில் பிடிபட்ட ரூ.55 லட்சம் லஞ்சப் பணம், ஹவாலா மூலம் அதிகாரிகளுக்கு கைமாற்றப்பட்டுள்ளது.

சிபிஐ விசாரணையில் சிக்கிய முக்கிய புள்ளிகள்

இந்த ஊழல் விவகாரத்தில் சிபிஐயின் எப்ஐஆரில் இடம் பெற்றுள்ள முக்கிய புள்ளிகள்:

* ரவி சங்கர் மகராஜ், ராவத்புரா மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர்.

* மயூர் ராவல், கீதாஞ்சலி பல்கலைக்கழக பதிவாளர்.

* டி.பி.சிங், பல்கலைக்கழக மானிய குழுவின் முன்னாள் தலைவர், மும்பை டாடா இன்ஸ்டிடியூட் ஆப் சோஷியல் சயின்சின் வேந்தர்.

* சுரேஷ் சிங் பதோரியா, இந்தூர் இன்டெக்ஸ் மருத்துவ கல்லூரி தலைவர்.

* டாக்டர் சைத்ரா, என்எம்சி ஆய்வுக் குழு உறுப்பினர்

* டாக்டர் ரஜினி ரெட்டி, என்எம்சி ஆய்வுக் குழு உறுப்பினர்

* டாக்டர் அசோக் ஷீல்கே, என்எம்சி ஆய்வுக் குழு உறுப்பினர்

* ஜிது லால் மீனா தேசிய சுகாதார ஆணைய துணை இயக்குநர் மற்றும் டிவிசனல் தலைவர்.

எப்ஐஆரில் இடம் பெற்றுள்ள ஒன்றிய சுகாதார அமைச்சக அதிகாரிகள்: பூனம் மீனா, தரம்வீர், பியூஷ் மல்யன், அனுப் ஜெய்ஸ்வால், ராகுல் வஸ்தவா, தீபக், மனிஷா மற்றும் சந்தன் குமார்.

* மோசடி நடந்தது எப்படி?

லஞ்சம் கொடுத்து ஆய்வு தொடர்பான தகவல்களை முன்கூட்டியே பெற்றதன் மூலம் சம்மந்தப்பட்ட கல்லூரிகள் தங்களுக்கு சாதகமான ஆய்வு அறிக்கைகளைப் பெற உதவியிருக்கிறது. ஆய்வுக்கு வருபவர்கள் யார் என தெரிந்ததால் அவர்களை அணுகி லஞ்சம் கொடுத்துள்ளனர். போதுமான ஆசிரியர்கள் இருப்பதை காட்ட, ஆய்வு நடக்கும் சமயத்தில் மட்டும் போலியான ஆசிரியர்களை நியமித்துள்ளனர். நோயாளிகளை கூட போலியாக செட் செய்துள்ளனர். பொய்யான முறையில் பயோமெட்ரிக் வருகை அமைப்புகளை உருவாக்கி மோசடி செய்திருப்பதாக சிபிஐ எப்ஐஆரில் குறிப்பிடப்பட்டுள்ளது.